கண்கள் புத்துயிர் பெறவேண்டுமா? வணங்குங்கள் கௌமாரியம்மனை!

கண்களில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை களைந்து கண்கண்ட தெய்வமாக விளங்கும் அன்னை,
கண்கள் புத்துயிர் பெறவேண்டுமா? வணங்குங்கள் கௌமாரியம்மனை!

கண்களில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை களைந்து கண்கண்ட தெய்வமாக விளங்கும் அன்னை, தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கௌமாரியம்மனாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றாள். 

ஆயுதமாக மாறிய அருகம் புல்

ஒரு அசுரனை வெல்வதற்காக உமாதேவி அம்சம் பெற்ற கௌமாரி அம்மன் அடர்ந்த காட்டில் தவமியற்றினாள். அசுரன் கௌமாரியைக் கண்டு தன் கைவாளை விட்டுவிட்டு அவளை சப்தமில்லாமல் தூக்கிச் செல்ல முயன்றான். இதை உணர்ந்த அம்மன் அருகில் இருந்த அருகம் புல்லை எடுத்து அசுரன் மீது
வீச அசுரனின் உடல் இருகூறாய்ப் பிளந்தது. அசுரன் மாண்டான்.

பார்வை பெற்ற மன்னன்: வீரபாண்டிய மன்னன் மதுரையில் ஆட்சி நடத்திய போது ஊழ் வினையால் அவனது இரண்டு கண்களும் ஒளி இழக்க நேரிட்டது. உடனே மன்னன் இறைவனின் அருளை வேண்டினான். இறைவனும் அவன் கனவில் தோன்றி "வைகைக் கரை ஓரம் கௌமாரி தவமியற்றுகிறாள். அங்கே சென்று அவள் பாதம் வணங்கு. 

உன் கண்கள் ஒளி பெறும்'' என அருளினார். அரசனும் தவமியற்றிய அம்மனை வணங்கி ஒரு கண்ணின் பார்வை பெற்றான். அம்மனின் கட்டளைப்படி அவள் பூஜித்த திருகண்ணீசுரவமுடையாரை வணங்கி மறு கண்ணின் ஒளியையும் பெற்றான். இதையடுத்து கௌமாரியம்மனுக்கும், கண்ணீசுவரருக்கும் கற்கோயில் அமைத்து வழிபாடு செய்தான் மன்னன். எனவே இவ்விடம் வீரபாண்டியன் பெயரால் வீரபாண்டி என்று இன்றளவும் அழைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மன்னனைப் போல் கண் பார்வை கோளாறு ஏற்பட்டவர்கள் கௌமாரியம்மனையும், திருக்கண்ணீசுவரமுடையாரையும் வணங்க கண்கள் புத்துயிர் பெறும்.

அன்று அளநாடு என்று அழைக்கப்பட்ட நாட்டின் ஒரு பகுதியே இன்றைய வீரபாண்டி. இராசசிங்கன் என்ற மன்னன் மதுரையை அரசாண்ட இராசேந்திர பாண்டிய மன்னனின் தம்பி. இராசேந்திரன் தன் தம்பி இராசசிங்கனுக்கு ஆற்றுவளம் நிறைந்த அளநாட்டைக் கொடுத்து, ஆட்சி நடத்தச் சொன்னான். இராசசிங்கன் தன் நாட்டின் பகுதிகளைப் பார்க்க வளம் கொழிக்கும் வைகை வழியாக வந்தான். அப்போது கௌமாரியம்மனையும், திருக்கண்ணீசுவரரையும் வழிபட்டான். தனது தாத்தா வீரபாண்டியன் எழுப்பிய கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்தவன் மானியமாக நிலங்களையும் வழங்கினான்.

ஆலய அமைப்பு

முதலாவதாக திருக்கோயில் முன்பு காவல் தெய்வமாக கருப்பணசாமி வீற்றிருக்கிறார். முன் மண்டபத்தை கடந்து கம்பத்தடி மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில்தான் சித்திரை திருவிழாவிற்காக கம்பம் நடப்படும். மகா மண்டபத்தை அடுத்து கருவறையில் அன்னை கௌமாரியம்மன் சர்வ லட்சணங்களுடன் அழகே உருவாகக் காட்சிதருகிறாள். பிராகாரத்தை சுற்றி தெற்கே விநாயகர், கன்னிமார் சந்நிதியும், வடக்கே நவகிரக மண்டபமும் அமைந்துள்ளன. அதன் அருகில் திருக்கண்ணீசுவரர் கோயில் அமைந்துள்ளது.

சித்திரை திருவிழா: ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. 22ஆம் நாள் முதல் எட்டு நாட்கள் திருவிழாவின் முக்கிய நாட்களாகும். கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் 21 நாட்கள் அம்மன் விரதம் இருப்பார். அந்நாட்களில் அம்மனுக்கு காப்பு அரிசி மாவு பூஜை மட்டுமே நடைபெறும். வேறு எங்கும் இல்லாத வகையில் சித்திரை திருவிழா நடைபெறும் எட்டு நாட்களிலும் அம்மன் சந்நிதி 24 மணி நேரமும் திறந்திருப்பது சிறப்பு.

பிரார்த்தனை

கண் நோய் உள்ளவர்களும், அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அம்மனை தூய உள்ளத்துடன் வணங்கி தீர்த்தம் பெற்றுச் சென்றால் தீராத நோயும் தீரும்.

கோயிலின் முன் அமையப்பெற்ற கிணற்று நீரையே பக்தர்கள் தீர்த்தமாக பயன்படுத்துகின்றனர். திருக்கண்ணீசுவரமுடையார் கோயிலின் தீர்த்தமாக அருகில் பாயும் முல்லை ஆற்று நீர் திகழ்கிறது. இத்தல விருட்சம் வேப்பமரம். திருக்கண்ணீசுவரமுடையார் திருக்கோயிலின் ஸ்தல விருட்சம் வில்வமரம்.

தேனியில் இருந்து குமுளி செல்லும் சாலையில் 8 கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது.திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு-பெரியகுளம்-தேனி வழியாக வீரபாண்டி வரலாம். மதுரையில் இருந்து ஆண்டிபட்டி-தேனி வழியாகவும் வீரபாண்டி செல்லலாம்.

காலை 5-1 மணி வரை, மாலை 4-8 வரை. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நாள் முழுவதும் திறந்திருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com