பணக்கஷ்டம் போக்கி செல்வ செழிப்பை தரும் ஸ்ரீ லக்‌ஷ்மி பஞ்சமி!

இன்று லக்‌ஷ்மி பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ மகாலக்‌ஷ்மி குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும்.
பணக்கஷ்டம் போக்கி செல்வ செழிப்பை தரும் ஸ்ரீ லக்‌ஷ்மி பஞ்சமி!

இன்று லக்‌ஷ்மி பஞ்சமியை முன்னிட்டு திரு மகாலக்‌ஷ்மி குபேர பூஜை செய்ய உகந்த தினமாகும். வருடத்தின் முதல் மாதத்தில் அதாவது சைத்திர மாதத்தில் வரும் சுக்கில பக்‌ஷ பஞ்சமி மற்றும் கல்பாதி திதியில் திரு லக்‌ஷ்மி பஞ்சமியாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இது திரு மகா லக்‌ஷ்மியை பூஜிக்கவும் வழிபடவும் உகந்த நாளாகும். இந்த நாளில் திரு லக்‌ஷ்மி குபேர பூஜை செய்வது செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். இந்த நேரத்தில் கடன் தொல்லை, வியாபாரத்தில் நஷ்டமடைந்தோர் 5 வியாழன் தொடர்ந்து மாலை, குபேர தீபம் ஏற்றி லக்ஷமி குபேர நாமம் சொல்லி வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.

லக்ஷமி பூஜை என்பது அன்னை மகாலக்ஷமியை நம் இல்லத்திற்கு அழைக்கும் வழிபாடாகும். இது மாலை வேளையில் செய்யப்படும் ஒரு வழிபாடாகும். இந்தப் பூஜை  கோதூளி லக்ன காலத்தில் செய்யப்படுகிறது. சூரியன் சைத்திர மாதத்தில் தனது முதல் சஞ்சாரத்தை துவக்குவதாக ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது. இத்தகைய சிறப்பு மிகுந்த காலத்தில் இந்தப் பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐசுவரியங்களும் பெருகும் என்பது ஐதீகம்.

மகா விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலக்ஷமி திரு லக்‌ஷ்மி பஞ்சமி தினத்தில் நமது இல்லம் தேடி வந்து அருள் பாலிக்கிறாள். நாளை மாலை 6 மணிக்கு முன்பே லக்ஷமி குபேர பூஜை செய்வது நல்லது. நமது இல்லத்தில் மகாலக்ஷமியை வரவேற்க அலங்காரம் அணிவகுப்பு செய்திட வேண்டும். வாசலில் வண்ண கோலமிட்டு பூஜையறையில் குபேர கோலம் இட வேண்டும். மகாலக்ஷமியின் திருவருளால் அனைத்துச் செல்வங்களும் அதாவது தனம், தானியம், மக்கட் செல்வம், வீடு, தைரியம், வீரம், அறிவு என அனைத்தையும் பெற முடியும்.

நமது வீடுகளை இம்மி அளவு கூட அழுக்கில்லாமல் சுத்தம் செய்து தூய்மையைப் பெரிதும் விரும்பும் தெய்வமான லக்ஷமியை வீட்டுக்கு வரவழைக்கவேண்டும். அதன் வாயிலாக நன்மையையும், வளத்தையும் வீட்டிலுள்ள எல்லோருக்கும் கிடைக்குமாறு செய்யவேண்டும். இந்த நாளில் வீட்டிலுள்ள பெண்கள் லக்ஷமி தேவியாகக் கருதப்படுவதால், அவர்கள் பட்டு ஆடைகள் உடுத்தி, தங்க வளையல்களையும், தங்கச் சங்கிலிகளையும் பொன் ஆரங்களையும் அணிந்து லக்ஷமி அவதாரமாகவே மாறிவிடுகிறார்கள்.

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லக்ஷமி குபேர பூஜை செய்யலாம். திரு லக்‌ஷ்மி பஞ்சமி அன்று லக்ஷமி பூஜையானது கடைப்பிடிக்கப்படுகிறது. அன்று பெண்கள் விநாயக பூஜை செய்த பின், லக்ஷமி தேவியை ஆராதிக்க வேண்டும். கலசத்தில் திரு லக்‌ஷ்மியை ஆவாகனம் செய்து லக்ஷமி தேவியை பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் இனிப்புகள் ஆகியவற்றை வைத்து வணங்க வேண்டும் .பூஜையின் போது திரு சூக்தம், லக்ஷமி அஷ்டகம், வேத மந்திரங்கள் ஆகியவற்றை ஜெபிக்கலாம். பின்னர் ஒரு தட்டில் ஆரத்தி எடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும் .

