காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-5

காசிக் கிணற்றுத் தீர்த்ததை பற்றி விரிவாகப் பார்த்தோம். இப்போது அம்பிகையின் அருள்கடாட்சத்தை பற்றிப் பார்ப்போம். 
காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-5


காசிக் கிணற்றுத் தீர்த்ததை பற்றி விரிவாகப் பார்த்தோம். இப்போது அம்பிகையின் அருள்கோலத்தை பற்றிப் பார்ப்போம். 

அம்மனின் அருள் கோலம்

அம்மன் சந்நிதியின் வலப்புறத்தில் வல்லப கணபதி இருக்கிறார். இவரை முதலில், கைதொழுது வணங்கிக் கொள்ளுதல் நலம். விநாயகரின் இடப்பக்கத்திலும் முருகன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்து, அம்மன் சந்நிதிக்கு நுழைவு வாயில் அமைந்திருந்தது. அப்போது அம்மன் சந்நிதிக்கு முன்பாக, கல்தரையில் இரண்டு கற்பாளங்களில், பராக்கிரம பாண்டியனும் அவனுடைய தேவியும் அம்பிகையை நோக்கியபடி கீழேவிழுந்து இருகரங்களையும் கூப்பி வணங்கும் முறையுடன் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. 

அம்பிகையை வணங்கச் செல்லும் அடியார்களின் திருவடிகள் "எங்கள் முடிமேல் படட்டும்" என்ற சிந்தனையோடு பராக்கிரமப் பாண்டியன் செதுக்கி வைத்திருந்தான். அடியார்களுக்கெல்லாம் அடியனாகிய என்னையும் ஆட்கொண்ட அன்னையின் திருவடிகளே சரணம் என்ற முறையில் மன்னனும் தேவியும் விழுந்து வணங்கும் வண்ணம் காட்சி அது.

(இன்று இவ்வாலயத் தரையில், கீழே விழுந்து வணங்கும் பாண்டியன் சிலை மட்டுமே உள்ளது. தேவியின் சிலை இல்லை. காரணம் தெரியவில்லை.) மேலும் சிற்பத்தில் "உலகமுழுதுடையாள் உலகம்மனாலயம்" எனப் பொறிக்கப்பட்டிருப்பதை இன்று போனாலும் காணலாம். நெஞ்சம் நெகிழும் இச்சிற்பக் காட்சியைக் கண்டு தொடர்ந்து சென்று அம்மையின் முன் வந்து நின்றோமானால், அங்கே அம்மை, அழகே வடிவெடுத்து உலகம்மனாக அருள்காட்சியைக் அருளியவண்ணமிருப்பாள். எவ்வுலகையும் எவ்வுயிரையும் ஈன்றெடுத்தும் எழில் அழியா செவ்வியலாக காட்சிதரும் அம்மையைக்காணக் கண்கள் ஆயிரம் பத்தாது. அவள் புகழைப் பாட நாவுகள் எவ்வளவு பாடினாலும் முழுமை அடையா!. அருள் பொழியும் திருவருள் முகம் அது. குங்குமம் இழைந்தோடிய நெற்றி! கருணைகடாட்சமான கண்கள். கூர்மையான மூக்கில் அணிகலன். குங்கலத்துடன் தொங்கிய காதுகள். அபயம் தந்திடும் திருக்கரங்கள்.

வலக்கையில் தாமரை, என் திருவடி அடைந்தார்க்கு சரணம் எனக்காட்டும் இடக்கை. இடக்காலை வளைத்துத் நிற்கும் அழகு, பத்மபீடம், மங்களகரத்துடன் ஜொலிக்கும் வளையல்கள், போன்ற இவையனைத்து அம்சங்களோடு காணப்பெறும் அம்மை, உங்கள் நெஞ்சையெல்லாம் நெகிழ்விப்பாள் உலகம்மை.

"முருகு லுக்கு குழலாளை சிந்தும் நல்னுதலாளை முதுமீனோக்கால்"
"கரு ஓங்கி குடிதழைய அருள் சுரந்து மடைதிறந்த கண்ணினாளை"
"உரு ஓங்கு களப மணி முலையாளை கொடியிடைப்பட்டு உடையாளை"
"மரு ஓங்கு பதத்தாளை தென்காசி உலகாளை மனத்துள் வைப்போம்"

என்று திருச்சிற்றம்பல கவிராயர் அம்மையைப் பாடிப் பரவுகின்றார்.

