காரைக்கால் தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழா: திரளானோர் பங்கேற்பு

காரைக்காலில் உள்ள தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழாவையொட்டி கண்ணாடி அலங்கார ரதத்துடன் ஊர்வலம் நடத்தப்பட்டு, ஷெய்னுல்லாஹ் குதிரை கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கொடியேற்றத்தையொட்டி பள்ளிவாசலில் இருந்து வீதியுலா புறப்பட்ட கண்ணாடி ரதம்.
கொடியேற்றத்தையொட்டி பள்ளிவாசலில் இருந்து வீதியுலா புறப்பட்ட கண்ணாடி ரதம்.

காரைக்காலில் உள்ள தாயிராப் பள்ளிவாசல் கந்தூரி விழாவையொட்டி கண்ணாடி அலங்கார ரதத்துடன் ஊர்வலம் நடத்தப்பட்டு, ஷெய்னுல்லாஹ் குதிரை கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மெய்தீன் பள்ளி வீதியில், புகழ்பெற்ற தாயிராப் பள்ளிவாசல் உள்ளது. நபிகள் நாயகத்தின் வழித்தோன்றல்களில் ஒருவரான ஹலரத் சுல்தானுல் ஆரிபின் செய்யது அஹ்மதுல் கபீர் ரிஃபாயி என்பவர், பாக்தாத் நகரில் உயிர் துறந்தார். இவரது நினைவாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தாயிராப்பள்ளி கட்டி அங்கு நினைவிடம் அமைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
பிரெஞ்சு நிர்வாகத்தின் கொடை பெற்ற வரலாறு:
பிரெஞ்சு நிர்வாகத்தின்போது காரைக்கால் நிர்வாகி அலுவலகத்துக்கு நேர் பின்புறம் தாயிராப் பள்ளிவாசல் அமைந்திருந்தது. இப்பள்ளியில் தினமும் தப்ஸ் இசைப்பது வாடிக்கை. இரவு நேரத்தில் காரைக்கால் நிர்வாகியான பிரெஞ்சுக்காரர் உறங்கும்போது தப்ஸ் இசை வெகு பாதிப்பை ஏற்படுத்தியதாம். தமது பணியாளர்களை அனுப்பி தப்ஸ் இசைக்கக் கூடாது என நிறுத்தச் சொல்லியுள்ளார். இவர்களும், நிர்வாகியின் உத்தரவை அப்படியே செய்துள்ளனர். பின்னர் ஒருநாள் தப்ஸ் இசை சப்தம் கேட்டதால் ஆத்திரமடைந்த நிர்வாகி, பணியாளர்களை அனுப்பி நிறுத்துமாறு எச்சரித்து வரச் செய்தாராம். பணியாளர்கள் அங்கு சென்றபோது தப்ஸ் இசைக் குழுவினர் யாருமே இல்லாத நிலையில் இசை மட்டும் வந்துகொண்டிருந்ததாம். இதையறிந்த நிர்வாகி, தாமே நேரில் சென்று பார்த்து மகிமையை உணர்ந்தாராம். இதைத் தொடர்ந்து, பிரெஞ்சு நிர்வாகம் வருடாந்திர கந்தூரி விழாவுக்கு கொடை கொடுக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இதையொட்டி தாயிராப் பள்ளியில் முக்கிய நாள்களில் தப்ஸ் இசைக்கப்பட்டுவருகிறது. இவ்வகை சிறப்பு பெற்ற பள்ளிவாசலில் கந்தூரி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் அஞ்சுமான் இஸ்லாமிய சங்கத்திலிருந்து சந்தனக் குட ஊர்வலம் புறப்பட்டு வீதியுலா சென்றுவிட்டு, திங்கள்கிழமை அதிகாலை ரவூலா ஷரீபிற்கு சந்தனம் பூசப்பட்டது.
முக்கிய நிகழ்ச்சியாக, திங்கள்கிழமை மாலை ஷெய்னுல்லாஹ் குதிரை கொடி, ரதங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, இரவு திரளான மக்கள் முன்னிலையில் ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com