திருமலையில் ஆனி வார ஆஸ்தான உற்சவம்: புஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி

ஏழுமலையானுக்கு தேவஸ்தான ஆண்டு வரவு}செலவு கணக்குகளைச் சமர்ப்பிக்கும் உற்சவமான ஆனி வார ஆஸ்தானம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
திருமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  புஷ்ப பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்த உற்சவ மூர்த்திகள்.
திருமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புஷ்ப பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்த உற்சவ மூர்த்திகள்.

ஏழுமலையானுக்கு தேவஸ்தான ஆண்டு வரவு}செலவு கணக்குகளைச் சமர்ப்பிக்கும் உற்சவமான ஆனி வார ஆஸ்தானம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி மாலையில் அலங்கார புஷ்ப பல்லக்கில் உற்சவர் மலையப்ப சுவாமி பவனி வந்து அருள்பாலித்தார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு நியமிக்கப்படுவதற்கு முன்பாக, கோயில் ஆண்டு கணக்கு வழக்குகள் அனைத்தும் ஆனி மாத இறுதி நாளன்று ஏழுமலையான் சந்நிதி முன் சமர்ப்பிக்கப்படுவது வாடிக்கை.
ஆடி மாத முதல் நாளன்று புதிய கணக்கு தொடங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறைகள் வைணவ மகா குரு ராமானுஜர் வகுத்ததாகும். ஆந்திர அரசு சார்பில் தேவஸ்தான அறங்காவலர் குழு நியமிக்கப்பட்ட பின்னர், மார்ச் } ஏப்ரல் மாதங்களில் தேவஸ்தான ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி ஆனி மாத இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற்றது.
இதற்காக காலை 7 மணியிலிருந்து 9 மணிக்குள் ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி தன் உபய நாச்சியார்களுடன் தங்க வாசல் அருகில் கருடாழ்வார் சந்நிதிக்கு எதிரே சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளினார்.
அவருக்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை செய்தனர். அதன் பின்னர் பெரிய ஜீயர் சடகோப ராமானுஜர் 6 பட்டு வஸ்திரங்களை ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார். அதில் 4 ஏழுமலையானுக்கும், ஒன்று உற்சவர் மலையப்ப சுவாமிக்கும், மற்றொன்று விஷ்வக்சேனருக்கும் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் ஆண்டு வரவு, செலவு கணக்குகள், சாவிகள் உள்ளிட்டவற்றை சமர்ப்பித்தார்.
அர்ச்சகர்கள் அவற்றை பெற்று ஏழுமலையான் பாதத்தில் வைத்தனர். பின்னர் புதிய கணக்குகள் தொடங்கும் புத்தகம், கஜானா சாவி உள்ளிட்டவற்றை ஏழுமலையான் பாதத்திலிருந்து எடுத்து அர்ச்சகர்கள் செயல் அதிகாரி அனில்குமார் சிங்காலிடம் அளித்தனர்.

ஸ்ரீரங்கத்திலிருந்து பட்டு வஸ்திரங்கள்

ஏழுமலையானுக்கு ஆனிவார ஆஸ்தானத்தின் போது ஸ்ரீரங்கம் கோயில் சார்பில் 6 பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஸ்ரீரங்கம் கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் இணைந்து மாடவீதியில் ஊர்வலமாக வந்து ஏழுமலையான் கோயிலுக்குள் பெரிய ஜீயர் சடகோப ராமானுஜரிடம் பட்டு வஸ்திரங்களை அளித்தனர். அவற்றை பெற்றுக் கொண்ட பெரிய ஜீயர் ஆனிவார ஆஸ்தானம் தொடங்குவதற்கு முன்பாக ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தார்.
புஷ்ப பல்லக்கு
இதையொட்டி, திருமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை புஷ்ப பல்லக்கில் உற்சவர் மலையப்ப சுவாமி தன் உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியருடன் புஷ்ப பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com