அசதியாக இருக்கும் பாங்கேவிஹாரி தூங்கட்டுமே..!

அசதியாக இருக்கும் பாங்கேவிஹாரி தூங்கட்டுமே..!

பிருந்தாவனத்தில் இப்போதும் கண்ணன் பல லீலைகளைச் செய்துகொண்டிருக்கிறான்.

பிருந்தாவனத்தில் இப்போதும் கண்ணன் பல லீலைகளைச் செய்துகொண்டிருக்கிறான். அவனோடு தினமும் விளையாடும் பக்தர்கள் பலர் இன்றும் ஸ்ரீவனத்தில் வசிக்கிறார்கள்.

பிருந்தாவனத்தில் மிகவும் ப்ராசீனமான கோவில் ஸ்ரீ பாங்கேவிஹாரியின் கோவிலாகும். பரம பக்தையான மீரா அரண்மனையைத் துறந்து பிருந்தாவனம் வந்தபோது தன் நகைகளைக் கழற்றி பாங்கேவிஹாரியின் உண்டியலில் போட்டாள் என்று அவளது சரித்திரம் சொல்கிறது.

ஒரு சமயம், பிருந்தாவனத்தில் மாடு மேய்க்கும் கோபாலச் சிறுவன் ஒருவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிற்று. கண்ணன் அவனுக்குப் பதிலாக வீடு வீடாகச் சென்று மாடுகளைக் கூட்டிக்கொண்டு புல்வெளிகளில் மேய்த்துவிட்டு, மறுபடி அத்தனை மாடுகளையும் அவரவர் வீடுகளில் கொண்டுவிட்டுவிட்டு அந்தச் சிறுவனோடு சற்று விளையாடிவிட்டு தன் கோயிலுக்குத் திரும்பினான். அப்போது நள்ளிரவு கடந்து அதிகாலை 3 மணியாகிவிட்டது. 

கோயில் வாசலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த ஒரு வயதான சாது கண்ணன் மாடுகளை மேய்த்துவிட்டு புழுதிக்கோலத்தோடு கோயிலினுள் நுழைவதைப் பார்த்து விட்டார். பின்னர் ஒன்றுமறியாதவர்போல் படுத்து உறங்கியும் விட்டார். அதிகாலை 5 மணிக்கு ப்ரபோதனம் செய்ய பண்டாக்கள் வந்து கோயிலைத் திறக்கமுயன்றபோது, அந்த சாது கோயிலைத் திறக்கக்கூடாது என்று ரகளை செய்ய ஆரம்பித்தார்.

பண்டாக்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

இவரோ, கான்ணண் மாடு மேய்ச்சுட்டு இப்பத்தான் வந்திருக்கிறான். குழந்தையை 2 மணி நேரம்கூட தூங்கவிடமாட்டீர்களா என்று கத்திக்கொண்டு கோயில் வாசலின் குறுக்கே படுத்துக்கொண்டு திறக்கவிடாமல் செய்து கொண்டிருந்தார்.

கோயில் முறைகளை மீற இயலாது என்று அவரை அடித்து விரட்ட முற்பட்டபோது, கண்ணனே ஒரு பண்டாவிடம் பாவ ஆவேசமாக வந்து அவர் சொல்வது உண்மைதான். நான் மாடு மேய்த்துவிட்டு இப்போதுதான் வந்தேன். எனக்கு அசதியாக இருக்கிறது. என்று சொன்னான்.

எல்லோரும் அந்த சாதுவை வணங்கினார்கள். அன்றிலிருந்து பாங்கேவிஹாரி கோவிலின் சந்நிதி காலை 9 மணி வாக்கில்தான் திறக்கப்படுகிறது. 

- மாலதி சந்திரசேகரன். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com