முன்னோர்களின் சாபம் உங்களுக்கு இருப்பதை எப்படித் தெரிந்துகொள்வது? 

முன்னோர்கள் சாபம் உள்ள பல குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும்,
முன்னோர்களின் சாபம் உங்களுக்கு இருப்பதை எப்படித் தெரிந்துகொள்வது? 

முன்னோர்கள் சாபம் உள்ள பல குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது. எதற்கெடுத்தாலும் சண்டை, சச்சரவுகள் நிம்மதியே இருக்காது. ஒரு சிலருக்கு குடும்பத்துடன் ஆரோக்கியப் பாதிப்புகள் வந்து கொண்டேயிருக்கும். யார் கொடுத்த சாபமோ இப்படி வாழ்க்கை இருக்கின்றதே என்று நம்மில் பலரும் புலம்புவதைக் கேட்டிருப்போம். இதற்குரிய தீர்வு என்ன? என்பதைப் பார்ப்போம். 

முற்காலத்தில் முனிவர்கள் கோபத்தினால் சாபம் கொடுத்தனர். ஆனால், இக்காலத்தில் மனிதர்களே சாபம் கொடுக்கின்றனர். ஒருவரின் சுய ஜாதகத்தினை ஆராய்ந்து பார்த்தால் தான் எந்த சாபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியும். அதனைக் கண்டறிந்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்தால் துன்பங்களிலிருந்து விடுதலைப் பெற முடியும்.

ஜோதிடப்படி, ஒருவரது ஜனன ஜாதகத்தில் சனியும், செவ்வாயும் இணைந்திருந்தால் அல்லது செவ்வாய் இருக்கும் ராசிக்கு 4-வது ராசியில் சனி இருந்தால் அவர்களுக்கு முன்னோர்கள் சாபம் பலமாக இருக்கின்றது என்று அர்த்தம். சில சாபங்களையும் அதற்குரிய பரிகாரங்களையும் இங்குப் பார்க்கலாம்.

பித்ரு சாபம்
நம் மூதாதையர்களுக்கு சரிவர திதி, சிரார்த்தம் செய்யாததால் ஏற்படுவதே பித்ரு சாபம். இந்த சாபம் நீங்க அவர்கள் இறந்த திதியில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். திதி தெரியாதவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்கலாம். தொடர்ந்து செய்து வருவதின் மூலமே இந்த சாபத்தில் இருந்து விடுபட முடியும். 

சுமங்கலி சாபம் 
சுமங்கலி சாபம் விலக அதிகார நந்தியை, திருதியை திதியில் வழிபாடு செய்ய வேண்டும். 

சகோதர சாபம்
சகோதர சாபம் விலக அஷ்டமி திதியில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்ய வேண்டும். குறிப்பாக விஸ்வரூப நந்தி மற்றும் திசைமாறிய நந்தியைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் எளிதில் விமோசனம் பெறலாம். 

பெற்றோர் சாபம்
பெற்றோர்களால் ஏற்படும் சாபங்கள் விலக பிரதமை திதியில் சண்டிகேஸ்வரருக்கு சாந்திப் பரிகாரம் செய்ய வேண்டும். அவர் எப்பொழுதும் தியானத்தில் இருப்பவர் என்பதால் அதற்கு முன்னறிவிப்பாக மூன்றுமுறை அவரது சன்னதியில் மெதுவாகக் கைத்தட்டி அதன்பிறகு தகவலை எடுத்துரைத்துப் பிறகு அபிஷேகம் செய்வது நல்லது.

ஆசிரியர் சாபம்
அதாவது நமக்கு பாடம் கற்பிக்கும் குருவின் சாபம் விலக சப்தமி திதியில் துவார பாலகர்களை வணங்க வேண்டும். இதுபோன்று மற்ற சாபங்களுக்கும் பரிகாரங்கள் உள்ளன. அவற்றைச் செய்தால் நிச்சயமாகச் சாப விமோசனத்தை நாம் பெற இயலும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com