காசி விசுவநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-2

விந்தன் கோட்டை என்ற ஊர், தென்காசிக்கு அருகில் அகரக் காட்டிற்கும், சாம்பவர் வடகரை என்ற ஊருக்கும் இடையில் உள்ளது. 
காசி விசுவநாதர் திருக்கோயில், தென்காசி தொடர்-2

சச்சிதானந்தபுரம்.
முத்துத் தாண்ட நல்லூர்.
ஆனந்தக் கூத்தனூர்.
சைவ மூதூர்.
தென்புலியூர்.
குயின்குடி.
சித்தவாசம்.
செண்பகப் பொழில்.
சிவமணவூர்.
சத்தமாதர் ஊர்.
சித்திர மூலத்தானம்.
மயிலைக்குடி.
பலாலிங்கப்பாடி.
வசந்தக்குடி.
கேசிகை இதுவெல்லாம் தென்காசிக்கு இருந்த மேலும் பல பெயர்கள்.

விந்தன் கோட்டை
விந்தன் கோட்டை என்ற ஊர், தென்காசிக்கு அருகில் அகரக் காட்டிற்கும், சாம்பவர் வடகரை என்ற ஊருக்கும் இடையில் உள்ளது. விந்தன் கோட்டையிலிருந்து அரசாண்ட பராக்கிரமபாண்டியன், காசிவிசுவநாதருக்குத் தென்காசியில் கோயிலெழுப்பிவித்தமைக்கு வரலாறு உள்ளது. 

விந்தன் கோட்டையிலிருந்து பராக்கிரம பாண்டியன் "ககனக்குளிகை" வாயில் அமைத்துக் கொண்டு வான்வெளி வீதியில் பறந்து, அதிகாலை நான்கு மணிக்கு 
காசிக்குச் சென்று காசிவிசுவநாதரை வழிபட்டு, பின் சூரியன் உதிக்கத் தொண்டங்குவதற்கு முன்னமே விந்தன் கோட்டைக்கு வந்து விடுவான்.

ஒருநாள் அரசன் புறப்படுகையில், அரசி தானும் உடன் வருவதாகக் கூற, அவளையும் தன்னோடு அழைத்துக் கொண்டு வடக்கே இருக்கும் காசிக்குப் பறந்து சென்று விசுவநாதரை வழிபட்டு திரும்பிக் கொண்டிருந்தான். அப்படித் திரும்பி வரும் போது ஒரு சிவலிங்கத்தையும் எடுத்து வந்தான்.

அரசனும் அரசியும் வானவெளியில் பறந்து வருகிற சமயத்தில், அரசி விலக்கானாள். (மாதாந்திரம் பெண்ணுக்கு ஏற்படும் விலக்கு.) எனவே இருவரும் ஒரு சோலைக்குள் இறங்கித் தங்கினர். அரசியார் மூன்று நாட்கள் குளித்ததும், (விலக்கானது சுத்தமான பின்பு) மீண்டும் புறப்பட ஆயத்தமாயினர்.

இவர்கள் சோலையில் தங்கியிருந்தபோது, காசியிலிருந்து எடுத்து வரப்பட்ட லிங்கத்தைக் கீழே வைத்திருந்தனர். புறப்படும்போது அதையெடுத்துக் கொள்ள முயற்சிக்கையில்,......

சிவலிங்கம் எடுத்த எடுப்புக்கு வரவில்லை. இழுத்த இழுப்புக்கும் அசையவில்லை. அரசனும் அரசியும் ஏங்கினர், மனம் கசிந்தனர். அப்போது இறைவன் அசரீரியாக... "நான் இங்கேயே இருக்க நினைக்கிறேன்" என ஒலித்தது. இருவரும் அந்த லிங்கத்திற்குப் பிரதிஷ்டை செய்வித்து வணங்கிவிட்டு, அச்சோலையிருந்த அவ்விடத்திற்கு சிவகாசி என்ஊரை வழங்கிவிட்டு கோட்டைக்குத் திரும்பி வந்துவிட்டனர்.

கோட்டைத் திரும்பிய மன்னனின் மனது நிம்மதியற்று இருந்தது. அதற்குக் காரணம், தமக்கு ஒரு சிவலிங்கம் வேண்டும் என்றும், அதற்கும் காசி விசுவநாதர் எனப் பெயரிட்டு கோயிலெழுப்ப வேண்டும் என நினைத்திருந்தான். அதற்காகக் காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கம் சிவகாசியில் இருப்பு கொண்டமையால், அந்த எண்ணத்தை நினைத்துத்தான் அவன் கவலையோடு இருந்தான்.

