காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-10

நூற்று ஐம்பது ஆண்டுகளாக இருபிளவாகப் பிளந்து காணப்பட்ட, தென்காசி கோபுரம் செய்த தவத்தின்...
காசி விஸ்வநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-10

தவமிருந்த கோபுரம்

நூற்று ஐம்பது ஆண்டுகளாக இருபிளவாகப் பிளந்து காணப்பட்ட, தென்காசி கோபுரம் செய்த தவத்தின் பயனாய், ஈசன் அதற்கு இசைந்து அதற்கான நாளினை அருளினான்.

பராக்கிரமப் பாண்டியன் எழுப்பிவித்த கோபுரம் தீ சிதைவுக்குப் பின், கோபுரத் திருப்பணி மேற்கொள்ளவும், கோயில் திருப்பணி செய்யவும், மிகுதிப் பொருளுடைய மேன்மக்கள் பலரால் தொடர்ந்து காலங்காலமாக முயற்சித்து வந்தனர்.

1948-ல் திருப்பணிக் குழு உருவாக்கப்பட்டது. திருப்பணி என்னமோ' நடந்துகொண்டு தானிருந்தது. ஆனால், கோபுரத்தை செப்பனிடப் படாமலே இருந்து வந்தன. 1948-ல் குடமுழுக்கு மட்டும் நடந்தது. பின்பு, வனவாசம் மாதிரி பதினான்கு ஆண்டுகளுக்குப் பின், தென்காசிக் கோபுரத்தை சீர்செய்ய நல்ல காலம் பிறந்தன எனச் சொல்லலாம்!

ஆம்!..1962-ஆம் ஆண்டு தமிழகத்திற்கு முதல்வராயிருந்த காமராஜர் அவர்கள், தென்காசிக்கு வருகை தருவித்திருந்தார். அப்போதெல்லாம், பொதுக்கூட்டம் கூட்டுவதாயின், தென்காசி காசிவிசுவநாதர் ஆலய முன்புள்ள திடலில்தான் நடத்துவார்கள். அதுபோலத்தான், காமராஜர் சிறப்புரை ஆற்றுவதற்கென தென்காசி காசிவிசுவநாதர் ஆலயம் முன்பு மேடையிடப்பட்டது.

மேடையிலே சிறப்புரையும் ஆற்றிவிட்டு, கண் முன்னே தீக்கரியுடன் பிளவான கோபுரத்தைக் கண்டு காமராஜர் கண் கலங்கினார். உடனேயே அங்கேயே வைத்து..... பிளவுபட்ட கோபுரத்தை சீர்செய்யாதிருப்பது, "ஆலயத்துக்கு அழகல்ல!, ஊருக்கும் நல்லதல்ல!" என்று கூறி கோபுரத்தைக் கட்டுவதற்கென்று பி.டி.ராசன் தலைமையில் ஒரு கமிட்டியை உருவாக்கி, ஐ.ஏ. சிதம்பரம்பிள்ளை அவர்களை ஆலோசனை களராக்கியும், ஆர்.ஆர்.கருடலிங்க நாடாரின் ஒத்துழைப்புகளுடன் திட்டம் அமைத்தார் காமராஜர்.

காமராஜரின் ஆணைக்கிணங்க, ஆர். ஆர்.கருடலிங்க நாடாருடன், தென்காசி பெருவணிகர் பிச்சையாண்டிச் செட்டியாரும், கோயில் மேலாளருடன் மதுரையில் வைத்து பி.டி. ராசன் அவர்களுடன் திட்டங்கள் பேசப்பட்டது. அப்போது பொது மக்களிடமிருந்து நாலரை இலட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டிருந்தது. பிளவான கோபுரத்தை இடித்து பொடியாக்க மட்டும் இரண்டரை லட்சம் செலவாகிப் போனது.

மீதமிருக்கும் இரண்டு லட்சத்தைக் கொண்டு கோபுரத்தை புனரமைப்பது என்பது முடியாத காரியம் என்று எண்ணி, முன்போலவே, மேலும் ஐந்து வருடங்கள் கழித்து ஆலயத்துக்குத் திருப்பணிகள் செய்வித்து 1967 கும்பாபிஷேகத்தை நடத்திவித்தனர்.

