காஞ்சிபுரத்தில் நவராத்திரி விழா கோலாகலம்

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது. 
காஞ்சிபுரத்தில் நவராத்திரி விழா கோலாகலம்

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது. 
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் சாரதா நவராத்திரி கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை, நாள்தோறும் சங்கரமடம் மகா பெரியவர் பிருந்தாவனத்தில் மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், காமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி கொலு மண்டபத்தில் 7.30 மணி முதல் 10 மணி வரையிலும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த இசை நிகழ்ச்சிகளில் காஞ்சி சங்கர மடம் ஆஸ்தான வித்வான்கள், பிரபல சங்கீத கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். அதுபோல், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள படவேட்டம்மன் கோயிலில் 39-ஆவது ஆண்டு நவராத்திரி அலங்காரப் பெருவிழா தொடங்கியுள்ளது. இதில் நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் படவேட்டம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலிக்கவுள்ளார். அதன்படி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற அலங்காரத்தில் அம்பாள் முத்து அலங்காரத்தில் காட்சி அளித்தார். 
காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் மாடவீதியில் அமைந்துள்ள ஸ்ரீயதுகுலவேணுகோபால பஜனை மண்டலத்தில் கண்ணன் அவதார உற்சவம் நடைபெற்று வருகிறது. இதில் விஸ்வரூப அலங்காரத்தில் கண்ணன் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் டி.கே.நம்பி தெருவில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக மக்கள் நன்மைக்காகவும் , ஆரோக்கியம் வேண்டியும் வெள்ளிக்கிழமை அகன்ற தீப வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
செங்கல்பட்டில்...
செங்கல்பட்டில் பல்வேறு அமைப்புகள் சார்பில், காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயில், பெரியநத்தம் ஓசூரம்மன்கோயில், மதுரைவீரன்கோயில், அனுமந்தபுத்தேரி செல்வகணபதி கோயில், மேட்டுத்தெரு திரெளபதி அம்மன் கோயில், புதுஏரி செல்வவிநாயகர் முத்துமாரிம்மன்கோயில், ஜீவானந்தம் தெரு அங்காளம்மன் கோயில், அண்ணாசாலை பழைய அங்காளம்மன் கோயில் , அண்ணாசாலை முத்துமாரியம்மன் கோயில், அண்ணாநகர் ரத்தினவிநாயகர் கோயில், எல்லையம்மன் கோயில், என்ஜிஜிஓ நகர் வரசித்தி விநாயகர் கோயில், செங்கல்பட்டு ரயில்வே காலனி முத்துமாரியம்மன் கோயில் ஆகியவற்றில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. விழாவின் நிறைவில் தசரா ஊர்வலம் நடைபெறுகிறது.
திருத்தணியில்...
திருத்தணி முருகன், மத்தூர் மகிஷாசுர மர்த்தினி அம்மன் கோயில்களில் வியாழக்கிழமை இரவு நவராத்திரி விழா தொடங்கியது.
நவராத்திரியையொட்டி, திருத்தணி முருகன் மலைக்கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜை நடைபெற்றது. 
பின்னர், உற்சவர் கஜலட்சுமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில், அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
கோயில் தக்கார் வே. ஜெய்சங்கர் நவராத்திரி விழாவை தொடங்கி வைத்தார். 21-ஆம் தேதி முதல் வரும் 30-ஆம் தேதி வரை தினமும் மாலை, 6.30 மணிக்கு உற்சவர் கஜலட்சுமி அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதேபோல் மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயிலிலும், வியாழக்கிழமை இரவு நவராத்திரி விழா தொடங்கியது. 
இதையொட்டி, கோயில் வளாகத்தில் கொலு அமைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. 
வரும் 30-ஆம் தேதி வரை தினமும் மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, இசை கச்சேரி, பரத நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 
விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி, கோயில் தாக்கார் வே.ஜெயசங்கர், கோயில் அலுவலர்கள் 
செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com