ஜீவனில் சிவத்தை காணும் சித்தர்கள் - பதினெண் சித்தர்கள் தரிசனம் (பகுதி 3)

பதிணென் சித்தர்களில் முதல் இரண்டு பகுதியில் 12 சித்தர்களைப் பற்றி விரிவாகப் பார்த்தோம்.
ஜீவனில் சிவத்தை காணும் சித்தர்கள் - பதினெண் சித்தர்கள் தரிசனம் (பகுதி 3)

பதிணென் சித்தர்களில் முதல் இரண்டு பகுதியில் 12 சித்தர்களைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். அடுத்த ஆறு சித்தர்களைப் பற்றி தற்போது விரிவாகக் காண்போம். 

"குதம்பை சித்தர்"
அருள்மிகு ஸ்ரீ குதம்பை சித்தர் 
பிறந்த மாதம் : ஆடி
பிறந்த நட்சத்திரம் : விசாகம்
வாழ்ந்த காலம் : 14-15 ம் நூற்றாண்டு
ஜீவ பீடம் : மயிலாடுதுறை
உகந்த நாள் : வெள்ளிக் கிழமை

குதம்பை என்பது பெண்களின் காதிலே அணியும் தொங்கட்டான் நகை. இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைக்கிறார். இதனால் இவரை குதம்பைச் சித்தர் என்றே  அனைவரும் அழைத்தார்கள். இவர் 32 பாடல்களைப் பாடியுள்ளார். யாதவ குலத்தில் கோபாலர் தம்பதிகளுக்கு ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்று மிக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அது ஆண்  குழந்தையாக இருந்தாலும் அதன் அழகு பெண் குழந்தையைப் போலிருக்கவே அக்குழந்தையின் காதில் அசைந்தாடும் குதம்பை என்னும் நகையை அணிவித்தாள் குழந்தையின் தாய். குதம்பையின்  தினசரி நிகழ்ச்சி காலையும், மாலையும் கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்குவது தான். குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர்  ஒருவர் வந்தார். வந்தவரை வணங்கி நின்றார் குதம்பை.

மாதவர் குதம்பைக்கு அருளுபதேசம் செய்தார். "மாதவ குருவே உபதேசம் செய்த உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்!” என்றார் குதம்பை மாதவரோ குதம்பையை மெல்ல தடவிக்கொடுத்து “குதம்பை நீ போன பிறவியில் உய்வடையும் பொடுட்டு கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து  நீ இறந்து போனாய். அந்தத் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய்” என்றார்.
 
ஒரு நாள் இரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். தம் அனுபவங்களைப் பாடல்களாக  எழுதினார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன. குதம்பைச் சித்தர் மயிலாடுதுறையில் சித்தி பெற்றதாக சித்தர் நூல்கள் கூறுகின்றன.

அடுத்து "கருவூராரை" வணங்கி அருள் பெறலாம். கருவூரில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவர். கருவூரார் பூசாவிதி என்னும் நூலைச் செய்தவர்.
  
விளையாடும் பருவத்திலேயிருந்து ஆர்வத்துடன் ஞான நூல்களைக் கற்றார். கருவூராரின் பெற்றோர்கள் ஊர் ஊராகச் சென்று கோவில்களில் விக்ரகங்கள் செய்து கொடுத்து வாழ்ந்தார்கள். போகர்  திருவாவடுதுறைக்கு வர அங்குச் சென்ற கருவூரார் தம்மை அவருடைய சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டினார்.
 

போகர், கருவூராரே உன் குலதெய்வம் அம்பாள், தினந்தோறும் அவளை வழிபடு. அவள் உனக்கு வழிகாட்டுவாள் என்று வழிபாட்டு நெறிகளை உபதேசித்தார். அம்மனை உள்ளம் உருக வழிபட்டு சித்துகள்  புரியும் ஞானம் பெற்றார். சிவாலயங்களில் தங்கத்தால் சிவலிங்கங்களை உண்டாக்கி வைத்தார் கருவூரார். காசிக்குச் சென்று விசுவநாதர் ஆலயத்திலும் தாமிரத்தில் வேதை செய்து தங்கமயமான  லிங்கத்தை உண்டு பண்ணி வைத்தார். கருவூர் சித்தரும், திருமாளிகைத்தேவரும் போகரின் சீடர்கள்.
 
