நெல்லையப்பர் கோயிலில் 96 வகை திரவியங்களுடன் யாகசாலை பூஜை: நாளை மஹா கும்பாபிஷேகம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஏப். 27) நடைபெறவுள்ளது
நெல்லையப்பர் கோயிலில் 96 வகை திரவியங்களுடன் யாகசாலை பூஜை: நாளை மஹா கும்பாபிஷேகம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஏப். 27) நடைபெறவுள்ளது. இதையொட்டி, 96 வகையான திரவியங்களுடன் யாகசாலை பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.
 மஹா கும்பாபிஷேகத்தில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த சிவனடியாளர்கள், பக்தர்கள் திருநெல்வேலியில் குவிந்துள்ளனர்.
 நெல்லையப்பர் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 20ஆம் தேதி விக்னேஷ்வர பூஜை, 21ஆம் தேதி மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நின்றசீர்நெடுமாறன் கலையரங்கம் அருகே வெளிபிரகாரத்தில் 87 யாககுண்டங்கள், 49 வகை வேதிகைகளுடன் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை க் கூடத்தில் முதல்கால யாகசாலை பூஜைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
 96 வகை திரவியங்கள்: புதன்கிழமை காலை விசேஷ சந்தி என்ற பூஜையும், தொடர்ந்து, 2 வது கால யாகசாலை பூஜை, திரவ்யாஹுதி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சிறப்பம்சமாக 96 வகை திரவியங்கள், மூலிகைகளை வைத்து யாகசாலைபூஜை நடைபெற்றது. பின்னர், மந்திர புஷ்பம் எனப்படும் ரிக், சுக்ல யஜூர், கிருஷ்ண யஜூர், ஜெய்மினி சாம வேதம், அதர்வண வேதம், இதிகாச புராணங்கள், சிவாகமங்கள், தமிழ் வேதங்களான பன்னிரு திருமுறை, ராகம், தாளம் போன்ற உபசாரங்கள் செய்தல் நடைபெற்றது.
 மாலையில் 3ஆம் கால யாகசாலை பூஜை, பிரதான மூர்த்திகளுக்கு மூலிகைப் பொருள்களை இடித்து மருந்து சாத்துதல் வைபவம், சுவாமி பீடத்திற்கும், விக்ரகத்திற்கும் தொடர்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 யாகசாலை பூஜையில் சர்வசாதகம் தூத்துக்குடி ஆலால சுந்தர வேத பாடசாலை முதல்வர் செல்வம் பட்டர், கோயில் அர்ச்சகர் பிச்சையா பட்டர் தலைமையில் சிவாச்சார்யர்கள் பங்கேற்றனர். பழனி பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், கபிலர் மலை செல்வ கபில சிவாச்சார்யார், சர்வ போதகம் காஞ்சிபுரம் ராஜப்பா சிவாச்சார்யார், தாழையூத்து கணேசபட்டர், சிவகாசி விக்னேஷ் பட்டர், நெல்லையப்பர் கோயில் ஸ்தானிகர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
 வியாழக்கிழமை (ஏப். 26) காலை 8 மணிக்கு 4ஆம் காலயாகசாலை பூஜை, மாலையில் 5ஆம் கால யாகசாலை பூஜை நடைபெறவுள்ளது. வெள்ளிக்கிழமை (ஏப்.27) காலை 9.30 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் மஹாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
 வெளியூர் பக்தர்கள் குவிந்தனர்: நெல்லையப்பர் கோயிலில் சுவாமி, அம்பாள் ராஜகோபுரங்கள், தெற்கு, மேற்கு, வடக்கு ராஜகோபுரங்கள், சுவாமி, அம்பாள் விமானங்கள், கோயில் உள்புறங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. காலை முதல் இரவு வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு யாகசாலை பூஜைகளைப் பார்க்க குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
 மாலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக உள்ளது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிவாச்சாரியார்கள், உழவாரப்பணிக் குழுவினர் புதன்கிழமை இரவு முதலே குவியத் தொடங்கியுள்ளனர். இதனால் திருநெல்வேலி நகரம், சந்திப்பு பகுதிகளில் அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிகின்றன. கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com