காமராஜர் ஒப்படைத்த பொறுப்பை நிறைவேற்ற எவ்வளவோ போராடினார் ஆர்.ஆர்.கருடலிங்கநாடார். அது முடியாமற் போயிற்று. கோபுரம் செய்த தவக்காலம் நெருங்கி அருளிவரவில்லை போலும்!", அவன் கோவிலை கட்டுவிக்கவும் அவன் அருள் வேண்டுமே! பிறகு நாம் என்ன செய்தால் அது முடியும்?.

பொதுவாக நாயன்மார்கள் காலத்தில் எவ்வளவோ அதிசய நிகழ்வுகளெல்லாம் நிகழ்ந்தன. திருநீலகண்டர், மாற்றாளிடம் சென்ற செயலைவிட, "என்னைத் தீண்டாதே! இது திருநீலகண்டர் மீது ஆணை" என்ற  மனைவியின் பக்திக்கும், ஈசன் செய்த சோதனைக்கும் திருநீலகண்டரை வெல்ல வைத்தவன் அந்த இறைவன்.

"திருநீலகண்டத்துக் குயவனார்க்கு அடியேனானோம்"

இயற்பகையாரிடம் ஈசன், "பொருளை வேண்டி வந்துள்ளேன், நான் கேட்பதை அளிப்பதானால் இயம்புவேன்" என ஈசன் கேட்கவும், "கேட்கும் பொருள் என்னிடமுள்ளதாயின் ஐயமில்லாமல் தருகிறேன்" என்று இயற்பகையார் கூறவும், "உன் காதல் மனைவி வேண்டும்" என ஈசன் கேட்க,..... தருகிறேன் என்று வாக்கிற்கு இயற்பகையாரை வெல்ல வைத்தவர் அந்த இறைவன்.

"இல்லையே எண்ணாத இயற்பகைக்கும் அடியேனானோம்!"

செல்வமும் பொருளாதாரமும் அழிந்து போயின பின்பும், அடியார்க்கு அமுது செய்ய ஒன்றுமில்லாதிருந்தும், அமுது செய்விக்க சிந்தித்தாரே இளையான்குடிமாறனார். (நம்மிடம் இல்லாததை ஒருவர் கேட்டிருப்பின் இல்லையே என பட்டெனச் சொல்லிவிடுவோம்!) ஆனால், அடியார்க்கு அமுது செய்விக்க, அவர் விதைத்த நெல்லை எடுத்து வந்து அமுதாக்க வயலுக்கு ஓடினார்.

அதுவும் எப்படியான சூழ்நிலையில்?...பெருத்த மழையில், வயலெல்லாம் வெள்ளம். வரப்பெல்லாம் வெள்ளத்தில் மூழ்கிப்போய், விதைத்த களத்தை தேடிப்பிடித்து, வெள்ளத்தினுள் மூழ்கியிருந்த, நேற்று விதைத்த நெல்மணிகளை இன்று கைகளால் அரிஞ்சியெடுத்து............அதன்பிறகும் என்னவென்ன சொல்லொன்றாத் துயரச் சோதனை, இளையான்குடிமாறனார் வென்றெடுக்க, நடத்தியவன் அந்த இறைவன்.

"இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேனானோம்!"

எதிரியே என்றாலும் அவன் சிவநாம அடையாளத்துடன் இருக்க, தலை தாழ தலையிழந்தார். மெய்ப்பொருளாரை வெல்ல வைத்தவன் இறைவன்.

"வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளார்க்கும் அடியேனானோம்!

யானை இழுத்தும் நிமிராத லிங்கத்தை, சங்கிலியை லிங்கத்துடன் கட்டி, தன் கழுத்தில் பிணைத்து இழுத்தால் தன் கழுத்து அறுந்து போகும் எனத் தெரிந்தும், ஈசன் மீது கொண்ட காதலால், இழுத்தாரே குங்கிலியக் கலயனார், அதனால் ஈசன் நிமிர, குங்கிலியக்கலயர் வென்றார். அது யாராலே அந்த இறைவனாலே!

"கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேனானோம்!"