இரணிய வர்ம சோழன் தீர்த்த யாத்திரையாகத் தில்லை வந்து சிவகங்கைத் தீர்த்த குளத்தில் குளிக்கும்போது தண்ணீருக்குள் ஓங்கார ஓசை கேட்க மீண்டும் நீரில் மூழ்கி நடனத்துடன் கூடிய ஓங்கார  ஒலியை உறுதிப்படுத்திக் கொண்டான். தான் கண்டு கேட்டு அனுபவித்ததை அனைவரும் கண்டுகளிக்க என்ன செய்யலாம் என சிந்தித்தான். இறுதியில் சொக்கத்தங்கத்தில் விக்ரகமாகச் செய்து  எல்லோரும் தரிசனம் செய்யும்படி வைக்கலாம் என முடிவு செய்தனர்.
 
கலப்படமில்லாத சொக்கத்தங்கத்தில் 48 நாட்களுக்குள் செய்திட சிற்பிகளுக்கு ஆணைப் பிறப்பித்தார். சிற்பிகளால் என்ன செய்தும் குறையின்றி விக்ரகத்தைச் செய்து முடிக்க முடியவில்லை. 47 நாட்கள்  ஆனது. விபரம் அறிந்த போகர் சிற்பிகள் கஷ்டப்படுவதால் கருவூரா நீ போய் அதைச் செய்து முடி என்றார். 48 நாள் முடிவில் சிற்பிகள் தங்கள் இயலாமையால் மரணபயத்துடன் இருக்க கருவூரார் அங்குச்  சென்றார். அந்த அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக்கொண்டார்.
 
நம்பிக்கையில்லாமல் வெளியில் காத்திருந்த சிற்பிகள் ஒருமணி நேரத்தில் கதவு திறந்து கருவூரார் வெளியில் வந்து உள்ளே சென்று பாருங்கள் உங்கள் எண்ணப்படியே விக்ரகம் செய்தாயிற்று என்றார்.  நம்ப முடியா ஆச்சரியத்தில் உள்ளே சென்ற சிற்பிகள் அங்கிருந்த சிலையைப்பார்த்து அதிசயப்பட்டனர். வெளியே வந்து கருவூரரை வணங்கினர்.
 
மறுநாள் சூரியோதயத்திற்கு முன் நீராடி மன்னர் திருநீற்றுக்கோலத்துடன் சிற்பிகளைப் பார்க்க வந்தான். சிலையின் அற்புத ஒளியில் மயங்கினார். தான் வரைந்த ஓவியத்தில் இல்லாத அருள்சக்தி  விக்ரகத்தில் இருப்பதை உணர்ந்தார். சிற்பிகளே அற்புதம். உங்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப்போகிறேன் என்றார். அமைச்சர் சிலையிலிருக்கும் தங்கத்தைச் சோதித்து பின் வெகுமதி அளிக்கலாம்  என்றார். சிலை செய்யும்போது சிந்தியிருக்கும் தங்கத்துகள்களை கொண்டுவந்து சோதனை செய்தபோது மன்னரின் முகம் இருண்டது.
 
சுத்தமான தங்கத்தில் செய்யும்படிநான் உங்களிடம் கூறியிருந்தேன். செம்பைக் கலந்து என்னை மோசடி செய்து விட்டீர்களே எனக் கடுமையாகக் கேட்டார். சிற்பிகள் பயந்து நடுங்கினர். மன்னா எங்களால்  47 நாட்களாக சிலை செய்ய முடியவில்லை. நேற்று அடியார் ஒருவர் வந்தார். அவர்தான் இதைச் செய்தார் என்றதும் மன்னர் திகைத்து அவரைக் கூட்டி வாருங்கள் என்றார். கருவூராரை அழைத்து வந்ததும்  இவரை சிறையில் இடுங்கள். நான் நாளை என் தீர்ப்பை கூறுகிறேன் என்றார். விக்ரகத்தை தன்னுடன் கொண்டு சென்றார்.
 
