மாட்டுப் பொங்கல்: அருணாசலேஸ்வரர் கோயில் நந்திகளுக்கு சிறப்பு அலங்காரம்

மாட்டுப் பொங்கல்: அருணாசலேஸ்வரர் கோயில் நந்திகளுக்கு சிறப்பு அலங்காரம்

மாட்டுப் பொங்கல் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த 5 நந்திகளை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

மாட்டுப் பொங்கல் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த 5 நந்திகளை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள், திங்கள்கிழமை மாட்டுப் பொங்கலை கோலாகலமாகக் கொண்டாடினர். கிராமங்களில் விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் பசுக்கள், காளைகள், கன்றுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, பலூன் கட்டி சிறப்புப் பூஜைகள் செய்தனர்.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில்: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் ஆயிரம் கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கிளிகோபுரம் எதிரே உள்ள சிறிய நந்தி, தங்கக் கொடி மரம் எதிரே உள்ள பிரதோஷ நந்தி, சரவிளக்கு அருகே உள்ள நந்தி, சுவாமி சன்னதி எதிரே உள்ள அதிகார நந்தி உள்ளிட்ட நந்திகளுக்கு திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
பழம், காய்கறிகள் அலங்காரத்தில்..: நந்திகளுக்கு பால், பழம், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், கத்தரி, முள்ளங்கி, பீட்ரூட், மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள், திராட்சை, மாதுளை, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள், அதிரசம், முறுக்கு, வடை மற்றும் இனிப்புகளால் ஆன சிறப்பு அலங்காரத்தில் 5 நந்திகளும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்த நந்தி பகவான்களை திங்கள்கிழமை அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வணங்கினர்.
மற்ற கோயில்களில்...: இதுபோன்று தண்டராம்பட்டு, தானிப்பாடி, கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், கலசப்பாக்கம் உள்பட மாவட்டத்தின் பிற சிவன் கோயில்களில் உள்ள நந்திகளுக்கும் திங்கள்கிழமை காய்கறி, பழங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இந்தக் கோயில்களில் அந்தந்த பகுதி பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com