அது போலத்தான்...அதெல்லாம் அந்தந்த நாயன்மார்களால் அருளப்பட வேண்டும் என்பது இறைவனின் குறிப்பு. ஒரு நிகழ்வின் பேரதிசயத்தை ஒரு நாயன்மாரால் நிகழ்த்தும்போதுதான் அந்த நாயன்மாரின் பக்தி மதிப்பீடு, உலகிற்கு அறியப்பட வைப்பதென்பது இது அவன் திட்டம். ஆதலால்தான் இந்தத் தென்காசி கோபுரத்தை புனரமைக்க நம்மாலதனது ஒன்றும் ஆகவில்லை. அதற்கு ஈசன் தான் அருள வேண்டும்! பிளவுபட்ட கோபுரம் தவமிருந்த காலமும் கனிவாகி வரவில்லை போலும்.

1967-ல் கும்பாபிஷேகம் நடந்த பின்னும் மேலும் அடுத்த வனவாசமாக மீண்டும் பதினான்கு ஆண்டுகள் கழிந்து போயின. 1981-ல் பா.சிவந்தி ஆதித்தன் அவர்கள் தென்காசிக் கோயிலுக்குக் திருப்பணிக்குழுத் தலைவரானார். பா.சிவந்தி ஆதித்தனாரின் தீவிர முயற்சியாலும், பிளவுபட்ட கோபுரம் தவமிருந்த காலம் கனிந்து மகிழ்வுறும் நாள் நெருங்கியதாலும், இறைவன் அருளிட வந்தான் போலும்.....

1982-ல் கட்டிடக் கால்கோள் விழா தொடங்கப்பட்டது. 1983- ல் திருப்பணிக்கான பூசை தொடங்கப்பட்டது. பூஜா வேதமந்திரங்கள் ஒலித்த வண்ணமிருந்தன.
நடுநிசியில் தீய தேவதைகள் விலகிச் செல்ல, பலிபூசையும் நடத்தப்பட்டது. பூசை முடிந்த சில நொடிகள் தான் தாமதம்..............

"வந்தே விட்டான்!

ஆமாம்  இறைவன்!" வந்து விட்டான்

மழையுருவில் வந்திறங்கி பூமிக்கு வந்து பிளபுபட்ட கோபுரத்திடம் வரம் யாது? என கேட்டுக் கொண்டான். "ரிஷபாரூடனாக எழுந்து பிளவுபட்ட கோபுரத்திற்கு காட்சி கொடுத்து, தீ பிளவான அவனைத் திரும்ப தன்னில் அழைத்துக் கொண்டான் இறைவன்." 

ஆமாம், பூசை முடிந்த சில நொடிகளில் மேலும் பெருத்த மழை பெய்து தீர்த்தது. அதுவும் தென்காசி நகரில் மட்டும். தென்காசி நகரமே வெள்ளத்தால் மூழ்கியது.
திருக்கோயிலின் வடக்கும் மேற்கும் இணையும் வாயு மூலையிலிருந்து பெரும் பெரும் அலறல் சப்தங்கள் கேட்டன. துர்வானவைகள் மந்திர எலிகளுக்குப் பல் பயந்து வெளியேறி ஓடிப்போயின.

பூசையினின்றும் கலந்திருந்த அங்கிருந்தோர் இவ்வலறல் ஒலியைக் கேட்க முடிந்தது. பூசை செய்த சிவாச்சாரியார்களோ....."தீயன விலகின" "தீயானவையும் ஒழிந்தன" எனச் சொன்னார்கள். இதைக் கேட்ட உள்ளமெல்லாம் மகிழ்ந்தது. வருண பகவானும் ஆலயத்தைச் சுத்தம் செய்து ஒத்துழைத்தான். 

புதுப் பொலிவுடன் புதுக் கோபுரம்

ஒன்பது நிலைக்கோபுரத் தொடக்கவிழா. 1984-ல் புதுக் கோபுரம் எழுப்புவிக்க தொடக்கவிழா நடந்தேறியது. கோபுரத்தின் அடித்தள வேலை முடிந்தபோதுதான் தென்காசி மக்களுக்கு அப்போதுதான் புது நம்பிக்கை பிறந்தது. பொருளாதாரத்தில் கோபுரத்தின் வேலை தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காக, அப்போதைய திருப்பணிக்குழுத் தலைவராக இருந்த டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் அவர்கள், முதல்நிலை தளத்தின் முழுச்செலவினையும் தன் பொறுப்பில் செய்து கோபுர வளர்ச்சிக்கு வித்திட்டார்கள்.