விக்ரகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவர் கண்ணில் நீர் வழிந்தது. அவர் எதிரே போகர் தோன்றினார். அவர்பின்னால் ஐந்து சீடர்கள் தலையில் தங்க மூட்டையுடன் நின்றிருந்தனர். ஒருவரிடம் சிறிய  தராசும் இருந்தது. ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்து வணங்கினார் மன்னர். போகர். மன்னா நீ சிறையில் அடைத்திருக்கும் கருவூரர் என் மாணவன். இனி எந்தக் கருவிலும் ஊர்தல் செய்யாத தகுதி  கொண்ட அவனைச் சிறையில் அடைத்து விட்டாய். இதுதான் உன் ஆட்சி முறை என்றார், மன்னர் சுத்த தங்கத்தில் விக்ரகம் செய்ய சொன்னால் செம்பு கலந்து செய்ததால் அந்தத் தண்டனை என்றார்  மன்னன்.
 
சுத்த தங்கத்தில் விக்ரகம் செய்ய முடியாது. சுத்த தங்கத்திலிருந்து விக்ரகம் செய்தால் அதிலிருந்து கிளம்பும் ஒளி நாளடைவில் பார்ப்பவர் கண்களைக் குருடாக்கிவிடும். எனவே அதில் செம்பு கலக்கச்  சொன்னேன். இந்த அறிவியல்முறை உனக்குத் தெரியாதா என்றார். என்மாணவன் செம்புடன் பலவிதமூலிகை சாறுகளைச்சேர்த்துச் செய்திருக்கின்றான். போனது போகட்டும். இந்தா நீ கொடுத்த அதே சுத்தத்  தங்கம். சிலையைக்கொடு என தராசில் நிறுத்தி சிலையை எடுத்துக் கொண்டு செல்ல முயன்ற போகரின் கால்களில் வீழ்ந்தான் மன்னன்.
 
நடராசப்பெருமானை உங்களிடம் தருகின்றேன். என் சீடனை என்னிடம் கொடுங்கள் என்றார் போகர். போகர் அழைக்க சிறையிலிருந்து வெளியே வந்தார் கருவூரார். கோவில் அமைய வேண்டிய முறை  எந்தெந்த வடிவங்கள் எங்கெங்கு வைக்கவேண்டும் எனவும் நடராசரை எப்படி பிரதிஷ்டை செய்து பூஜை செய்யவேண்டும் என்றும் சொல்லி மறைந்தார் கருவூரார்.
 
கருவூரார் திருவிடைமருதூர் தலத்தை அடைந்து இறைவனை நோக்கிக் குரல் கொடுக்க இறைவன் தன் தலையை சிறிது சாய்த்து கருவூரார் குரலைக்கேட்டு பதில் தந்தார். தஞ்சை கோவில்  கும்பாபிஷேகம் தடைப்பட்டு நிற்பதைக் கண்ட கருவூரார் உடனே கருவறை சென்று எளிய அஷ்டபந்தனம் செய்து குபாபிஷேகமும் செய்துவைத்தார். தஞ்சையிலிருந்து திருவரங்கம் சென்ற கருவூராரை  அபரஞ்சி என்ற தாசி சந்தித்தாள். வணங்கி வழிபட்டாள். ஞான சாதனையில் தன்னுடைய சந்தேகங்களைச் சொல்லி விளக்கம் கேட்டாள். அவள் சந்தேகங்களை விளக்கினர். மறுநாள் அரங்கனிடம்  சென்று அபரஞ்சிக்குப் பரிசளிக்க நவரத்னமாலை ஒன்றை வாங்கி அதை அவளிடம் தந்தார். விடை பெறுகையில் அவள் வருந்தவே நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன் எனக் கூறி விடைபெற்றார்.
 
