இரவில் கண்விழித்து பகலில் தூங்குபவர்களுக்கு ஜோதிடம் கூறும் ரகசியங்கள் இதோ!

இரவில் கண்விழித்து பகலில் தூங்குபவர்களுக்கு ஜோதிடம் கூறும் ரகசியங்கள் இதோ!

மனித இனம் தோன்றிய காலம் முதல் தற்போது வரை மனிதர்கள் இயற்கையைச் சார்ந்து தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் விடும் மூச்சுக்காற்று, தண்ணீர், வெப்பம் உணவு உள்பட அனைத்தும் இயற்கையில் இருந்து தான் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால் நாகரிகமும், தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்ததும், மனிதர்களாகிய நாம் இயற்கையை எதிர்த்து வாழ முயற்சி செய்து வருகிறோம். நமது உடலமைப்பின்படி, இரவு பத்து மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில், சூரியன் 

உதிக்கும்போது உள்ள வெப்பத்தில், நமது உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். அதேபோல் இரவு நேரத்தில் சில ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கும். இது மனிதன் வளர்ச்சி அடைந்த சுமார் 40 லட்சம் ஆண்டுகளாக நமது உடலில் நடைபெற்று வரும் இயற்கையான சுழற்சி ஆகும். முக்கியமாக, மெலோட்டலின் என்கிற ஹார்மோன் இரவில் தூங்கும்போது மட்டும், அதுவும் அறையில் வெளிச்சம் இல்லாமல் தூங்கும்போது மட்டுமே சுரக்கும். 
 
ஒருவர் எவ்வளவு சம்பாதித்தாலும் எத்தனைக் கோடி சொத்து வைத்திருந்தாலும் அவருக்குத் தூக்கம் வரவில்லை என்றால் அத்தனை சொத்துக்களும் வீண்தான். ஆரோக்கியத்துக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படித்தான் தூக்கமும். நிம்மதியான தூக்கம் இல்லையென்றால், நோய் எதிர்ப்பு சக்தி, உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு முதல் இதய குறைபாடுகள் வரை அதன் விளைவுகள் அதிகம். தூக்கமின்மை குறைபாடுகளுக்கு என்ன காரணம், என்ன சிகிச்சை என்பதில் மருத்துவர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

மின்சாரத்தின் தாக்கம் இல்லாத நாட்களில் அனைவரும் இரவு ஏழு மணிக்குள் உணவு உண்டு பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு எட்டு மணிக்குள் தூங்க சென்றுவிடுவர். அது ஒரு காலம். ஆனால் இப்பொழுதோ இரவில் தூங்குவது என்ற நிலையே மாறி ஏதேதோ காரணங்களுக்காக கண்விழித்து பின் காலையில் தூங்க செல்கிறார்கள். தேர்வு நேரத்தில் கண்விழித்து படிப்பது, இரவு வேலையின் காரணமாக கண் விழிப்பது, என்றோ ஒருநாள் தூக்கம் வராமல் இப்படி ஆவது. என்பது எல்லாம் தனி. 

எந்த உடனடி காரணமும் இல்லாமல் தொடர்ந்து இரவுகளில் கண் விழிப்போர் பெருகிக்கொண்டிருக்கின்றனர். இதன் விளைவுதான், தற்காலங்களில் புதிது புதிதாகப் பெருகிப் பெருக்கெடுக்கும் நோய்கள். இரவுத் தூக்கம் தள்ளிப்போவதற்கும், நோய்களின் வருகைக்கும் நேரடித் தொடர்பு உண்டு. தவறான வாழ்வியல்முறைகளால் ஏற்படும் உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது. 

ஆக மனிதக் குலத்தில் பிறந்த அனைவருமே இரவில் உறங்கத்தான் விரும்புகின்றனர். அதுதான் இயற்கையின் வரமும். ஆனால் இரவில் தூங்காதவர்களை சூழ்நிலை தான் உருவாக்குகிறது எனக் கூறலாம். 