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் சார்பில், இரண்டாம் நிலை தளத்தை முடித்துக் கொடுத்து இசைந்தது. பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் சார்பில், மூன்றாம் நிலை தளத்தையும் செய்து அதற்குண்டான பொருளாதாரத்தை செலவழித்தது. இதேபோல, நான்காம் நிலைத் தளத்தை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பில் நடத்திவிக்கப்பட்டது.

மதுரை, மீனாட்சியம்மன் சுந்தேரேசுவரர் திருக்கோவில் சார்பாகவும், ஐந்தாம் நிலை கோபுரத் தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சார்பிலும், ஆறாம்நிலை தளத்தையும் உருவாக்கிக் கொடுக்க, அதற்குண்டான பொருளாதார நிலையைக் கொடுத்து செய்வித்தன. ஏழாம் நிலை தளத்தை, சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சார்பில் பொறுப்பை எடுத்து நடத்தித் தந்தது.

தென்காசி வட்டாரத்திலிருக்கும் நாடார் சமுதாயத்தினரால், எட்டாவது நிலைத் தளத்திற்கு செலவாகும் செலவுக்குண்டான பொறுப்பை அவர்கள் ஏற்று நடத்தி
செய்வித்தார்கள். அடியும் முடியும் ஈசன் ஒருவன்தான். அதேபோல, அடித்தளத்தைத் தந்த, டாக்டர். சி.பா.சிவந்தி ஆதித்தனாரே முடியையும் முடித்து வைக்க முனைப்பெடுத்துக் கொண்டார்.

அடியமைத்தவனே முடியினையும் செய்விக்கும் தத்துவம், இந்தத் தென்காசித் திருக்கோயிலுக்கு முற்றப் பொருத்தமாக அமைந்தது. 'ஆம்!".. முதல்நிலை தளத்தினை உருவாக்கித் தந்த திருப்பணிக் குழுத்தலைவர் டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் அவர்களே, ஒன்பதாம் நிலைத் தளத்தின் கோபுரத்தின் செலவினையும் ஏற்று நடத்தி செய்வித்தார்கள்.

செப்புக் கலசம்

கோபுரத்தின் கொடுமுடியில் (உச்சியில்) பதினோறு செப்புக் கலசங்கள் நிறுவப்பட்டன. ஒவ்வொரு கலசத்தின் எடை நூற்று பத்து கிலோ எடை. கலச உயரம் ஆறே முக்கால் அடி உயரம். கலச வெளிச்சுற்று விட்டம் இரண்டரை அடி அகலம். கலசத்தைத் தாங்கும் அடித்தளத் தேக்கு மரம் ஒன்பதரை அடி தண்டுப் பலகைகள். கலசங்களில் ஒவ்வொன்றிலும், "வரகு" என்கிற காரியத்தை நிறைத்து மூழ்வித்தனர்.

(செப்புக் கலசங்களில் வரகுத் தானியங்களை நிரப்பி உயரத்தில் நிறுத்தியிருந்தால், நிறுத்தியிருக்கும் அக்கட்டிடம் (கோபுரம்) இடி மின்னலைத் தாங்கச் செய்யும் ஆற்றல் இவைக்களுக்குள்ளது.) இக்கோபுரத்தை, சிற்ப கலைமாமணி முத்தையா ஸ்தபதி அவர்களின் தலைமையின் கீழும், திரு/நந்தகுமார் அவர்களின் நிர்வாக மேம்போக்குடன் உருவாக்கப் பெற்ற இத்தென்காசிக் கோபுரத்தின் மொத்த உயரம் நூற்றி எழுபத்தெட்டு அடி உயரம் கொண்டவையாகும். இந்தக் கோபுரச் சுற்றில் மொத்தம் என்னூறு சிலைகள் நிறுவிப் பொருத்தியிருக்கிறார்கள். 

