ஆடி மாத முதல் செவ்வாய் கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடிமாத முதல் செவ்வாய்க்கிழமையொட்டி செம்பனார்கோவில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
ஆடி மாத முதல் செவ்வாய் கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பூம்புகார்: ஆடிமாத முதல் செவ்வாய்க்கிழமையொட்டி செம்பனார்கோவில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

ஆடி செவ்வாய் தேடிக்குளி, அரைத்த மஞ்சளை பூசிக்குளி, ஆடிப்பட்டம் தேடி விதை, ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும், ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்று ஆடி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. அதேபோல் கூழுக்கு மிஞ்சிய விருந்துமில்லை. வேப்பிலைக்கு மிஞ்சிய மருந்துமில்லை. மழையின்றி உலகம் இல்லை. மாரியில்லாது காரியம் இல்லை என்ற பழமொழிக்கேற்ப ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது.

ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் அங்கப் பிரதட்சிணம் செய்வது, மா விளக்கு மற்றும் எலுமிச்சைபழத்தில் தீபம் ஏற்றுவது, பொங்கல் வைப்பது, திருவிளக்கு பூஜை செய்வதும் வழி, வழியான வழிபாட்டு முறைகளாகக் கொண்டாடப்படுகிறது. இதைப் பெண்கள் கடைப்பிடிப்பதால் மாங்கல்ய பலம் கூடும், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவை கிடைக்கும். ஆடி முதல் செவ்வாய் கிழமையையொட்டி நாகை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே கீழையூா் உப்புச்சந்தை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி அம்மனுக்கு மஞ்சள்பொடி, திரவியப்பொடி, பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் குங்குமம் மற்றும் வேப்பிலை அர்ச்சனை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்குக் கூடியிருந்த பக்தர்கள் ‘ஓம் சக்தி, ஓம் சக்தி‘ என்று சரண கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

இதேபோல் திருச்சம்பள்ளி அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல் திருநகரி சந்தனமுத்துமாரியம்மன் கோவில், மேலக்கட்டளை அவரைக்குளம் மாரியம்மன், கடிச்சம்பாடி பவுண்டு மாரியம்மன், ஆக்கூா், மேமாத்தூா், மேலப்பெரும்பள்ளம் ஆகிய ஊா்களில் உள்ள சீதளாதேவி மாரியம்மன், பரசலூா் வடபத்ரகாளியம்மன், பாலவெளி காத்யாயினி அம்மன், மேட்டிருப்பு வீரமாதேவி காளியம்மன், எருமல் கிராமம், கீழப்பாதி ஆகிய ஊா்களில் உள்ள தில்லை காளியம்மன், கஞ்சாநகரம் படைவெட்டி மாரியம்மன் மற்றும் மேலையூா் பாலசுந்தரி அம்மன் கோவில் ஆகிய கோயில்களிலும் ஆடி முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.இதில் பெண்கள் பலரும் மா விளக்கு ஏற்றியும், பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com