விநாயகர் சதுர்த்தி கோலாகலம்: 360 சிலைகள் பிரதிஷ்டை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சதுர்த்தியையொட்டி 360 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன.
காஞ்சிபுரத்தை அடுத்த கூழமந்தலில் கனிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நட்சத்திர விருட்ச விநாயகர். 
காஞ்சிபுரத்தை அடுத்த கூழமந்தலில் கனிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நட்சத்திர விருட்ச விநாயகர். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சதுர்த்தியையொட்டி 360 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றன.
காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 360 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
விழாவையொட்டி அனைத்து பகுதிகளிலும் களிமண்ணால் ஆன சிறிய விநாயகர் சிலைகள், எருக்கம்பூ மாலை, வண்ணக் குடைகள், பூக்கள், ஆப்பிள், விளாம் பழம், பேரிக்காய் உள்ளிட்டவைகள் சாலைகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டன.
ஆனால் திடீர் மழை காரணமாக காலை முதல் விற்பனை மந்தமாக காணப்பட்டது. காலை 10 மணிக்கு மேல் மழை நின்று வானம் தெளிவான பின்னர் மக்கள் வெளியில் வரத் தொடங்கினர். 
பிற்பகலில் பஜார் வீதிகளான செங்கழுநீரோடை வீதி, பேருந்து நிலையம், காமராஜர் சாலை, தேரடி பகுதி ஆகிய இடங்களில் விநாயகர் சதுர்த்தி பொருள்கள் வாங்க பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தில் பகல் 12 மணிக்கு மேல் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதில் காசுமாலை விநாயகர், வினை தீர்த்த விநாயகர், வலம்புரி விநாயகர், வீணை விநாயகர், கற்பக விநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டில்...
செங்கல் பட்டில் விநாயகர் சதுர்த்தி உற்சாகத்துடன் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
செங்கல்பட்டு நத்தம் கைலாசநாதர் கோயில், கோட்டைவாயில் நீதி விநாயகர் கோயில், மேட்டுத் தெரு செங்கழுநீர் விநாயகர் கோயில், நத்தம் சுந்தர விநாயகர் கோயில், அண்ணா நகர் ரத்தின விநாயகர் கோயில், எல்லையம்மன் கோயில், என்ஜிஜிஓ நகர் சித்தி விநாயகர் கோயில், ஜிஎஸ்டி சாலை சார் ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சக்தி விநாயகர் கோயில், பெரியநத்தம் வினைத் தீர்த்த விநாயகர் கோயில் ஆகியவற்றில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. உற்சவர் வீதியுலாவுடன், அன்னதானமும் நடைபெற்றது.
சக்தி விநாயகர் கோயிலில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் செந்தில் குமார், மேலாளர் நரசிம்மன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 
மேலும், மக்கள் தங்கள் வீடுகளில் களிமண்ணாலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். இதனையொட்டி செங்கல்பட்டு நகரில் அண்ணாநகர், ராட்டிணங்கிணறு, அனுமந்தபுத்தேரி, மேட்டுத்தெரு, மார்க்கெட், ராஜாஜி தெரு, மணிகூண்டு என முக்கிய தெருக்களில் மக்கள் கூடும் இடங்களில் கணிமண்ணால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் சிலைகள் விற்பனையில் குயவர்கள் மற்றும் கலைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். களிமண்ணினால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் சிலைகள் ரூ. 40 முதல் 
ரூ. 200 வரை விற்கப்பட்டன. இந்துமுன்னணி, இந்துமக்கள் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் தெருக்களில் முக்கிய இடங்களில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. 
மாமல்லபுரத்தில்...
மாமல்லபுரத்தில் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றன.
இந்துமுன்னணி, இந்துமக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் முக்கிய வீதிகளில் 7அடியில் இருந்து 12 அடி வரை விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 
மதுராந்தகத்தில்...
மதுராந்தகத்தை அடுத்த படாளம்-வேடந்தாங்கல் கூட்டுச் சாலையில் அம்ருதபுரி ஸ்ரீ ராமானுஜ யோகவனம் உள்ளது. 
இங்கு நவக்கிரகங்களை உள்ளடக்கிய விநாயகர் சந்நிதி உள்ளது. இங்கு சதுர்த்தியை முன்னிட்டு நவக்கிரக விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 
வெள்ளி கவசத்தாலும், துளசி மலர்மாலைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
விழாவில் சென்னை ஸ்ரீநிவாச நிகேதன் பீடாதிபதி சீத்தாராம ஸ்வாமி, தாரா மாதாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுளை சென்னை ஸ்ரீநிவாச நிகேதன் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com