மனஅமைதியை அளிக்கும் திருவாமூர் பசுபதீஸ்வரர் 

கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு மேற்கில் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருவாமூர் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்.
மனஅமைதியை அளிக்கும் திருவாமூர் பசுபதீஸ்வரர் 

கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு மேற்கில் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருவாமூர் அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில். முன்பு இவ்வூர் திருஆஊர் என்றழைக்கப்பட்டது. ஆ என்றால் பசு இறைவன் இங்கு பசுபதீஸ்வரர் ஆக விளங்குகிறார். இத்தலத்தின் பெருமை சேக்கிழாரின் பெரிய புராணத்தில் காணப்படுகிறது. தற்போது திருஆமூர், திருவாமூர் எனப்படுகிறது.

இறைவன் - பதிபதீசுவரர்

இறைவி - திரிபுரசுந்தரி 

தலமரம் - கொன்றை

இவ்வூர் அப்பர் என்றழைக்கப்படுகின்ற நாவுக்கரசர் அவதரித்த பெருமையுடைய தலமாகும். அவர் அவதரித்த இல்லம் இக்கோயிலில் இருந்து நேர் தெற்கில் நடை தூரத்தில் உள்ளது. தருமசேனராக சமண நெறியில் வாழ்ந்த அப்பரை சைவ நெறிப்படுத்திய ஸ்ரீ திலகவதி அம்மையாருக்கு சிலாத் திருமேனி இக்கோவிலில் உள்ளது. அருகிலேயே அப்பர் பெருமானும் அவரது திருத்தமக்கையாரும் அவதரித்த இல்லம் அருகாமையில் உள்ளது. இங்கு சித்திரை சதயத்தில் பெருவிழா நடக்கிறது.

நாவுக்கரசர் அவதரித்த களரிவாகை மரத்தடியில் சுவாமிக்கு அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த மரத்தை அதிசய மரமாகக் கருதி மக்கள் வழிபட்டுச்செல்கின்றனர். இது செடியாகவும், மரமாகவும் இல்லாமல் புதுஅம்சத்துடன் காணப்படுகிறது. இதன் இலையை சுவைத்தால் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு என அறுசுவையும் தரும் தன்மை கொண்டது.

பழமை வாய்ந்த இக்கோயிலின் மூலவருக்கு முன்பாக அப்பர் நின்ற நிலையில் உழவாரத்துடன் காணப்படுகிறார். அருணகிரிநாதர் இக்கோயிலில் உள்ள முருகனைப் பற்றி திருப்புகழில் பாடியுள்ளார். இக்கோயிலுக்கென தனி தேவாரம் இல்லை என்றாலும் பசுபதி விருத்தம் இத்தலத்தில் பாடப்பட்டது எனலாம்.

அப்பரின் மூத்த சகோதரியான திலகவதியாருக்கும், தாயாரான மாதினியார், தகப்பனாரான புகழனார் ஆகியோருக்கும் தனியாக சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றிலும் அப்பர் சிற்பம் உள்ளது.

கிழக்கு நோக்கிய கோயில், இருந்தபோதிலும் பிரதான வாயில் மேற்கில் உள்ளது. தென்மேற்கில் விநாயகர் சன்னதி, அதன் எதிரில் கொன்றை மரம் ஒன்றும் சில நாகர்களும் உள்ளன. 

அதன் தென்புறம் திலகவதியார், அவரது தந்தை புகழனார், மாதினியார் சிலைகள் உள்ளன. வடமேற்கில் முருகன் அடுத்து திருமால் சன்னதி, வடகிழக்கில் நவக்கிரகம் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தென்முகன், விநாயகர், லிங்கோத்பவர், பிரம்மன் துர்க்கை உள்ளனர். 

அப்பருக்கு குரு பூசை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்திலும், அவதார நாள் பங்குனி மாதத்திலும் நடைபெறுகிறது. இத்தலத்தில் இறைவனை வேண்டுவோருக்கு மன அமைதியும், கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் உண்டாகும்.

- கடம்பூர் விஜயன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com