இரவின் தூக்கத்தை கெடுக்கும் சூழ்நிலைகள்:

1. தேநீர், காபி மதுபானங்கள், போதைப் பொருட்கள், புகை பிடிப்போர் மற்றும் புகையிலையை வாயில் மென்று கொண்டிருப்போர் அவர்களுக்கெல்லாம் தூக்கம் என்பது குறைபாடாகவே இருக்கும். பாதிப்பை ஏற்படுத்தும் பல நோய்களை உண்டாக்கும். குறிப்பாக நரம்புத் தளர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்துகிறது. ஆகவே மேற்கண்டவற்றை தவிர்க்கவும்.

2. நல்ல காற்றோட்டமில்லாத படுக்கையறை அதிக வெளிச்சம் உள்ள படுக்கை அறை, அதிக சத்தம் உள்ள படுக்கை அறைகளில் உள்ளவர்களுக்குத் தூக்கமின்மை ஏற்படும். உதாரணமாக டேப்ரிக்கார்டர், தொலைக்காட்சிப் பெட்டி தொலைப்பேசி மற்றும் அலைபேசி படுக்கையறையில் வைத்துக் கொள்வதை தவிர்க்கவும். அவைகள் தூக்கத்தைக் கெடுக்கும். 

3. இரவில் அதிகமான உணவு உண்பதாலும் குறிப்பாக 11 மணிக்கு மேல் உணவு அருந்திவிட்டு உடனடியாக உறங்கப்போவது அல்லது உணவு உண்ணாமல் பட்டினியாக தூங்குவது தூக்கத்தை கெடுக்கும். பயத்தின் காரணமாகவும், தூக்கத்தைக் கெடுக்கும் அல்லது நாலைந்து நபர்களுடன் படுக்கையில் படுத்தாலும் சிலருக்கு தூக்கத்தைச் சிதறடிக்கும். நபர்களுக்கும், அதிக உடல உழைப்பு உள்ள நபர்களுக்கும் அதனால் ஏற்படும் அசதி உடல்வலி காரணமாகத் தூக்கம் சிரமப்படும்.

4. நல்ல சுகாதாரமற்ற படுக்கை, கடுமையான குளிர், கடுமையான வெயில் காரணமாக தூக்கமின்மை ஏற்டும். பகலில் தூங்குபவர்களுக்கும் இரவு வேளை பணியில் ஈடுபடுபவர்களுக்கும் தூக்கம் பாதிக்கப்படும்.

5. உள்ளூரில் வேலை வாய்ப்பின்மை மற்றும் அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு பலர் வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியச் செல்கின்றனர். அவர்கள் அந்த நாட்டின் பகல் பொழுதில் விழித்திருக்க வேண்டிய அவசியத்தால் தங்கள் தூக்கத்தைத் தொலைக்கின்றனர்.   

ஆக பகல் தூக்கம் என்பதை யாரும் விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை. இரவில் தூங்காமல் இருப்பதால் அதை சமன் செய்ய பகலில் தூங்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றதேயன்றி இரவின் தூக்கத்தை தவிர்த்து பகலில் தூங்க யாரும் விரும்புவதில்லை. 

இரவில் தூங்காமல் பகலில் தூங்குவதற்கான ஜோதிட காரணங்கள்

1.நன்றாக தூங்கினாலும் சரி! தூக்கமின்மையால் அவதியுற்றாலும் சரி! அதனால் பாதிப்படைவது மூளைதான். மேலும் தூக்கமின்மைக்கும் நரம்புகளுக்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது. இந்த மூளைக்கும் நரம்பிற்கும் அதிபதியான வித்யாகாரகனான புதபகவான்தான் தூக்கத்திற்கு முக்கிய காரக கிரகமாகும். ஒருவருக்கு மூளை கோளாறுகள், மன அமைதியின்மை, கோமா நிலை போன்றவற்றையெல்லாம் புதனின் அசுப சேர்க்கைகள் ஏற்படுத்திவிடுகிறது.

2. ஒருவருக்கு இரவில் நல்ல தூக்கம் வேண்டுமென்றால் அவருக்கு நல்ல மனநிலை வேண்டும். அதிக மகிழ்ச்சி, கோபம், அதிக பயம் இதுபோன்ற உணர்வுகள் தூக்கத்தை கெடுத்துவிடுகிறது. ஆக ஒருவருக்கு நல்ல மனோநிலை அமையச் சந்திரனின் அருளாசி முக்கியமானதாகும்.

