திருமலையில் திவ்யதரிசன டோக்கன் பெறுவதில் பக்தர்களிடையே போட்டாபோட்டி

திருமலையில் திவ்யதரிசன டோக்கன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
திருமலையில் திவ்யதரிசன டோக்கன் பெறுவதில் பக்தர்களிடையே போட்டாபோட்டி

திருமலையில் திவ்யதரிசன டோக்கன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், டோக்கன்களை முந்தியடித்து வாங்க வேண்டும் என்பதற்காக  பக்தர்கள் போட்டியிட்டு வருகின்றனர்.

திருமலையில் திங்கள்கிழமை முதல் திவ்யதரிசன டோக்கன் வழங்குவதில் தேவஸ்தானம் புதிய முறையை அமல்படுத்தியது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணி முதல் அலிபிரி நடைபாதை தொடங்கும் இடத்தில் முதல்படி அருகில் திவ்யதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதனை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச் சென்றனர். அவர்கள் காளிகோபுரத்துக்கு செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகும். அங்கு சென்ற பிறகு 12.05 மணிக்கு அவர்களின் டோக்கனில் தரிசன நேரம், இலவச லட்டுக்கான முத்திரைகள் இடப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை இரவு டோக்கன் பெற்றவர்களுக்கு திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தரிசன நேரம் ஒதுக்கப்பட்டது. அதனால் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு பக்தர்கள் திவ்ய தரிசன காத்திருப்பு அறைக்கு சென்றால், அவர்கள் இரண்டரை மணி நேரத்துக்குள் ஏழுமலையானை தரிசித்து திரும்ப முடியும். நடைபாதை மார்க்கத்தில் தேவஸ்தானம் 20 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே வழங்குவதால், பக்தர்கள் முன்கூட்டியே வந்து அலிபிரி திவ்ய தரிசன கவுன்ட்டர்களில் காத்திருந்து, போட்டி போட்டு டோக்கன்களை பெற்றனர்.

இதேபோல் ஸ்ரீவாரி மெட்டு மார்க்கத்திலும் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் திவ்ய தரிசன கவுன்ட்டர்களில் டோக்கன் வழங்கும் முறை தொடங்கியது. அலிபிரி மார்க்கத்தில் 14 ஆயிரம் டோக்கன்களும், ஸ்ரீவாரிமெட்டு மார்க்கத்தில் 6 ஆயிரம் டோக்கன்களும் என 20 ஆயிரம் திவ்ய தரிசன டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. 20 ஆயிரம் டோக்கன்கள் முடிந்த பின்னர், நடைபாதை மார்க்கத்தில் வரும் பக்தர்கள் தர்ம தரிசனத்தில் மட்டுமே ஏழுமலையானைத் தரிசிக்க முடியும். திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே இந்த டோக்கன்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com