நெல்லையப்பர் கோயில் இன்று மகா கும்பாபிஷேகம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை (ஏப். 27) நடைபெற உள்ளது.
நெல்லையப்பர் கோயில் இன்று மகா கும்பாபிஷேகம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை (ஏப். 27) நடைபெற உள்ளது. இதையொட்டி, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 20ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. கடந்த 24ஆம் தேதி முதல் நின்றசீர்நெடுமாறன் கலையரங்கம் அருகே வெளிபிரகாரத்தில் 87 யாக குண்டங்கள், 49 வகையான வேதிகைகளுடன் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை கூடத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
 வியாழக்கிழமை (ஏப். 26) காலையில் நான்காம் கால யாகசாலை பூஜையும், மாலையில் ஐந்தாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை (ஏப். 27) அதிகாலை 3 மணிக்கு 6 ஆம் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. அதன்பின்பு பரிவார மூர்த்திகள் யாகசாலை பூஜை, நாடிசந்தானம், ஸபர்ஸாகுதி, மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் எழுந்தருளல் ஆகியவை நடைபெறுகின்றன. விழாவின் சிகர நிகழ்வாக காலை 9.30 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் ராஜகோபுரம், விமானங்கள், அருள்மிகு நெல்லையப்பர், காந்திமதியம்மன், வேணுவனநாதருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும் நடைபெற உள்ளன.
 ஆதீனங்கள் பங்கேற்பு: நெல்லையப்பர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற யாகசாலை பூஜையில் தருமபுரம் இளைய ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமச்சார்ய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடம் தம்பிரான் சுவாமிகள், வேளக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பராமச்சார்ய சுவாமிகள், கூனம்பட்டி ராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள், பெருங்குளம் செங்கோல் ஆதீனம், ரத்னகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், சுவாமி பக்தானந்தா ஆகியோர் பங்கேற்றனர்.
 யாகசாலை பூஜைகளை தூத்துக்குடி செல்வம் பட்டர், பிச்சையா பட்டர் தலைமையிலான அர்ச்சகர்கள் நடத்தினர். யாகசாலை பூஜையில் திருப்பரங்குன்றம் பாடசாலை ராஜாபட்டர், பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், மயிலாடுதுறை ரவி சிவாச்சாரியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெறும் கும்பாபிஷேகத்தில் பல்வேறு ஆதினங்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
 போலீஸ் பாதுகாப்பு: கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பல்வேறு கனி வகைகளால் அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்ய ஏதுவாக பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 1500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நெல்லையப்பர் கோயில் நூலக பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ரத வீதிகள் முழுவதும் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நடமாடும் கேமரா வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மாநகர காவல் துணை ஆணையர் சுகுணசிங் உள்ளிட்ட உயரதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை வியாழக்கிழமை பார்வையிட்டனர்.
 அடிப்படை வசதிகள்: திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 17 தற்காலிக குடிநீர்த் தொட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தின் மேல் பகுதியிலும் 4 தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. 4 சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் 230 துப்புரவுப் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர். கோயில் வளாகத்தின் உள்ளேயும், ரத வீதிகளிலும் 5 மருத்துவக் குழுக்களும், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தீயணைப்புத் துறை சார்பில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 லட்சம் பேருக்கு அன்னதானம்: பக்தர்கள் பேரவை மற்றும் ஹிந்து ஆலய பாதுகாப்புக் குழு உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் திருநெல்வேலி பொருள்காட்சித் திடலில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான பணிகள் வியாழக்கிழமையே தொடங்கின. தக்காளி, கத்தரி, தேங்காய் உள்பட மொத்தம் 6 டன் காய்கறிகளைக் கொண்டு 300 பிரதான சமையல் கலைஞர்கள், 700 உதவியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உணவு பரிமாறும் பணிக்காக 1200-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து அடையாள அட்டைகள் பெற்றுள்ளனர். அன்னதானத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் விரைவாக பங்கேற்று செல்லும் வகையில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை வரை அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com