3. இரவின் காரகன் சந்திரன் ஆகும். அந்த சந்திரன் ஒருவர் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்பதை பொறுத்தே ஒருவரின் இரவு பொழுதின் தன்மையையும் தூக்கத்தையும் தீர்மானிக்கமுடியும். இரவில்தான் தூங்கவேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டுவிட்டால் அவருக்கு தூக்கம் என்பது ஏக்கம் நிறைந்ததாகவே இருக்கும்.

4. அடுத்ததாகத் தூக்கத்தை தீர்மானிக்கும் கிரகம் சுக்கிரன் ஆகும். சுக்கிரன் என்றாலே சுகம்தான் நினைவிற்கு வரும். நல்ல சுவையான உணவு (சுக்கிரன்), குளுமையான சூழ்நிலை (சுக்கிரன்) இனிமையான இசை (சுக்கிரன்) வசதியான படுக்கைகள் மற்றும் நறுமணம் மிக்க மலர்கள் மற்றும் சுவை நிறைந்த பழங்கள் (சுக்கிரன்) கூடவே அழகான மற்றும் அன்பான மனைவி (சுக்கிரன்) இவையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போதே இனிமையும் தூக்கம் வருவது போன்ற உணர்வும் ஏற்படுகிறதல்லவா. இவையெல்லாம் சுகமானதாகவும் சுவை மிக்கதாகவும் அமைய ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக அமைய வேண்டும்.

5.ஒரு ஜாதகத்தில் புதன் சந்திரன் சுக்கிரன் ஆகிய மூன்றும் கேந்திர பலம், திரிகோண பலம் பெற்று நல்ல நிலையில் அமைந்துவிட்டால் அவர்கள் வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருப்பதோடு இனிமையான தூக்கத்திற்கு குறைவிருக்காது. இந்த மூன்று கிரகங்களில் ஒரு கிரகம் பலமிழந்துவிட்டாலும் அந்த ஜாதகரின் தூக்கம் சுகமானதாக அமையாது.

6. கர்ம வினைக்கும் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தவறான காரியங்கள் தொடர்ந்து செய்யும் ஒருவரின் கர்மவினையால் தூக்கம் கேள்விக்குறியாகிவிடும். கர்ம வினையைத் தெரிவிக்கும் கிரகங்கள் சனி, ராகு, கேது மற்றும் குருவாகும். சனி, ராகு மற்றும் கேது லக்னத்திலோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானங்களிலோ அல்லது கேந்திர திரிகோணங்களிலோ அல்லது லக்னாதிபதி, சந்திரன் மற்றும் சூரியனோடு நின்று கர்ம வினையைத் தெரிவிக்கும் கிரகங்களாகும். குரு மறைமுகமாகக் கர்ம வினையைத் தெரிவிப்பவர் ஆவார்.

7. பாவக ரீதியாக ஒருவர் தூக்க சுகத்தை அனுபவிக்க லக்ன பாவம் பலமாகவும் அசுப கிரகங்கள் தொடர்பில்லாமலும் சுப கிரக சேர்க்கையும் பெற்று இருக்க வேணெடும். ஒருவர் ஜாதகத்தில் லக்னம் கெட்டுப்போன நிலையில் எந்தக்கிரகம் எந்த சுகம் தந்தாலும் அது ஒட்டைப் பாத்திரத்தில் நிரப்பிய நீர் போன்று ஜாதகருக்கு பலனளிக்காமல் போய்விடும். சூரியன் முதல் பாவத்துக்கு அதிபதி மற்றும் ஆத்ம காரகன் ஆகின்றார். மற்றும் செவ்வாய் காலபுருஷ ராசிக்கு லக்னாதிபதி ஆகின்றார். இவர்களின் நிலையும் நிம்மதியான தூக்கத்திற்கு முக்கியமானதாகும்.

