மயூரநாதர் கோயிலில் துலா உற்சவ கொடியேற்றம்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயில் துலா உற்சவ பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கொடியேற்றம் (மகாத்துவஜா ரோகணம்)
மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்
மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயில் துலா உற்சவ பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கொடியேற்றம் (மகாத்துவஜா ரோகணம்) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான கோயில்களில் ஒன்றான மயிலாடுதுறை அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் (துலா மாதம்) துலா உற்சவம் எனும் ஐதீக விழா நடைபெறுவது வழக்கம்.
இவ்விழா நாளில் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகள் எல்லாம் மயிலாடுதுறைக்கு வந்து துலாக்கட்ட காவிரியில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக்கொண்டதாக தலபுராண வரலாறு. இவ்விழா நடைபெறும் துலாக்கட்ட காவிரியில் பக்தர்கள் அதிக அளவில் வந்து புனித நீராடி மயூரநாதரை வழிபடுவர்.
நிகழாண்டுக்கான இவ்விழா, திருவாவடுதுறை ஆதீனம் 24 -ஆவது குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் அருளாசியுடன் ஐப்பசி மாதம் 1 -இல் (அக். 18) துலா மாதப் பிறப்புத் தீர்த்தவாரியுடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து, நாள்தோறும் அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேக ஆராதனைகளும், சுவாமி அம்பாள் புறப்பாடும், துலாக்கட்ட காவிரியில் தீர்த்தம் கொடுத்தருளும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றன.
மகாத்துவஜா ரோகணம்... இதன் தொடர்ச்சியாக, துலா உற்சவப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதைமுன்னிட்டு, கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேக ஆராதனைகளும், சுவாமி, அம்பாள் புறப்பாடும் நடைபெற்றன.
தொடர்ந்து, மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை முதல்வர் ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் மாணவர்கள் வேத மந்திரங்கள் படிக்க, கோயிலின் நான்கு திசைகள் மற்றும் நந்தி மண்டபம் ஆகிய 5 இடங்களில் உள்ள கொடி மரங்களில், சிவனுடைய வாகனமாகிய ரிஷபம் வரையப்பட்டிருந்த திருக்கொடிகள் ஏற்றப்பட்டன. காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்நிகழ்ச்சிகள் மதியம் 12 மணி அளவில் நிறைவுப் பெற்றன.
நிகழ்ச்சியில், திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், கோயில் கண்காணிப்பாளர் எஸ். குருமூர்த்தி, துணைக் கண்காணிப்பாளர்கள் கணேசன், ராஜேஷ் மற்றும் திருக்கோயில் சிவாச்சாரியார்கள், பணியாளர்கள், உபயதாரர்கள், பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகள் செய்தனர்.
நவ.16 -இல் கடைமுகத் தீர்த்தவாரி... துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளான சகோபுரம் தரிசனம், மயிலம்மன் பூஜை (நவ. 11), திருக்கல்யாணம் (நவ. 13), தேரோட்டம் (நவ. 15) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. தொடர்ந்து நவ. 16 -ஆம் தேதி கடைமுகத் தீர்த்தவாரியும், 17-ஆம் தேதி முடவன் முழுக்கும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com