வருகிறது கோகுலாஷ்டமி: கிருஷ்ணரை வரவேற்கத் தயாராகுங்கள்!

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு புராணக்கதை இருப்பது போல கோகுலாஷ்டமிக்கும்..
வருகிறது கோகுலாஷ்டமி: கிருஷ்ணரை வரவேற்கத் தயாராகுங்கள்!

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு புராணக்கதை இருப்பது போல கோகுலாஷ்டமிக்கும் ஒரு கதை உண்டு. மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. 

கிருஷ்ணர் அஷ்டமி திதியன்று நள்ளிரவில் பிறந்ததால், அன்று கோகுலாஷ்டமி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ரோகிணி நட்சத்திரமும், அஷ்டமியும் சேர்ந்து வந்தால் அது இரட்டிப்பு சந்தோஷத்தை தரும். 

கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், இந்துக்களின் புனித நூலான, பகவத் கீதையை நமக்கு அருளியவர் கிருஷ்ணபரமாத்மா. பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு அருளிய உபதேசங்களுடன் இந்திய தத்துவ சாரங்களின் அடிப்படைகளை ஒன்று கலந்து கொடுக்கப்பட்டுள்ள நூல், பகவத் கீதையாகும். 

கோகுலாஷ்டமி நாளன்று கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களைச் செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரைத் தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, வீட்டு வாசலிலிருந்து பூஜை அறை வரை அரிசி மாவினால் குழந்தை கிருஷ்ணரின் கால் பாதங்களை வரைவார்கள். வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அரிசி மாவில் அவர்களின் பாதங்களை பதிப்பார்கள். இவ்வாறு வரைவதால் குழந்தை கிருஷ்ணரே வீட்டிற்குள் வருவதாகப் பொருள்.

கோகுலாஷ்டமி தினத்தன்று கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக கூறப்படுவதால் நள்ளிரவு 12 மணிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் கிருஷ்ணனுக்கு மலர் மாலைகள் சூட்டி வழிபடும் போது துளசி மாலையும் அணிவிப்பது சிறந்தது.

அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோசித புத்தி ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதையைப் பின்பற்றுவதே இப்பண்டிகையின் தத்துவம். கோகுலாஷ்டமி தினத்தன்று குழந்தைக் கிருஷ்ணனை நாமும் நம் வீடுகளில் வரவேற்று, வாழ்வில் வளம் பெறுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com