கோபுரழகு

கோபுரத்தின் கிழக்குத் திசையில், சிவ தாண்டவத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. கோபுரத்தின் மேற்குத் திசையில், சிவன், திருமால் அலைகளுடனும் வடக்குத்திசைக் கோபுரத்தில், ஒன்பது மாடங்கள். ஒவ்வொரு மாடங்களுக்கும் ஒவ்வொரு பிரம்மாவாக, ஒன்பது பிரம்மாக்களை இருத்தியிருக்கிறார்கள்.

தெற்கில், முனிவர்களுடனும்,  தட்சிணா மூர்த்திகள் ஒன்பது மாடங்களிலும் ஒன்பது தட்சிணாமூர்த்திகள் அமையப்பெற்றிருக்கிறார்கள். எட்டுத் திக்கிலும் அஷ்டதிக்கு பாலகர்களை காட்சியாக்கியிருக்கிறார்கள். கிழக்குத் திசையில் உள்ளது போல், ஜெய விஜயா என்கின்ற துவாரபாலகர்கள் மேற்கான முகத்திலும் அமையப்
பெற்றிருக்கிறார்கள்.

அதோடு சிவன், யானையை சம்காரம் செய்ய யானை வயிற்றிலிருந்து வெளிப்படும் கஜசம்கார மூர்த்தி, பிட்சாடனர், ஆணும் பெண்ணும் சமமே என்பதை உலகிற்கு உணர்த்தும் அர்த்தநாரீசுவரர், சிவனும் மாலனும் ஒன்றே என்கின்ற தத்துவத்தைப் போதித்துக் காட்டும் அரிகரன், நடராசர், உக்ர தாண்டவர், ஊர்த்தவர் போன்றோர் இருக்கப் பெற்றிருக்கிறார்கள்.

அற்புதக் காட்சி

இன்னும் ஒர் அற்புத அமைப்பு நம் கண்களுக்கக் காட்சியாக்கியிருக்கிறார்கள். கங்கை நதியான வள்ளி, சிவபெருமானிடம் கோபித்துக் கொண்டு, சிவபெருமான் தலையிலிருந்து இறங்கிப் போகும் கங்கையை, சிவபெருமான் ஒரு கையால் தடுத்து நிறுத்திக் கொள்வது போலவும், இன்னொரு கையால், தண்ணருகில் இருக்கும் பார்வதிதேவியை அரவணைத்துக் கொண்டு, சமாதானப் பார்வையோடு பார்க்கும் சிவபெருமானின் சங்கடமானதொரு நிலையை, சிற்பியின் கைவண்ணம் உருக்கி ஒழுகி உருவாக்கிக் காட்டியிருக்கிறார்கள்.

இன்னொரு அற்புதக் காட்சி.....
"மீனாட்சி திருக்கல்யாணக் காட்சி." திருமால், சொக்கநாதரிடம் மீனாட்சி அன்னையைத் தாரை வார்த்துக் கொடுக்கும் காட்சி. திருமாலின் அருகாகக் குபேரன் இருக்கிறார். மீனாட்சி அன்னை, பெண்களுக்குரியதான நாணத்துடனான ஓரப்பார்வையில் சொக்கநாத சிவனை நோக்கும் நளினம், இதோடு அம்பாளும் சிவசங்கரானாரும் ஆலிங்கனம், மேலும், சிவலிங்கத்தின் முன்னே தன் கண்ணைப் பிடுங்கி அப்பும் கண்ணப்ப நாயனார், இக்காட்சிகளைப் பொழுதேனும் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருக்கும். இது சிலைகள் அல்ல!, நம் உள்ளத்தைச் சிலிர்க்க வைக்கும் உயிர்கள்.

அகத்தியர்

அகத்தியர் போன்றோருடனான முனிவர்களின் சிலையமைப்புகள், பஞ்சமுகக் கணபதியார், நர்த்தன கணபதியார், சித்திபுத்தி சமேத கணபதியார், லெட்சுமிதேவியும் அப்பப்பா!"...... இன்னும்.. இன்னும்....நிறைய உள.

