ரத சப்தமி : இன்று ஒரு நாள் பிரம்மோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சூரிய ஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை (ஜனவரி 24) ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
ரத சப்தமி : இன்று ஒரு நாள் பிரம்மோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சூரிய ஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை (ஜனவரி 24) ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
திருமலையில் ஆண்டுதோறும் ரத சப்தமி என்ற சூரியநாராயணர் பிறந்த நாளின் போது ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் மாட வீதியில் வலம் வருவது வழக்கம். மலையப்ப சுவாமி ஒரே நாளில் 7 வாகனங்களில் வலம் வருவதால் இதை ஒரு நாள் பிரம்மோற்சவம் என்று தேவஸ்தானம் அழைத்து வருகிறது. 
அதன்படி, புதன்கிழமை (ஜனவரி 24) ரதசப்தமியையொட்டி, திருமலையில் ஒருநாள் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இதைக் காண லட்சகணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவர் என்பதால், அதற்காக மாடவீதியில் பக்தர்கள் வசதியாக அமர்ந்து வாகன சேவையைக் காண கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1.70 லட்சம் பக்தர்கள் அமர்ந்து வாகன சேவையைக் காண முடியும். 
மேலும் மாடவீதியில் வண்ணக் கோலங்கள், மின் விளக்கு அலங்காரங்கள், திருமலையின் முக்கிய இடங்களில் எல்.இ.டி. திரைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. வாகன சேவையைக் காண திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு 24 மணிநேரமும் அன்ன தானம், குடிநீர், பால், டீ, காபி, மோர் உள்ளிட்டவற்றை வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. 
ரத்து 
ரத சப்தமியை முன்னிட்டு, ஜனவரி 24-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மேலும் ஜனவரி 24-ஆம் தேதி ஆர்ஜித சேவைகள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கை குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்ட தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருமலையில் மட்டுமல்லாமல் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான அனைத்துக் கோயில்களிலும் ரத சப்தமி அன்று தேவஸ்தானம் ஒரு நாள் பிரம்மோற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், நாராயணவனத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாணவெங்கடேஸ்வர சுவாமி கோயில், நாகலாபுரத்தில் உள்ள வேதநாராயண சுவாமி கோயில் என அனைத்துக் கோயில்களிலும் ரத சப்தமியை முன்னிட்டு, 7 வாகன சேவை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com