உலகம்மை தல அருமை

மிகவும் பழங்காலத்தில் தென்காசி செண்பக வனமாக இருந்து வந்தன. தென்காசிக்கு அருகிலுள்ள விந்தன் கோட்டையிலிருந்து குலசேகரப் பாண்டியன், செண்பக வனத்துக்குள் இருந்த காசி விசுவநாதரை வழிபட்டு வந்தான். நெடுங்காலமாக இவனுக்குப் பிள்ளைப் பேறு இல்லாமலிருந்தான். ஆகவே மன்னன் காசிவிசுவநாதரை கசிந்துருகி வேண்டினான். 

வேண்டுதலுக்கு ஏற்ப உலகம்மையே அவனுக்கு மகளாகப் பிறந்தாள். அவளுக்குக் குழல்வாய் மொழி என்ற பெயரைச் சூட்டி வளர்த்து வந்தான். வளர்ந்து வந்த இத்திருமகளையே காசிவிசுவநாதர் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட இடம் "குலசேகரநாதர் கோயில்." குலசேகர நாதனுக்கு உலகநாதபாண்டியன் என்ற பெயரும் உண்டு. 

உலகநாதப் பாண்டியனின் பேரனே பராக்கிரம பாண்டியன் ஆவான். இவன் காசிவிசுவநாதரை காசிக்குச் சென்று ககனக் குளிகை மகிமையால் நாள்தோறும் வடகாசிக்கு வான்வெளியில் பறந்து மிதந்து சென்று வழிபட்டு வந்தவனாவான். இறைவனோ, உன் மூதையார் வழிபட்ட சிவலிங்கம் செண்பக வனத்தில் இருக்கிறதென்றும், அவ்விடத்தின் வழியைக் கட்டெறும்புகள் உனக்குக் காட்டுமென்றும் கூறினான். ஆதலால் அவ்விடத்தை சென்றறிந்த பாண்டியன் ஆலயத்தை எழுப்பினான்.

பாண்டியனின் மகளாகப் பிறந்த உலகம்மை இன்று பாருக்கெல்லாம் தாயாக நின்று அருள்பாலிக்கிறாள். உலகம்மையை வணங்கி பிரகாரம் வந்தால், கன்னி விநாயகரும், முருகப் பெருமானும் வணங்கிக் கொள்ள முடியும். அம்மனின் சந்நிதிக்கு இடப்புறமாய் சேவைகள் மண்டபம் சிறியதாகவும் அழகானதாகவும் அமைந்துள்ளன. இங்கு கூட, பராக்கிரம பாண்டியனும், அவனது மனைவியும் முருகப்பெருமானை வணங்கி நிற்கும் கோலத்தான் சிற்பங்களாக இருக்கின்றன. அம்மன் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தை நாம் சுற்றி வரும் போது, பல்வேறு கல்வெட்டுக்களைக் காணப்பெறலாம்.

தென்காசி காசிவிசுவநாதர் திருக்கோயிலில் அம்மன் சந்நிதிக்கும், சுவாமி சந்நிதிக்கும் நடுநாயகமாய் பாலமுருகன் சந்நிதி இருக்கிறது. ஆலயத் தொழுகையில் சுவாமி, அம்பாளை வணங்கிவிட்டு வரும்போது, முருகனை வணங்கிய பிறகு சிறிது ஓய்வெடுப்பதற்காக இங்குப் பக்கத்திலிருந்த திண்ணையின் மீது அமர்கிறார்கள். அப்படி அமர்ந்திருந்தவர்கள் இந்தப் பாலமுருகன் சந்நிதி முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னதாக, "பொருந்தி நின்ற பெருமாள்" என்ற சந்நிதியாக இருந்தன எனக் கூறினர்.

