ஏழரைச்சனி கஷ்டமில்லாமல் கழிய குச்சனூரானை சரணடையுங்கள்!

பூலோகத்தில் பிறக்கும் மனித பிறவிகளுக்கு அவர்கள் முற்பிறவியில் செய்த கரும வினைகளின்படி நீதி தேவதையாக இருந்து உரிய...
ஏழரைச்சனி கஷ்டமில்லாமல் கழிய குச்சனூரானை சரணடையுங்கள்!

சனிபகவான் நீல நிறமுடையவர். வலது கையில் அம்பும், மேல் இடது கையில் வில்லும் வைத்திருப்பவர். இவரது கீழ்கையில் வாளும், வரதமும் கொண்டவர். இவர் நீலதேவியின் கணவர். சனிபகவானின் அதிதேவதை யமன். பூலோகத்தில் பிறக்கும் மனித பிறவிகளுக்கு அவர்கள் முற்பிறவியில் செய்த கரும வினைகளின்படி நீதி தேவதையாக இருந்து உரிய நல்வினை தீ வினைகளை அளிப்பவர். எட்டாம் எண்ணுக்குரியவர். ராசிகளில் மகரம், கும்பம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி. பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்களுக்கு நாயகன்.

ஒரு சமயம் சனிபகவான் மீது யமன் கோபம் கொண்டு கதாயுதத்தால் காலில் அடித்து முடமாக்கியதால் ஒற்றைக்காலில் கெந்தி நடப்பவர். முடவன் என்ற பெயர் பெற்றவர். மனித உடலில் நரம்புக்குரியவர். வாதம், பித்தம். கபம் மூன்றில் வாதத்திற்குடையவர்.

சனீஸ்வர பகவான் தலநாயகனாக, முதல் மூர்த்தியாக மற்ற கிரகங்களோடு இணைந்து இல்லாமல் தனித் தெய்வமாக கோயில் கொண்டிருப்பது குச்சனூர் ஒன்றேயாகும். சில தலங்களில் தனியாக இருந்தாலும் அங்கு உப சந்நிதியாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மணி நகரை தலைநகரமாகக் கொண்டு ஆண்ட தினகரன் என்ற மன்னனை, சனிபகவான் ஏழரை ஆண்டுகள் பற்றி வருத்தப் போவதாக இருந்ததை அவரது மகன் சோதிடம் மூலமாக அறிந்தான். அருகில் உள்ள வனத்திற்கு சென்று செண்பகம், கொங்கு முதலிய மரங்கள் அடர்ந்த சோலையில் சுரபி நதிக்கரையில் அமர்ந்து சனிபகவானின் உருவத்தை இரும்பில் அமைத்து மன உறுதியோடு ஆழ்ந்த பக்தியுடன் வழிபட்டு வந்தான். தன்னை ஆழ்ந்த பக்தியோடு வழிபட்ட சந்திரவதனனுக்கு நேரில் காட்சியளித்த சனிபகவான் அவனை நோக்கி உனக்கு என்ன வரம் வேண்டும் என வினவ, தனது தந்தையை பற்றாமல் அதற்கு ஈடாக தன்னை பற்றிக்கொள்ள வேண்டினான். சனிபகவானும் அதனை ஏற்று, ஏழரை ஆண்டினை நாழிகையாக்குவதாகவும் அடுத்த வாரம் பற்றுவதாகவும் கூறி மறைந்து விட்டார்.

அதன்படியே சந்திரவதனனை ஏழரை நாழிகை மூன்று மணிநேரம் பற்றி ஏழரை ஆண்டுகள் அனுபவிக்க வேண்டிய துன்ப நிலையை ஏழரை நாழிகையில் கடுமையாக அனுபவிக்கச் செய்து பின்னர், சந்திரவதனனை அரசனாக முடி சூட்டி அரியணையில் அமர்த்தி அருள்பாலித்து மறைந்துவிட்டார். சந்திரவதனனுக்கு சனிபகவான் அருள்பாலித்த இடமே தற்போதைய குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் கோயிலாகும்.