அழகின் அரசி என்று திருமகளை, கூறக் கேள்விப்பட்டியிருப்போம். இந்த லெட்சுமியின் எழில் உண்மை. இதை உறுதியாக்கும் கொள்ளையழகு.. இதையும் காணும் பேறு நமக்களித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம்..ஈடாகத் திருமால்...பாமா...ருக்மணி சமேத கோபாலன், வராக மூர்த்தி, நரசிம்மர் எனக் கூறிக்கொண்டே போகலாம். நான்திசைகளிலும் கோபுரத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும் பூதத்தார்களின் அழகும் அழகேயழகு!

இப்பூதத்தார்கள் தாங்கி நின்றாற் போதாது என்று, மேலும் ஆண்களும் பெண்களும், அழகிய முன்கொண்டையோடு, நெற்றி நிறைந்த விபூதிக் கீற்றுகளுடன், இலாவாகமாக வளைந்த இடுப்புடன் நின்று, வெண்பா மரம் வீசிக் கொண்டிருக்கும் பெண்களின் கண்களைப் பாருங்கள்... நம் விழிகள் விலக மறுக்கிறது.

உச்சியில் ஒட்பம்

ஒன்பதாவது நிலைத் தளத்தில், அதில் வெளிப்பிரகாரம் அமைத்திருக்கிறார்கள். இந்த வெளிப் பிரகாரத்தில், தென்காசியையும் இதையொட்டியிருக்கும் ஊர்களையும் பார்க்க பார்க்க முடிகிறது. அற்புதமான காட்சிகள், தென்றல் காற்றுகள், பசுமைமிக்க வயல்கள், மரங்கள், சாலைகள், அதில் ஊர்ந்து செல்லும் அழகுகள், கோபுர உயர்வுக்குச் சிறகு விரித்த பறவைகள், கட்டிடங்கள், மாடவீதிகள், குற்றாலருவி நீர்வீழ்ச்சிகள், வெள்ளிய நீர் வழிதல்கள், அது ஒழிகியோடும் தடங்கள், இதுமட்டுமல்ல, திருமலைக்குமாரசாமி மலைக்கோயிலும் கூட தெரிகின்றன.

கோபுரத்தின் முகப்பு நாசியில், சிவசக்தி அமர்ந்திருந்தார். முகப்பு மகாநாசியில் திருமால், காயத்திரி, சாவித்திரி அமர்ந்திருந்தனர். கோபுரத்தின் சிகரத்தில் வடக்கு தெற்குப் பகுதிகளில் "மாநாசி" அமைத்திருக்கிறார்கள். இந்த நாசி, மாநாசிகள், மேலேயிருந்து பார்ப்பது, வேறொரு அழகிலும் மேன்மையாகத் தெரிகின்றன.

மனுசாரம், காசியபம் போன்ற சிற்ப சாஸ்திர நுணுக்கங்களுடன் அமைக்கச் செய்திருந்த சிற்பி...., "இக்கோபுரத்தைச் சுவாமி படுத்திருக்கும் நிலையில் அமைத்திருக்கிறேன் என்கிறார். காரணம், தொலைவிலிருந்து கோபுரத்தைத் தரிசனம் செய்வோர்க்கு, சுவாமியின் திருவடிகளைத் தரிசனம் செய்வது போல நிலையாகும் என்று ஸ்தபதி முத்தையா அவர் கூறியிருந்தார்கள்.

இத்திருக்கோபுரத்தின் உள்ளார் அடிப்பகுதியிலிருந்து முடிப் பகுதிக்கும் செல்ல, கோபுரத்தின் உட்புறபகுதியில் படிக்கட்டு அமைந்திருந்த விதம், இப்படிக்கட்டுக்களிலேறி ஒன்பதாவது நிலைத் தளத்திற்கும் சென்று, அந்த முடித் தளத்தில் வெளிப்பிரகாரத்தில் வலம் செய்து ஒன்பது கலசங்களையும் கண்டு வணங்கித் திரும்பியது, "இதுவும் ஓர் கிரிவலம்" என்றே கொள்ளலாம்.

இத்துடன் "அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோயில், தென்காசி தொடர் மகிழ்ந்து நிறைகிறது."

- கோவை.கு .கருப்பசாமி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com