மறுநாள் காலை திருவரங்கன் மேனியிலிருந்த நவரத்ன மாலை களவுபோய்விட்டது என்ற செய்தி அறிந்தவர்கள் அது அபரஞ்சி கழுத்திலிருப்பதை கண்டு திகைத்தனர். பஞ்சாயத்து கூடியது. பள்ளிகொண்டபெருமாள் சார்பாக கருவூரார் கொடுத்தபரிசு என அபரஞ்சி சொல்ல கருவூரார் எங்கே என்றனர். அபரஞ்சிதா மனதார கருவூராரை நினைக்க, அதுசமயம் எல்லோருக்கும் கேட்கும் வண்ணம்  நீங்கள் எனக்கு அலங்காரம் செய்ய நினைகின்றீர்கள். நான் என் அடியார்களுக்கு அலங்காரம் செய்து பார்க்க விரும்புகிறேன். நான்தான் அபரஞ்சிக்கு நவரத்னமாலையை கருவூரார் மூலம் அளித்தேன் என  அசரீரி கேட்க ஊரார் அபரஞ்சியிடம் மன்னிப்பு கேட்டனர்.

அரசு செல்வாக்கும் ஊரார் செல்வாக்கும் கருவூராருக்கு இருப்பதைக் கண்ட சிலர் பொறாமையினால் மதுவையும் மாமிசத்தையும் கருவூரார் வீட்டில் ஒளித்து வைத்து மன்னரிடம் கூறினார். கருவூராரின்  வீட்டைச் சோதனையிட்ட காவலர்கள் ஏதுமின்றி வந்தது கண்டு அவர்கள் மீது மன்னன் கோபம் கொண்டான். அவமானம் அடைந்ததனால் கடும் சினம் ஏற்பட அவர்கள், கருவூராரை கொலைசெய்ய  திட்டமிட்டனர். அதையறிந்த கருவூரார் அவர்களுக்குப் பயந்து ஓடுவதுபோல் திருஆனிலையப்பர் கோவிலுக்குள் ஓடினார்.
 
கோவிலுக்குள் ஓடிய கருவூரார் "ஆனிலையப்பா, பசுபதீஸ்வரா" எனக் கூறி சிவலிங்கத்தைத் தழுவினார். இனி எந்தக் கருவிலும் ஊரல் இல்லாத கருவூரார் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டார்.  கருவூராரைத் துரத்தி வந்தார்கள் இந்தத் தெய்வீக காட்சியைக் கண்டனர். தங்கள் தவற்றுக்குப் பரிகாரமாக ஆனிலையப்பர் கோவிலில் கருவூராருக்குத் தனிசன்னதி அமைத்து வழிபட்டனர்.
 
கருவூரார் வாதகாவியம், வைத்தியம், யோகஞானம், பலதிட்டு, குரு நரல் சூத்திரம், பூரணஞானம், மெய் சுருக்கம், சிவஞானபோதம், கட்ப விதி முப்பு சூத்திரம், அஷ்டமாசித்து (மாந்திரீகம்) ஆகிய  நூல்களை எழுதினார்.


 அடுத்து "வான்மீகர்" தரிசனம். வான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 நாள் ஆகும். வடமொழியில் இராமாயணம் பாடிய  வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப்படுகிறார். வான்மீகரைப் பற்றி போகர் முனிவர் புகழ்ந்து பாடியுள்ளதால் இவர் சித்தர் வரிசையில் இடம் பெறுகிறார். போகர் 7000 எனும்  நூலில் பாடல் 5834-ல் வான்மீகர் எழுநூருக்கும் மேற்பட்ட காலம் வாழ்ந்ததாகவும் உலகிற்கு இராமாயணத்தைத் தந்தவர், தமிழ் புலமை மிக்கவர் காய சித்திகொண்டு அகத்தூய்மையோடு வாழ்ந்தவர்  என்றும் கூறுகிறார். வான்மீக சித்தர் தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டம் எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் ஜீவசமாதியடைந்தார்.

