நோய், நொடி இல்லாமல் வாழ வழிசெய்கிறாளாம் இந்த அன்னை!

வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்த நகரம் முதலில்...
நோய், நொடி இல்லாமல் வாழ வழிசெய்கிறாளாம் இந்த அன்னை!

வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்த நகரம் முதலில் "குடியேற்ற நல்லூர்' என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் "குடியேற்றம்' என்றாகி பேச்சு வழக்கில் "குடியாத்த'மாக நிலைத்து நின்றுவிட்டது. 

இந்நகரில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கன்னடர்கள் குடியேறி தீப்பெட்டி தொழிலகங்களை உருவாக்கியுளளனர். இவர்கள் வருகைக்கு பிறகு,  நகரம் பெருமளவில் வளர்ந்து தீப்பெட்டி உற்பத்தியில் மாநிலத்தில் முக்கிய இடமாக மாறியுள்ளது. கன்னட மக்கள் பெருமளவில் குடியேறியதால் "குடியேற்றம்' என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

குடியாத்தம், கோபாலபுரம் பகுதியில் அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.  இத்திருக்கோயில் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. மூலவராக  கெங்கையம்மனும், மூலவரை சுற்றி  பிராமி, தாட்சாயிணி,  வாராகி,  துர்க்கை சிலைகளும் சிறு சந்நிதிகளில் அழகுற அமைந்துள்ளன. கோயிலின் முன் வேப்பமரமும், பின்புறம் அரசமரமும் அமைந்துள்ளதால் சக்தியும், சிவனும் கோயில் கொண்டு அருள்பாலிப்பதாக உள்ளது. வெள்ளி கவசம் அணிந்து சிம்ம பீடத்தின் மீது  சாந்த சொரூபமாக காட்சியளிக்கின்றார் அருள்மிகு கெங்கைம்மன். 

மூலவர் மண்டபத்தை அடுத்து அம்மன் சிரசு மண்டபம் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள கெங்கையம்மனை வேண்டினால் ஒவ்வொரு வீட்டிலும் நோய், நொடி இல்லாமல் காப்பாற்றுவாள் என்பது ஐதீகம். 

விதர்ப்ப தேசத்தை ஆண்ட மன்னன் குழந்தை பாக்கியம் இல்லாததால் கடும் தவம் மேற்கொண்டு பிரம்மதேவனை பூஜிக்கின்றார். பிரம்மதேவன் கொடுத்த வரப்படி ரேணுகாதேவியை மகளாக பெறுகின்றார். வளர்ந்து அழகு தெய்வமாக காட்சி தரும் ரேணுகாதேவியை (கெங்கையம்மன்) ஜமத்கனி என்ற முனிவருக்கு திருமணம் செய்து தருகின்றார். இவர்களுக்கு விஷ்ணுவின் அம்சமான பரசுராமன் உள்பட நான்கு குழந்தைகள் பிறக்கின்றன. 

ரேணுகாதேவி தாமரை குளத்தில் நீராடிவிட்டு தன் கற்பு நெறியால் மண்ணில் குடம் செய்து தண்ணீர் எடுத்து வருவது வழக்கம். அப்படி ஒரு நாள் மண் குடத்தில் தண்ணீர் எடுக்க தாமரை குளத்தை நோக்கிய வேளையில் கந்தர்வர் சாயலை கண்டு வியந்து நிற்கின்றார். வியந்து நின்ற மாத்திரமே மண்குடம் கரைந்து மண்ணாகி போகிறது. 

கடும் தவத்தில் பெற்ற ஞானத்தால் ஜமத்கனி முனிவர்  ரேணுகாதேவி கந்தர்வன் அழகில் மயங்கி நெறி பிழன்றதை உணர்ந்து தன் மகன்கள் நால்வரை அழைத்து உன் தாயின் தலையை வெட்டி விடுங்கள் என கட்டளையிடுகின்றார். தாயின் பாசம் மகன்களில் பரசுராமனை தவிர மற்ற மூவரை தள்ளாட வைக்கின்றது. தாயின் தலையை வெட்ட மறுத்து மூவரும் தந்தையின் கட்டளையை உதறித் தள்ளுகின்றனர். 

பரசுராமன் தந்தையின் கட்டளையை தலைமேல் தாங்கி ரேணுகாதேவி தலையை வெட்ட வருகின்றான். மகன் தன்னை வெட்ட வரும் தகவல் அறிந்து உயிரை காத்துக் கொள்ளும் பொருட்டு ஓடுகிறாள். ஓடிவரும் வழியில் பறை சாற்றுபவர் வீட்டில் தஞ்சம் புகுகின்றாள். அங்கும் பரசுராமன் ஆக்ரோஷமாக வருவதைக் கண்டு அங்கிருந்து சலவை தொழிலாளி வீட்டில் அடைகலமாகின்றாள். தந்தை கட்டளையை நிறைவேற்றும் ஆவேசத்துடன் மகன் வருவதை கண்டு ஓடும் ரேணுகாதேவி மீனவர் வீட்டில் கண்ணீரும் கம்பலையுமாக மறைந்து கிடக்கின்றாள்.  

அங்கு வந்த பரசுராமன் தாயின் தலையை வெட்டுகின்றான். தாயின் தலையை வெட்டிய கையோடு ஆறாக பெருகும் கண்ணீருடன் தந்தை முன் நின்ற பரசுராமனிடம் ஜமத்கனி முனிவர், "தந்தை கட்டளையை நிறைவேற்றிய நீ என்ன வரம் வேண்டுமானாலும் கேள்' என்கின்றார். 

மீண்டும் தாயை உயிர்பிக்க செய்யும் வரத்தை பரசுராமன் தந்தையிடம் கேட்க, ஜமத்கனி முனிவர் கொடுத்த வாக்குப்படி வரம் தர, தந்தை தந்த மந்திர நீரை எடுத்து கொண்டு தாயை வெட்டி வீழ்த்திய இடத்துக்கு வருகிறான். அங்கு தாயை மற்றொரு உடலுடன் தவறுதலாக பொருத்தி மந்திர நீரை தெளித்து உயிர் பிழைக்க வைக்கிறான். ஆனந்த கண்ணீருடன் உயிர் பெற்ற தாயை வணங்கி நிற்கின்றான் பரசுராமன். இப்புராணமே, இத்தலத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரசித்திப் பெற்ற திருவிழாவாக நடைபெறுகின்றது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com