கொடியேற்றத்துடன் தொடங்கியது அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக - ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர், கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஸ்ரீவிநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம்: இதைத் தொடர்ந்து, கோயில் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களை உச்சரித்தபடியே தங்கக் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். அதிகாலை 4 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் துலா லக்னத்தில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் மூலவர் சன்னதிக்கு எதிரே உள்ள 73 அடி உயர தங்கக் கொடிமரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்: தீபத் திருவிழா கொடியேற்றத்தைக் காண அதிகாலை 3 மணி முதலே திரளான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்தனர்.
அமைச்சர் பங்கேற்பு: விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (பொ) பகலவன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ரவாளி பிரியா, மா.ரங்கராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, கோயில் இணை ஆணையர் இரா.ஜெகந்நாதன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, நடிகர் மயில்சாமி, தெற்கு மாவட்ட அதிமுக செயலர் பெருமாள் நகர் கே.ராஜன், கோட்ட பாஜக அமைப்புச் செயலர் டி.எஸ்.குணசேகரன் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேரோட்டம்: நவம்பர் 29-இல் தேரோட்டமும் டிசம்பர் 2-இல் மகா தீபமும் நடைபெறுகிறது. தீபத் திருவிழாவின் 7-ஆம் நாளான நவம்பர் 29-ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம் தொடங்குகிறது. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகர், ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் என 5 தேர்களும் (பஞ்ச ரதங்கள்) ஒன்றன் பின் ஒன்றாக மாட வீதிகளை வலம் வந்து, இரவில் மீண்டும் நிலைக்கு வந்தடையும்.
விழாவின் 10-ஆம் நாளான டிசம்பர் 2-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலையில் மகா தீபமும் ஏற்றப்படும்.
டிசம்பர் 3, 4, 5-ஆம் தேதிகளில் அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com