8. அடுத்தது தூக்கத்திற்கென்றே ஜாதகத்தில் சிறப்பித்து கூறப்பட்ட பாவம் 12ம் பாவமாகும். எனவேதான் இதனை அயன சயன போக மோக்ஷ ஸ்தானம் என சிறப்பாக கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் பன்னிரெண்டாம் பாவம் வலுவாகவே கூடாது. தூக்கத்தைப் பொருத்தவரை 12ம் பாவாதிபதியின் நிலையைக் கொண்டும் அதனோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களை கொண்டும் தூக்கத்தின் தன்மையை தீர்மானித்துவிடலாம். 12ம் பாவத்தில் சுப கிரகங்கள் இருப்பது சிறப்பல்ல. புதனோ சுக்கிரன் அல்லது சந்திரன் இவர்கள் யாராவது ஒருவர் 12ம் பாவத்தில் நின்றுவிட்டால் அவர்கள் தூக்கம் முறையற்றதாக எப்போது வேண்டுமானாலும் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். காலபுருஷனுக்கு 12ம்பாவ அதிபதியான குரு கெட்டுவிட்டால் அவர்களுக்கு நல்ல தூக்கம் என்பது கனவில் கூடக் கிடைக்காது. பன்னிரெண்டாம் பாவத்தை அசுப கிரஹங்கள் தசா புத்தி மற்றும் கோசார நிலையில் தொடர்பு கொள்ளும் நிலையில் இதுபோன்ற தூக்க கோளாறுகள் ஏற்படும்.

9. லக்னத்தில் மாந்தி நின்றால் அவர்களுக்கு மாந்தியை ஒவ்வொரு மாதமும் சந்திரன் கடக்கும்பொழுதெல்லாம் தூக்கம் தடைப்படும். மேலும் மாந்தியோடு சந்திரன் சேர்க்கையும் பெற்றுவிட்டால் வாழ்நாள் முழுவதும் தூக்கம் ஒரு பகல் கனவு தான். லக்னத்தில் நிற்கும் மாந்தி தனது 2-7-12 பார்வையால் இரண்டு ஏழு பன்னிரெண்டு வீடுகளை பார்ப்பதால் தூக்கமின்மை ஒரு வியாதியாகவே அமையும்.

10 அடுத்தது தூக்கத்தினை தீர்மானிக்கும் பாவங்கள் சுகஸ்தானம் எனப்படும் 4ம் பாவம், பாவாத்பாவத்தில் 4-க்கு 4-ஆன. ஏழாம் பாவம் எனப்படும் களத்திர ஸ்தானமும் 7க்கு 4-ஆன பத்தாம் பாவம் எனப்படும் கர்ம ஸ்தானமும் ஆகும். காலபுருஷனுக்கு கேந்திரவஸ்தானங்களிலோ அல்லது ஜெனன ஜாதக கேந்திர ஸ்தானங்களிலோ சனி அமர்ந்துவிட்டால் அவர்களுக்கு ஆயுள் முழுவதும் கோழி தூக்கம்தான். 

11. ஒருவர் ஜாதகத்தில் சுகஸ்தானம் கெட்டுவிட்டாலோ அல்லது சுகஸ்தானாதிபதி அசுப சேர்க்கை பெற்று விட்டாலோ அவர்களின் சுகம் மற்றும் தூக்கம் கேள்விக்குறிதான். அவர்களுக்கு அன்னை மற்றும் அன்னைக்கினையான பெண்களாலும் சொத்துக்களாலும் வாகனங்களாலும் தூக்கம் பறிபோகும்.

12. கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு நல்ல கணவனும் அமைவது இறைவன் கொடுத்த வரமாகும். ஒருவர் ஜாதகத்தில் கணவன் மனைவியைப் பற்றி குறிப்பிடுவது ஏழாம் பாவமாகும். ஏழாம் பாவத்தில் அசுப கிரஹங்கள் நின்றுவிட்டால் கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் தூக்கத்தை கெடுத்துக்கொள்ளக் காரணமாவார்கள். 

