டிச.2-இல் கார்த்திகை தீபத் திருவிழா: மலை மீது ஏற, கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்கத் தடை

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் மகா தீபம் ஏற்றும் மலை மீது ஏறிச் செல்ல பக்தர்களுக்கு தடை
டிச.2-இல் கார்த்திகை தீபத் திருவிழா: மலை மீது ஏற, கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்கத் தடை

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் மகா தீபம் ஏற்றும் மலை மீது ஏறிச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், கிரிவலப் பாதையில் அன்ன தானம் வழங்கத் தடை விதிக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, கோயில் இணை ஆணையர் இரா.ஜெகந்நாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ரவாளி பிரியா, மா.ரங்கராஜன், கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்குப் பிறகு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம், அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம், காவல் துறை, நகராட்சி உள்பட அனைத்துத் துறைகள் மூலம் ரூ.7.5 கோடி செலவில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒவ்வொரு துறைகளுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவண்ணாமலைக்கு வரும் வெளி மாவட்டச் சாலைகள் சீரமைக்கப்படும். தீபத் திருவிழாவுக்காக 16 தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும்.
9 தாற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதை சாலையை இணைக்கும் இடங்களுக்கு தொடர் பேருந்துகள் இயக்கப்படும். வனத் துறை சார்பில் 300 பேர், காவல் துறை சார்பில் 9,400 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
கிரிவலப் பாதையில் அன்ன தானம் வழங்கத் தடை: கிரிவலப்பாதை, சாலைகளில் அன்ன தானம் வழங்க அனுமதி கிடையாது. அன்ன தானம் வழங்க 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் மட்டுமே பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்க அனுமதி அளிக்கப்படும். பல இடங்களில் அன்ன தானம் சாலையில் கொட்டப்பட்டு 40 சதவீத உணவு வீணாகிறது. கிரிவலம் வரும் பக்தர்கள் அதன் மீது நடக்கும் சூழ்நிலை உள்ளதால் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மலை மீது ஏறத் தடை: இதேபோல, மகா தீபம் ஏற்றும் மலை மீது பக்தர்கள் ஏற தடை விதிக்கப்படுகிறது. மலை மீது ஏறிச் செல்ல பயன்படும் 9 பாதைகளும் அடைக்கப்படும். வயதானவர்கள் மலை ஏறுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. பக்தர்களின் பாதுகாப்பு கருதியும், மனித உயிரிழப்பைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய செயலி உருவாக்கம்: இந்த ஆண்டு தீபத் திருவிழா தொடர்பான புதிய செயலி (மொபைல் ஆப்) உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் தீபத் திருவிழா தொடர்பான அனைத்துத் தகவல்களும் இடம் பெற்றிருக்கும் என்றார்.
கூட்டத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பா.ஜானதி, நகராட்சி ஆணையர் செ.பாரிஜாதம், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் பழனி, குணசேகரன் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
முன்னதாக, திருவண்ணாமலை நகரில் தீபத் திருவிழாவுக்காக அமைக்கப்படும் தாற்காலிகப் பேருந்து நிலையப் பகுதிகளை ஆட்சியர் கே.எஸ்.கந்தாசமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com