சந்திரவதனனுக்கு மூடி சூட்டிவிட்டு சனிபகவான் மறைந்து விடுகிறார். பிறகு அனைவரும் சந்திரவதனன் சனிபகவானை இரும்பில் உருவமைத்து வழிபட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு கரியமேகம் திரண்டு உருப்பெற்று சூரிய ஒளியோடு பிரகாசித்து கொண்டு பூமியைப் பிளந்து வெளிவந்ததைப் போன்று சனிபகவான் சுயம்புவாக தோன்றி பேரழகோடு காட்சியளித்தார். மன்னர், அனைவரும் சனி பகவானின் திருவுருவத்தைக் கண்டு அதிசயித்து துதித்து வணங்கினர். அந்த செண்பக மரங்கள் அடர்ந்த சோலையில் ஒரு மரத்தின் நிழலில் சனி பகவான் எழுந்தருளியதைக் கண்டு அந்த இடத்திலேயே சிறிய கோயில் கட்டி குச்சுப்புல்லால் வேய்ந்தனர். ஆதியில் செண்பகநல்லூர் என அழைக்கப்பட்டு பின்னர் குச்சுப்புல்லால் வேய்ந்த குடிலில் சனிபகவான் எழுந்தளியதால், சனீஸ்வர பகவானுக்கு குச்சனூரான் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

சனிபகவான் நெற்றியில் திருநாமம் தரித்தும், விபூதி பட்டையும் அணிந்துள்ளார். முப்பெரும் தெய்வங்களான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் சேர்ந்து ஜக்கியமாகி இருப்பதால் மூலவருக்கு ஆறு கண்கள் இருக்கின்றன. சனீஸ்வர பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து நீங்கியத் தலம் இது.

அரூப வடிவமான இங்குள்ள சனிபகவானின் லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டே இருப்பதால் மஞ்சனக் காப்பு கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சனி தோஷம் உள்ளவர்கள் தங்கள் குறைகளை உணர்ந்து இங்கு வந்து வேண்டிக்கொண்டால் சனீஸ்வர பகவான் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பார் என்பது ஐதீகம்.

சனிபகவான் எழுந்தருளியுள்ள மண்டபத்தையொட்டி வலப்புறமாக சுப்பிரமணிய சுவாமி, அடுத்து விநாயகப்பெருமான், இடப்புறமாக லாட சன்னியாசி, சற்று தூரத்தில் வாய்க்கால் கரையில் சோணைக் கருப்பண சுவாமி , அதன் அருகில் கன்னிமார் மற்றும் நாகர் என்று எழுந்தருளியுள்ள தெய்வங்கள் அனைத்திற்கும் கோயில்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்திருத்தலத்தில் ஆடிப் பெருந்திருவிழா, ஜூலை 21 -ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 18 -ஆம் தேதிவரை நடைபெறும். வரும், 21.7.2018 - அன்று கலிப்பணம் கழித்து, சுத்தநீர் தெளித்தல், கொடியேற்றம், இரவு சிறப்பு பூஜை நடைபெறும். 28.7.2018 - அன்று சிறப்பு பூஜையும்; 03.08.2018 அன்று பகல் 12.30 மணியளவில் திருக்கல்யாணமும்; 4.8.2018 - சக்தி கரகம் எடுத்தல்; இரவு 12.00 மணிக்கு மஞ்சனக்காப்பு சாத்துப்படி செய்தல்; 05.08.2018 - சிறப்பு பூஜை, இரவு சுவாமி புறப்பாடு, வீதிவுலா நடைபெறும்.

வழித்தடம்: தேனி-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில், சின்னமனூரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது குச்சனூர். தொடர்புக்கு- 97900 50167/ 73056 36626.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com