திருப்பரங்குன்றத்துக்கும் திருமுருகாற்றுப்படைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு இதுதான்!

தியானம் செய்தால் கவனம் சிதறாமல் ஒரே நினைப்பில் தியானம் செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றத்துக்கும் திருமுருகாற்றுப்படைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு இதுதான்!

தியானம் செய்தால் கவனம் சிதறாமல் ஒரே நினைப்பில் தியானம் செய்ய வேண்டும். ஆனால், இறைவனிடம் 'நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே' என்று வாதாடிய நக்கீரப் பெருமானே தியானத்தில் இருந்து கவனத்தைச் சிதற விட்டுவிட்டாரே! அதனால் என்ன நடந்தது தெரியுமா?

ஆறுபடை வீடுகளை மக்களுக்கு அறிமுகப்படுத்திய நக்கீரரின் திருமுருகாற்றுப்படைக்கும் திருப்பரங்குன்றத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தமிழ் வளர்த்த கடைச்சங்கத்தின் தலைவர் நக்கீரர். துணிவாக சோமசுந்தரக் கடவுளிடமே வாதம் புரிந்தவர். 

அவர் சிவபெருமானோடு வாதம் செய்தபோது சிவபெருமான் கொடுத்த சாபத்தின் பலனாக நோய் வந்து அவதிப்பட்டார். அந்த நோய் தீர தீர்த்த யாத்திரை புறப்பட்டார். வழியில் திருப்பரங்குன்றத்தில் தங்கினார். சிவபூஜை செய்வதற்காகக் குளக்கரையில் ஆல மரத்தடியில் அமர்ந்தார். அச்சமயம் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. சிவ சிந்தனையில் இருந்து விடுபட்டுப் பார்த்தார் நக்கீரர். 

அரச மரத்திலிருந்து உதிர்ந்த ஓர் இலை, தண்ணீரில் பாதியாகவும் நிலத்தில் மீதியாகவும் விழுந்தது. இதில் என்ன அதிசயம் இருக்கப் போகிறது? இருந்தது! நீரில் விழுந்த பாகம் மீனாகவும், நிலத்தில் விழுந்த பாகம் பறவையாகவும் மாறியது. இந்த விநோத காட்சியைக் கண்டதும் நக்கீரரின் சிவபூஜை தியானம் தவறியது. 

அந்த விநோதக் காட்சியில் அவர் மனம் லயித்த சமயம் கற்முகி என்ற பூதம் அவரைப் பிடித்துக்கொண்டுபோய் மலைக்குகை ஒன்றில் வைத்தது. ஏற்கெனவே அவரைப் போல் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேர் சிறை வைக்கப்பட்டிருந்தனர். ஆயிரம் பேர்கள் சேர்ந்ததும் அனைவரையும் அந்தப் பூதம் விழுங்க எண்ணியிருந்தது. 

இந்த ஆபத்தில் இருந்து தானும் மற்றவர்களும் தப்பிக்க, முருகனைத் துதித்து திருமுருகாற்றுப்படையைப் பாடினார் நக்கீரன். 

இந்தத் திருமுருகாற்றுப்படைதான் சங்கப் பாடல்களில் முதன்மையாக வைத்துப் போற்றப்படுகிறது. (இதை தினமும் பாராயணம் பண்ணினால் சிறைவாசம் கிட்டாது. நக்கீரர் பாடப் பாட, முருகன் கைவேல் மலைக்குகையைப் பிளந்து பூதத்தைக் கொன்று அனைவரையும் சிறை மீட்டது. 

திருமுருகாற்றுப்படை வெண்பா பிற்காலத்தில் யாராலோ பாடப்பட்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். யார் பாடினால் என்ன? நமக்கு விஷயம் தானே 
முக்கியம்!

மேலும், சுவையான செய்தி ஒன்றும் உண்டு. 

"பழமுதிர்ச்சோலை மலை கிழவோனே" என்று நக்கீரர் திருமுருகாற்றுப்படையை முடித்தார். 

அதற்கு முருகப்பெருமான் நக்கீரா நான் என்ன கிழவனா? என்று கேட்டு மறைந்தாராம். 

உடனே என்றும் இளையாய் என்ற வெண்பா பாடல்களை நக்கீரர் பாடினால் என்று செய்தி கூறுவாரும் உண்டு. 

நக்கீரர் இருந்து பூஜை செய்த குளம் சரவணப் பொய்கையாகும். இந்தப் பொய்கைக்கு அருகிலுள்ள பஞ்சாக்ஷரப் பாறையில் தான் நக்கீரர் அமர்ந்து பூஜை செய்தார் என்பதால், 
இந்தப் பாறைக்கு அருகில் நக்கீரருக்கு ஓர் ஆலயம் இருக்கிறது. 

கந்தன் கை லேல் பாறையைப் பிளந்த அடையாளத்தைக் குன்றின் தென்பாகமாகிய தென்பரங்குன்றத்தில் இன்றும் காணலாம். 

வேல் விழா

நக்கீரரை குகையிலிருந்து காப்பாற்றியதின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத நவராத்திரிக்கு முன்பாக வேலாயுதத்தை மலை உச்சிக்குக் கொண்டு போகும் 
விழா நடைபெறுகிறது. விழா முடிந்ததும் கடவுள் கருணை மழையைப்போல் நாம் வாழ வான்மழையும் பொழிகிறது. இந்த அற்புதம் இன்றளவும் நடைபெறுகிறது. 

இது முருகன் நமக்குக் காட்டும் கருணை அல்லாமல் வேறென்ன?

திருப்பரங்குன்றத்து தெய்வத் திருமகள் குமரனையும் தேவகுஞ்சரியையும் மீண்டும் வணங்கிவிட்டு இரண்டாம் படைவீடான திருச்செந்தூருக்குச் செல்வோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com