சிதிலமடைந்த சஞ்சீவிராயர் கோயில் சீரமைக்கப்படுமா?

காஞ்சிபுரத்தில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமை வாய்ந்த சஞ்சீவிராயர் திருக்கோயிலை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
சிதிலமடைந்த சஞ்சீவிராயர் கோயில் சீரமைக்கப்படுமா?

காஞ்சிபுரத்தில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய பழைமை வாய்ந்த சஞ்சீவிராயர் திருக்கோயிலை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
காஞ்சிபுரம் ஐயங்கார் குளம் பகுதியில் சஞ்சீவிராயர் திருக்கோயில் உள்ளது. இங்கு ராமர், சீதா, லட்சுமணன் சந்நிதிகள் உள்ளன. 3 நிலை ராஜகோபுரத்துடன் 3 பிராகாரங்களுடன் இக்கோயில் அமைந்துள்ளன.
சஞ்சீவகரணி, விசல்யகரணி, சந்தானகரணி மூலிகைகள் நிறைந்த திருப்பாற்கடலில் உள்ள சந்திரா மலைப் பகுதியை பெயர்த்து எடுத்துச் செல்கையில் ஆஞ்சநேயர் இங்கு இளைப்பாறி தோள் மாற்றி எடுத்துச் சென்றதாகவும், அப்போது விழுந்த பகுதியாக இக்கோயில் தல வரலாறு கூறுகிறது. 
இக்கோயிலுக்கு எதிரே 80 அடி நீளம், 30 அடி அகலம் மற்றும் 21 படிகளுடன் கூடிய நடவாவிக் கிணறு அமைந்துள்ளது . 
சித்ரா பெளர்ணமி நாளன்று நடாவிக் கிணற்றில் நீர் வெளியேற்றப்பட்டு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கிணற்று மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆண்டுதோறும் அருள்பாலித்து வருகிறார். 
இந்த அளவுக்குச் சிறப்பு வாய்ந்த சஞ்சீவிராயர் கோயில் மிகவும் சிதிலமடைந்து செடி, கொடி, மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. 
மேலும், கோயிலை சமூக விரோதிகள் தங்கள் கூடாரமாக மாற்றியுள்ளனர். இதனால், பக்தர்களின் வரத்தும் குறைந்துள்ளது. காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் குறைந்த நேரமே நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. கோயில் பட்டாச்சாரியும் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து சென்று விடுகிறார் என பக்தர்கள் அதிருப்தியுடன் கூறுகின்றனர்.
கோயிலின் ராஜகோபுரம், பிராகாரம் ஆகிய பகுதிகள் சிதிலமடைந்து கற்கள் கீழே விழும் நிலையில் உள்ளன. கோயிலின் வடக்கு பகுதியில் உள்ள கோயில் குளமும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. 
சஞ்சீவிராயர் கோயில் நிலை குறித்து பக்தர்கள் சிலர் கூறியதாவது: 
ஆஞ்சநேயர் கோயிலில் பிரசித்தி பெற்ற கோயிலாக சஞ்சீவிராயர் கோயில் விளங்குகிறது.
இக்கோயிலுக்கு வந்து மூலவரை நினைத்து வேண்டினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இக்கோயிலைப் பராமரிப்புக்கு ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார். கடந்த ஆண்டு ஒரு சில பணிகள் மட்டுமே நடைபெற்றன. 
ஆனால், முழுமையாக சீரமைக்கப்படாமல் இன்றளவும் கோயில் சிதிலமடைந்தே காணப்படுகிறது. எனவே, தமிழக இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை இக்கோயிலை சீரமைக்க நடவடிக்கை வேண்டும் என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com