"சுந்தரானந்தர்" நம்மை சுண்டி இழுக்கிறார். சுந்தரானந்தர் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர். போகமுனி என்னும் சித்தரின் மாணாக்கர். கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும்,  கள்ளர் குலத்தை சேர்ந்தவர் என்றும் போகர் சொல்கிறார். இவர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப்பட்டார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும்  உண்டு. இவர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லற வாழ்க்கையை மேற்கொண்டார் என்றும், சட்டை முனியால் ஆட்கொள்ளப்பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இவர் அகத்தியர் பூஜித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இவர் மதுரையிலே சமாதியடைந்ததாக  சொல்லப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இவருக்குத் தனி சந்நிதி அமைந்திருக்கிறது.

அடுத்து "கொங்கணர்" அருள் தரிசனம் பெறலாம். எழில் கொஞ்சும் கேரளத்தின் கொங்கண தேசத்தில் சித்திரை மாதத்தில் உத்ர நட்சத்திரத்தில் புளிஞர் குடியில் கொங்கணர் பிறந்தார் என்று அகத்தியர்  பனிரெண்டாயிரமும் போகர் ஏழாயிரமும் தெரிவிக்கின்றன. கொங்கணரின் குரு போகர் ஆவார். கொங்கணர் சிறந்த அம்பிகை பக்தர். அம்பிகையை வழிபடும் முறையையும் மந்திரங்களையும் போகர்  கொங்கணருக்கு உபதேசித்துள்ளார். கொங்கணர் நூல்கள் பல உள்ளன. அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.

தம் குருவான போகரை அணுகி ஆசி பெற்றார். அப்போது அவர், “திருமாளிகைத் தேவன் சாதகம் செய்வதில் கெட்டிக்காரன். நீ அவனிடம் போ, உனக்கு அமைதி கிடைக்கும்” என்று வழியனுப்பினார். பின்னர் போகர் கட்டளைப்படியே திருமாளிகைத் தேவரை சந்தித்தார். கொங்கணரை  எதிர்கொண்டழைத்து உபசரித்த திருமாளிகைத் தேவர், அவருக்குப் பல இரகசியமான சாதனை முறைகளை உபதேசித்து சமய தீட்சை நிர்வாண தீட்சை முதலியனவற்றையும் உபதேசித்தார். அதன்பிறகு  கொங்கணர் திருவேங்கடமலை சென்று தவம் செய்தார். அப்போது வலவேந்திரன் என்னும் சிற்றரசன் கொங்கணரைச் சந்தித்து அவர் சீடராக ஆனான். பல பல ஞான அனுபவ விவரங்களைக்  கொங்கணரிடம் இருந்து அறிந்தான். அம்மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க கொங்கணர் பல பாடல்களை எளிமையான முறையில் இயற்றி அருளினார். இறுதியில் கொங்கணர் திருவேங்கடத்தில்  சித்தியடைந்தார்.
 

"இடைக்காடர்" தரிசனம் இன்பத்துள் இன்பம். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை  நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்திப் பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும்  அடங்குவார். இவரது வரலாறு துணியப்படவில்லை. இவர் கொங்கணர் என்பாரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கிபி 10-15ம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர். சங்க காலத்தினர் என்ற  கருத்தும் நிலவுகிறது. இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம்பெறுகின்றன. இடைக்காடரின் ஞானசூத்திரம் 70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர்  திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். ஜனன சாகரத்தில் சமாதியடைந்தார் என்று போகர் கூறுகிறார்.

சித்தர் தரிசனம் முழுமை பெற்றதும், அண்ணாமலையை வலம் வரலாம்.

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...

உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே.

- ராகேஸ் TUT

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com