பழனியில் காப்புக்கட்டுடன் விழா தொடக்கம்: அக்.25-இல் சூரசம்ஹாரம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை மதியம் உச்சிக் காலத்தின் போது விநாயகர், தண்டாயுதபாணி சுவாமிக்கு காப்புக்கட்டுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை கந்த சஷ்டி  விழாவையொட்டி துவாரபாலகருக்கு நடைபெற்ற காப்புக்கட்டும் நிகழ்ச்சி.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை கந்த சஷ்டி  விழாவையொட்டி துவாரபாலகருக்கு நடைபெற்ற காப்புக்கட்டும் நிகழ்ச்சி.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை மதியம் உச்சிக் காலத்தின் போது விநாயகர், தண்டாயுதபாணி சுவாமிக்கு காப்புக்கட்டுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது.
நிகழ்ச்சியில் மூலவரைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகர், துவாரபாலகர், மயில்வாகனம், கொடிக்கம்பம், நவவீரர்கள் என அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் காப்புக் கட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி சஷ்டி விரதத்தை தொடங்கினர். ஏழு நாள்கள் நடைபெறும் விழாவின் போது மலைக்கோயிலில் தினமும் கோயில் யானை கஸ்தூரி சகிதம் சின்னக்குமாரசுவாமி புறப்பாடு, யாகசாலைபூஜை, சண்முகர்பூஜை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் அக்.25 ஆம் தேதி நடக்கிறது. அன்று மதியம் உச்சிக்கால பூஜையைத் தொடர்ந்து சாயரட்சை நடத்தப்பட்டு பிற்பகல் 2.30 மணிக்கு சக்திவேல் வாங்கிய பின்னர் நடை அடைக்கப்படும். இதனால் அன்று தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு நான்கு கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. அப்போது நான்கு கிரிவீதிகளில் நான்கு சூரர்கள் தனித்தனியே வதம் செய்யப்படுவது சிறப்பம்சமாகும். வரும் அக். 26 ஆம் தேதி மலைக்கோயிலில் வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகருக்கு திருக்கல்யாணமும், திருமணவிருந்தும் நடத்தப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.
காப்புக்கட்டு நிகழ்ச்சியில் பழனிக் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) மேனகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com