13. சுகஸ்தானமான 4ம் பாவத்திற்கு 7ம் பாவம் பத்தாம் பாவமாகும். எனவே ஒருவருடைய சுகமும் வேலையின் தன்மையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகும். ஒன்று வலுக்கும்போது மற்றொன்று செயலிழந்துவிடும். ஒருவர் தூக்கமே கதி என்று இருப்பதும் வேலையே கதி என்று இருப்பதும் தீர்மானிப்பது இந்த இருபாவ தொடர்புகளாகும். அமைதியான தூக்கத்திற்கான பரிகார ஸ்தலங்கள்:

14. லக்னத்தில் ராகு கேது அமையப்பெற்றவர்கள், லக்னம், லக்னாதிபதி, சந்திரன் ராகுவின் சாரத்தில் அதாவது திருவாதிரை, சுவாதி, சதயம் நக்ஷத்திர சாரங்களில் நின்றுவிட்டால் அவர்களின் தசா புத்தி காலங்களில் அந்நிய நாட்டு கலாச்சாரத்திற்கு உட்பட்டு தூக்கத்தை தொலைப்பர்.

15. கோசாரக சனி சந்திரனை தொடர்பு கொள்ளும் காலங்களில் முக்கியமாக ஏழரை சனி காலங்களில் மற்றும் சனி தசை சந்திர புத்தி மற்றும் சந்திர தசை சனி புத்தி காலங்களில் சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் விதமாக இரவு நேர வேலைக்குச் சென்று தூக்கத்தை தொலைக்க நேரிடும். அந்த தசா புத்தி காலங்கள் முடிந்தவுடன் இரவு தூங்கும் நிலை ஏற்படும். 

16. கோசாரக சனி ராகு மற்றும் கேதுவை தொடர்பு கொள்ளும் காலங்களிலும், கோசராக ராகு, கேது ஜெனன சனியை தொடர்பு கொள்ளும்போதும் வேலையிழப்பின் காரணமாகக் கவலை மற்றும் விரக்தி நிலையில் இரவில் தூங்காத நிலை ஏற்படும்.

இரவில் நிம்மதியாகத் தூங்க ஜோதிட பரிகாரங்கள்

கும்பகோணத்தில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் இருக்கும் திருவெண்காடு புதன் ஸ்தலமாகும். தனி சன்னதியில் புத பகவான் அருள்புரிகிறார். மதுரையில் மீனாட்சி அம்மன் புதன் அம்சமாகவே இருக்கிறார். நவதிருப்பதிகளில் திருப்புளியங்குடி புதன் ஸ்தலமாகும்.

சந்திர ஸ்தலங்கள்:

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திங்களுர், திருப்பதி மற்றும் குணசீலம், சோமநாதேஸ்வரர், போன்றவை திங்கள் பரிகார ஸ்தலங்களாகும். மேலும் சந்திர தரிசனம் செய்வது, சோமவார பிரதோஷ வழிபாடு செய்வது போன்றவை தூக்க பிரச்னைகளை தீர்க்கும்.

சுக்கிர பரிகார ஸ்தலங்கள்:

கஞ்சனுர், ஸ்ரீரங்கம், மற்றும் திருமயிலை அருள்மிகு வெள்ளீஸ்வரர் ஆலயங்கள் சுக்கிரன் பரிகார ஸ்தலங்களாகும்.

மாந்தி கோயில்:

கும்பகோணம் நாச்சியார் கோயில் அருகில் உள்ள திருநரையூர் எனும் ஸ்தலத்தில் உள்ள அருள்மிகு ராமநாதேஸ்வரர் ஆலயத்தில் ஜேஷ்டா தேவி, மந்தா தேவி ஸமேதராகவும், மாந்தி மற்றும் குளிகன் ஆகிய புத்திரர்களுடன் குடும்ப சனியாக காட்சி தரும் மங்கள சனியை சனிக்கிழமை மற்றும் அஷ்டமி தினங்களில் வணங்கி வர மாந்தி தோஷத்தால் ஏற்படும் தூக்கமின்மை வியாதி நீங்கும்.

மொத்தத்தில் காம க்ரோத, மோக, லோப மத மாச்சர்யம் என்னும் ஆறு விஷயங்களை மனதில் இருந்து நீக்கிவிட்டுப் படுக்கையில் விழுந்தால் அடுத்த ஐந்தாவது நிமிடம் சொர்கலோகம் தான். அட என்னங்க நீங்க! அதுக்குள்ள கொட்டாவி விடுறீங்க! நிம்மதியான தூக்கத்திற்கு வாழ்த்துக்கள்!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com