சாமிதோப்பில் கொடியேற்றத்துடன் தைத் திருவிழா தொடக்கம்: 11 நாள்கள் நடைபெறும்

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றோர்.
கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்றோர்.

கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இங்கு ஆண்டுதோறும் தை, வைகாசி, ஆவணி ஆகிய மாதங்களில் 11 நாள்கள் திருவிழா நடைபெறும். நிகழாண்டு தைத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதம்விடும் நிகழ்ச்சி, 5 மணிக்கு நடைதிறப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து பணிவிடை, கொடிப்பட்டம் வலம்வருதல் நடைபெற்றது.
காலை 6.30 மணிக்குத் தொடங்கிய கொடியேற்ற நிகழ்வுக்கு பால பிரஜாபதிஅடிகளார் தலைமை வகித்தார். தலைமைப் பதி நிர்வாகி சுவாமி கொடியேற்றினார். பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடைபெற்றன.
வாகன பவனி: 2 ஆம் நாள் அய்யா பரங்கி நாற்காலி வாகனம், 3 ஆம் நாள் வெள்ளைசாற்றி வாகனம், 4 ஆம் நாள் பூஞ்சப்பர வாகனம், 5 ஆம் நாள் பச்சைசாற்றி வாகனம், 6 ஆம் நாள் சர்ப்ப வாகனத்தில் அய்யா எழுந்தருளி வடக்கு வாசலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தல் நடைபெறும். அப்போது, பக்தர்கள் நீண்ட வரிசையில் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபடுவர். 7 ஆம் நாள் விழாவில் அய்யா கற்பக வாகனத்தில் பவனி வருகிறார்.
கலிவேட்டை: 8 ஆம் திருநாளான 26 ஆம் தேதி அய்யா வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வந்து முத்திரிக் கிணற்றின் அருகே கலிவேட்டையாடுகிறார். பிறகு, செட்டிவிளை, சாஸ்தான் கோயில்விளை, சோட்டபணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு ஊர்வலம் செல்கிறார். அப்போது, பக்தர்கள் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபடுவர். 9 ஆம் நாள் அனுமன் வாகனத்திலும், 10 ஆம் நாள் இந்திர வாகனத்திலும் அய்யா பவனி வருதல் நடைபெறும்.
தேரோட்டம்: 11 ஆம் திருநாளான 29 ஆம் தேதி பகல் 12 மணிக்கு அய்யா தேருக்கு எழுந்தருளியதும் தேரோட்டம் நடைபெறும். இரவில் இன்னிசைக் கச்சேரி, நள்ளிரவில் கொடியிறக்கத்தைத் தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்படும்.
விழா நாள்களில் காலையும் மாலையும் பணிவிடை, பகலில் உச்சிப்படிப்பு, இரவில் கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com