இன்று கருட பஞ்சமி: என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

எம்பெருமான் பள்ளிகொள்ளும் ஆதிசேஷனையும், அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகிய கருடாழ்வாரையும் வழிபட இந்நாளே சிறந்ததாகும்.
இன்று கருட பஞ்சமி: என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

எம்பெருமான் பள்ளிகொள்ளும் ஆதிசேஷனையும், அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகிய கருடாழ்வாரையும் வழிபட இந்நாளே சிறந்ததாகும்.

உலகில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காக்கும் கடவுளாகிய மகாவிஷ்ணுவின் வாகனமாகவும், கொடியாகவும் இருக்கும் சிறப்பினை பெற்றவர் கருட பகவான். ஆடி அமாவாசைக்கு ஐந்தாம் நாள் அதாவது பஞ்சமி திதியான இன்று கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும் அனுஷ்டிக்கப்படுகிறது. 

கருட பஞ்சமிக்கான புரணக் கதையை தெரிந்துகொள்வோம்:

பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகள் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்குத் தாயாகவும், வினதை அருணனுக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது. அந்தப் போட்டியில் வெற்றிபெற்றவருக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்துக் கொண்டனர்.

போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தி தனது தாயை எப்படியாவது அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான். அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டுவந்து தந்தால் அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள்..

கருடன், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கி தேவலோகம் சென்றான். தேவலோகத்தில் காவல் புரிந்துகொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. இறுதியில், கருடன் வெற்றி பெற்று, தேவேந்திரனை வணங்கி, அவரிடமிருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான். மூவருக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்தான், கருடன். 

பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் 'கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று" அனுசரிக்கப்படுகின்றது. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். கருடனைப் போல பலசாலியாகவும், புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய பெண்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர். அன்று ஆதிசேஷன் விக்ரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். 

கருட பஞ்சமியன்று கௌரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது. அதிகாலை நேரத்தில், கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். வியாழன் பஞ்சமியில் சுவாதி நட்சத்திரத்தில் கருட பஞ்சாங்கத்தைப் படிப்பது அமோக பலனை தரும். சுவாதியில் மாலை நேர கருட தரிசனம் மிகவும் விசேஷம். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று கருடனை வழிபட்டு வர நாக தோஷம் விலகும். 

நாக பஞ்சமியான இன்று ராகு, கேது தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், விரதமிருந்து நாகநாதரை வழிபடத் தோஷங்களில் இருந்து விடுபடலாம். புற்றிற்குப் பால் ஊற்றி வழிபாடு செய்யலாம். 

இன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

ஸ்ரீ கௌரி காயத்ரி மந்திரம்

ஓம் மகாதேவ்யை ச வித்மஹே
ருத்ர பத்னியை ச தீமஹி
தந்நோ கௌரி ப்ரசோதயாத்.


.ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி

ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்.


கருட காயத்ரி

தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com