பராக்கிரம பாண்டியனுக்குப் பின்னர், தென்காசியில் அரசாட்சி செய்து வந்த மன்னர்கள் திறமையின்மை அற்றவர்களாக இருந்து வந்தனர். இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திய முகமதியர்கள், ஆட்சியை தன்வசப்படுத்திக் கொண்டனர். பின், அச்சுத களப்பாளன் என்ற கன்னட தேசத்து அரசன், முகமதியர்களை எதிர்த்து போரிட்டு வென்று தென்காசியை கைப்பற்றி விட்டனர்.

அந்த அச்சுத களப்பாளன், தான் வென்றெடுத்த தென்காசி நகரை பராக்கிரம பாண்டியனின் வழியினருக்கு மீண்டும் கொடுத்து அரசாளச் செய்வித்து விட்டான். இதற்கு நன்றிக் கடனாக பாண்டியன் தன் மகளை அச்சுத காளப்பனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டான். அந்தச் சமயத்தில், அச்சுத களப்பாளன் "பொருந்தி நின்ற பெருமாளுக்கு" இங்கு சந்நிதி எழுப்பிவித்து விட்டான். அதன்பின், இருநூறு ஆண்டுகள் கழித்து, தென்காசியை ஆண்ட பாண்டியர்கள், "பொருந்தி நின்றபெருமாளை" சிற்றாற்றங்கரையில் தனிக்கோயிலாக எழுப்பி அங்கே எழுந்தருளச் செய்தும் விட்டனர்.

அதன்பின், பொருந்தி நின்ற பெருமாள் இருந்த சந்நிதி பல ஆண்டுகளாக நெல் சேமித்து வைக்கும் நெல்சேராக இருந்து வந்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தேழாம் ஆண்டில், பொருந்தி நின்ற பெருமாள் இருந்த இடத்தில் பாலமுருகனை எழுந்தருளச் செய்தனர். பாலமுருகன் சந்நிதியிலும் கலை நுணுக்கம் பொதிந்த சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு யாவரும் பிரமித்துப் போவார்கள். மேலும் இங்குப் பஞ்ச பாண்டவர்கள் சிலைகள், கர்ணன் சிலை போன்றவைகள் மிக மிக நுணுக்க நுட்பத்தன்மையுடன் செதுக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும்.

தரணி பீடம்

பாலமுருகனை வணங்கியபின், திருச்சுற்று மதிலை சுற்றி வலம் வரலாம். அவ்வலத்தில், வடக்குப் பகுதியில் ஈசானத்தில் அழகுடன் கூடிய சிறிய மண்டபம் அமைந்திருக்கும். இம்மண்டபத்தின் கல்தூண் ஒன்றில், பராக்கிரம பாண்டியனின் உருவ வடிவம் அருமையாகச் செதுக்கப்பட்டு, அவர் நெஞ்சு நிமிர்த்தி நிற்கிறார். கூப்பிய கரங்களுடன் உடைவாளைத் தாங்கி, ஒதுங்கி நிற்கும் இப்பாண்டியனின் வடிவம் நம் மனதைக் கவரும்.

ஓங்கி உயர்ந்த நிலை மாடத்தையும், உயர்ந்த கோபுரத்தையும் அமைத்த இப்பாண்டிய மன்னன், தான் விலகி நின்று இறைவனை வணங்குவது போல, உள்ளதைக் 

காணும்போது, நம் இதயம் நெகிழும். அதன்பின்பு, வடக்குச் சுற்றில் வலம் செல்கையில், சகஸ்கரலிங்கத்தை இம்மன்னன் நிறுவிவிட்டுயிருந்தான். ஆயிரத்தெட்டு லிங்கங்களை ஒருங்கே வணங்க வேண்டும் என்பன உணர்வோடு, லிங்கத்தை அமைத்தான் போலும்..........ஆயிரம் சிறிய சிறிய லிங்கங்களை அமைத்து, அதைப் பெரிய லிங்கத்தில் கூட்டுவித்து, சகஸ்கரலிங்கம் அமைக்கப் பெற்றுள்ளது. இந்த லிங்கத்தை வணங்குவோர் ஆயிரத்தெட்டு லிங்கங்களை வணங்கிய பலன்களைப் பெறும் அமைப்பாம் இது.