ஜோதிடத்தில் செல்வ செழிப்பைத் தரும் லக்ஷமி குபேர யோகங்கள்

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி அதிக பலம் பெற்று ஆட்சி உச்சம் போன்ற நிலை பெற்று ஒன்பதாமதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று கேந்திர திரிகோணங்களில் நிற்பது லக்ஷமி யோகத்தை தரும்.

ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி மற்றும் சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும் ஆட்சி, உச்சம் பெற்றாலும் லக்ஷமி யோகம் ஏற்படும் எனப் புராதன ஜோதிட நூலான பாவார்த போதினி எனும் பலதீபிகை கூறுகிறது. செல்வத்தின் அதிபதியான லக்ஷமி தேவியை குறிக்கும் சுக்கிரகோளின் வலிமையைக் கொண்டு இந்த யோகம் விவரிக்கப்படுகிறது.

நவீன விஞ்ஞான ஜோதிடத்தின் தந்தை எனப்படும் தெய்வதிரு டாக்டர் B V ராமன் ஐயா அவர்கள் தனது 300 யோகங்களைப் பற்றிய புத்தகத்தில் லக்ஷமி யோகம் தரும் கிரக இணைவுகளைப் பற்றி கூறுகையில்:

1. ஆட்சி, உச்சம் போன்ற பலம் பெற்ற லக்னாதிபதியும் ஒன்பதமதிபதியும் இணைவு பெறுவது,

2.. பலம் வாய்ந்த லக்னாதிபதி ஆட்சி, உச்சம் பெற்று ஒன்பதாமதிபதி ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம், கேந்திர திரிகோண ஸ்தானங்களில் நின்று லக்னாதிபதியுடன் சேர்க்கை பெறுவது.

3. ஒன்பதாமதிபதியும் சுக்கிரனும் ஆட்சியோ உச்சமோ அடைந்து கேந்திர திரிகோணங்களில் நிற்பது லஷ்மி யோகம் தரும் கிரக அமைவு எனக் குறிப்பிட்டுள்ளார்.

குபேர துல்ய ராஜ யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் தன்காரக குருவும் செல்வ செழிப்பை அளிக்கும் சுக்கிரனும் உச்சமடைந்து திரிகோணங்களில் நின்று விட்டால் அவர் அரசராகவோ அல்லது அரசரைப் போன்ற செல்வ செழிப்புடன் இருப்பார் எனப் பாவ குதுகலம் எனும் பழம் பெரும் ஜோதிட சாஸ்திர நூலில் கூறப்பட்டிருக்கிறது.

லக்ஷமி யோகம் பலன்கள்

இந்த யோகத்தை செனன ஜாதகத்தில் பெற்ற ஒருவன் அனைத்துச் செல்வங்களையும் பெற்று அரசனுக்கு நிகராக விளங்குவான். நற்குணங்கள் உடையவராகவும், அழகானவராகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பார், செல்வ நிலையில் உயர்வு தரும். எனவே உங்கள் ஜாதகத்தில் லக்‌ஷ்மி யோக அமைப்பு இல்லாவிட்டாலும் கவலை படவேண்டாம். நாளை லக்‌ஷ்மி குபேர பூஜை செய்தால் லக்‌ஷ்மி யோகத்தைப் பெற்று நீங்களும் வாழ்வில் அனைத்துச் செல்வங்களையும் பெறமுடியும் என சாஸ்திரம் கூறுகிறது.

இந்த வருடம் திரு லக்‌ஷ்மி பஞ்சமி தினமான நாளைய கோசாரத்தில் தன காரக குரு சுக்கிரன் வீட்டில் நின்று தன காரகனுக்கு வீடு கொடுத்த செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் சுக்கிரன் குருவின் வீட்டில் உச்சம் பெற்றதோடு பரிவர்த்தனையும் பெற்று நின்று ராஜ கிரகங்களில் சூரியனோடு சேர்க்கையும் மற்றொரு ராஜ கிரகமான சந்திரன் சுக்கிரனின் மற்றொரு வீடான ரிஷபத்தில் நிற்கும் காலத்தில் லக்‌ஷ்மி குபேர பூஜை செய்பவர்களுக்கு வாழ்வில் சகல வளங்களும் சேரும் என்பது நிதர்சனம்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com