கட்டெறும்பு வழி காட்டியது
அன்றைய இரவில் மன்னனின் கனவில் ஈசன் தோன்றி.......... "கோட்டையிலிருந்து கட்டெறும்புகள் சாரைவரிசையாக ஊர்ந்து செல்லும். அது சென்று முடிவுறும் இடத்தில், நீ நினைத்து ஏங்கும் லிங்கமாக அங்கு நானிருப்பேன்". அவ்விடத்தில் நீ நினைத்த லிங்கத்திற்கு விசுவநாதர் என பெயரிட்டுக் கொள் என்றது.

காலையில் அரசன் கண்விழித்ததும், இறைவனின் வாக்குப்படி கட்டெறும்புகளின் சாரை வரிசையைக் கண்டு அதன்பின்னே சென்றான். அவ்வெறும்புகள், சிற்றாற்றின் ஓரமாய் உள்ள செண்பகத் தோட்டத்தில் தன்பயணத்தை முடித்திருந்தது. 

சிற்றாறு
சலத்துத் தவழ்ந்தோடி வரும் இச்சிற்றாற்றுக்கு "சிவமது கங்கை" என்ற பெயரும் உண்டு என்பதைத் திருக்குற்றால புராணத்தில் காணப்பெறலாம். வடக்கே காசியில் "வாரணாசி" இருப்பது போல், இங்கே "சிவமது கங்கை" என்ற பெயரைக் கொண்ட சிற்றாற்றின் கரையில்தான் தென்காசி விசுவநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

வடக்கில் உள்ள காசியைவிட தெற்காக இந்தத் தென்காசி புனிதமானதெனப் புராணத்தில் உள்ளன.

பெருமைக்குரிய முத்திரைகள்

தென்காசி ஆலய திருவோலக்க மண்டபம் எனும் முகப்பு மண்டபத்தை கவினார்ந்த கலைக்கூடம் என்றே சொல்ல வேண்டும். இம்மண்டபத்தை எட்டு பெரிய தூண்கள் அலங்கரிக்கிறது. இது சாதாரண தூண்கள் அல்ல!, நம்மோடு பேசும் உணர்வைக் கொண்ட பேசாத தூண்கள் இவை. இதயத்தை ஈர்ப்புக்குள்ளாகும் சிற்பங்கள். காண்போர் கண்ணையும் கருத்தையும் கொள்ளையிட்டு பறிக்கும் கவின்மிகு புடைப்புகள்.

கல்லில் உலகத்தின் அழகையெல்லாம் கூட்டிவைத்து, நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அமைத்திருக்கிறான் சிற்பி. மரத்தை இழைத்து அழகுபடுத்துவதைத்தான் பார்த்திருக்கிறோம். இங்கே கல்லையே உருக்கி மொழிகியிருக்கிறார்கள். அந்த எட்டுத் தூண்கள் போக மேலும், இருபக்கத் தூண்களிலும் இரண்டு அழகிய பெண்களின் சிற்பங்கள் இருக்கின்றன.

வடக்குத் தூணிலுள்ள பெண்ணின் சிற்பம் பெருமைமிகுந்தது. கூந்தலை வாரிச் சடை பின்னலிட்டு, பின்னாளிருந்த பின்னமுடிச்சுக்கள் அற்புதம் தொட்டுப் பார்க்க உணர்வு எழுந்தது. மேலும், வசீகரமான முகம், காதைக்கொடு கவிதை சொல்கிறேன் எனக்கூறும் கண்கள். குளிர்ந்த நெற்றி, புருவக் கீறல்கள், கூம்புபோல் நாசி, புன்னகை பொதிந்த இதழ், குறுகிய இடை, ஒட்டிய வயிறு, மேன்மையான தொப்புள், ஒசிந்த நிலையில் மயில் போல நெளிந்த நயம், இழைத்தத் தூண் போன்ற வழவழ முழங்கால்கள், பார்வையை விட்டு விலக மறக்கும் அழகான பாதங்கள், அவற்றிலுள்ள நகங்கள், தொட்டுப் பார்க்கத் தூண்டும் சுண்டுவிரல்கள், கையில் இழைந்தோடிய நரம்புகள், அக்கரத்தில் அணியப் பெற்ற ஒன்பது வளையல்கள், கடகங்களால் அணிந்திருக்கும் உடையின் நளினம், இடக்காலை ஊன்றி எழிலுடன் நிற்கும் கோலம், கடைசியாக அதன் வலது கை ஆள்காட்டி விரலால்...... "விசுவநாதர்" உள்ளே என சுட்டிக் காட்டும் விதம்.

என்னழகில் மயங்கி விடாதீர்கள், உலகநாயகன் உள்ளே உள்ளான் என்பதைக் கூறும் சிலையைக் கண்டு ஆனந்தித்தோம்.

- கோவை கு. கருப்பசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com