சகஸ்கரலிங்கத்தை அடுத்து சக்தியின் தரணி பீடம் அமைந்திருக்கிறது. உலகிற்கெல்லாம் தாயான உலக நாயகியான அம்பிகை, தரணி பீடத்தில் எந்திர சொருபமாகக் காட்சி தருகிறார். குற்றாலத்தில் "பராசக்தி பீடமும்," தென்காசியில் "தரணி பீடமும்" அமைந்திருப்பது தென்காசி வட்டார மக்களுக்கும், நம்மெல்லோருக்கும் கிடைத்த பெரும் பாக்கியம்.

சக்தியின் இயந்திரம் நாற்பது முக்கோணங்களைக் கொண்டவை. அடியார்களின் வேண்டுதலை இந்த நாற்பது முக்கோண சக்தி பீடம் நிறைவேற்றி வைப்பதை இன்றும் காணமுடிகிறது. காரிய சித்தி தருவதால் "சித்தி பீடம்" என்றும் கலைஞானங்களை எல்லாம் வாரி வழங்குவதால் "கலைப்பீடம்" என்றும், இன்பங்களை வழங்குவதால் "போக பீடம்" என்றும் இப்பீடத்தைப் போற்றப்பட்டு வருகின்றனர்.

தரணி பீடத்தை தரிசித்து நகர்ந்தால், அடுத்ததாக மதுரை மீனாட்சியும் சொக்கலிங்கப் பெருமானும் எழுந்தருளியிருக்கும் திருக்கோலத்தைக் காணலாம். இத்திருக்கோலம் சொல்லொண்ணா மகிழ்வு கொள்ளச் செய்யும். வணங்கி ஆனந்திக்கலாம். அன்னை மீனாட்சியை தங்களது குலதெய்வமாக போற்றிக் கொண்டாடி வந்தவர்கள் பாண்டிய மன்னர்கள். அதை நினைவுகூறும் விதமாகத்தான் மன்னனும் இத்தலத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இங்குக் கோயில் எழுப்பி வைத்தான். 

சொக்கநாதரின் வணக்கத்திற்குப் பிறகு, இத்திருக்கோயிலின் காவல் தெய்வமான, பைரவரையும் எழுந்தருளிவித்திருந்தான். பொதுவாக எல்லாக் கோயில்களிலும், பைரவ மூர்த்தி ஆலயத்தின் உள் பிரகாரத்தில் அமைத்திருப்பார்கள்.ஆனால், தென்காசி திருக்கோயிலில் பைரவர் வெளிப் பிரகாரத்தில் அமைந்திருப்பதைப் பார்க்கும்போது, இதில் ஏதோ தனிச்சிறப்பு இருப்பதாக எண்ணம் வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, அர்த்தசாம பூசை நிறைவுற்றதும், கோயிலைப் பூட்டி சாவியை பைரவ மூர்த்தியின் திருவடியில் வைத்து விடுவது வழக்கமாகக் கொண்டிருந்தனர். அர்த்த சாமப் பூசையினை நிறைவேற்றியதும், பட்டர் சாவிகளைக் கொண்டு வந்து "யதார்த்தா சவுகரியம் சுவாமி சந்நிதி மரசாதன்கரே" என்று பைரவர் திருவடியில் வைத்து விடுவர்.

இதற்கிடையே ஒரு தம்பதியர் வந்து வடைமாலை சார்த்தி வழிபட்டனர். அவர்களை அனுகி விபரம் கேட்டோம் அதற்கு அவர்கள்..........இவருக்கு வடைமாலை சார்த்தி வழிபட்டால், நினைத்த காரியம் நடக்கும். அதற்காக இதைச் செய்கிறோம் எனக் கூறினார்கள். முகப்பு மண்டபத்தில் மேற்கு முகமாகத் துர்க்கை எழுந்தருளியிருந்தாள். 

மேற்கு முகமான துர்க்கை கண் கண்ட தெய்வம். இவள் மாங்கல்ய பாக்கியத்தை தந்தருளுபவள். ஆதலால் வெள்ளிக்கிழமையான இன்று, (செவ்வாய்க்கிழமைகளிலும்) துர்க்கையின் அருள் வேண்டி கூட்டமாய் கூடியிருந்ததைக் காணமுடிகிறது. 

- கோவை கு.கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com