இந்த வாரம் யோகம் அடிக்கப்போகும் ராசிகளில் உங்க ராசி இருக்கா? 

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் 12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மே 25 - மே 31) பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 
இந்த வாரம் யோகம் அடிக்கப்போகும் ராசிகளில் உங்க ராசி இருக்கா? 

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் 12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மே 25 - மே 31) பலன்களை துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

முகத்தில் பொலிவு உண்டாகும். கவலைகள் நீங்கும். உங்களின்ஆன்மிக பலம் அதிகரிக்கும். செய்தொழிலில் எந்தப் பிரச்னையும் உருவாகாது. மறைமுக எதிரிகள் மறைந்து போவார்கள். நண்பர்களுக்குக் கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றுவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும்.  

உத்தியோகஸ்தர்கள் வேலைகளைப் பட்டியலிட்டு செய்து முடிக்கவும். எதிர்பார்த்த பதவி உயர்வு உங்களைத் தேடிவரும். பணவரவுக்குத் தடை ஏற்படாது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சிரமங்கள் ஏற்படும். அதனால் மனக்கசப்பு உருவாகும். விவசாயிகள் குத்தகை எடுப்பது போன்ற விஷயங்களைத் தவிர்க்கவும். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களைச் செயல்படுத்த முனைவீர்கள். மேலிடத்தின் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் உயரத் தொடங்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். 

பெண்மணிகள் செய்யும் வீணான யோசனைகள் உடல் வலிமையை குறைக்கும். மாணவமணிகள் விளையாட்டில் ஆர்வத்தைக் குறைத்து படிப்பில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 25,26. 

சந்திராஷ்டமம்: 29,30.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

தர்ம சிந்தனை மேலோங்கும். தயாள குணத்துடன் பொதுப்பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களிடம் ஒற்றுமையாக இருப்பீர்கள். புதிய அசையும் அல்லது அசையாச் சொத்துகளை வாங்குவீர்கள். முக்கியமானவர்களைச் சந்தித்துப் பேச சந்தர்ப்பங்கள் கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் அவற்றை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரிகள் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையுடன் பழகுங்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். சிறிய முதலீட்டில் புதிய நிலங்களை வாங்கலாம். 

அரசியல்வாதிகள் கட்சி நலனுக்காகத் தீட்டும் திட்டங்களை மேலிடம் பாராட்டும். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். சிலர் பாராட்டுகளும் விருதுகளும் பெறுவீர்கள். பெண்மணிகள் மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள். கணவருடன் சுமுகமாக நடந்து கொள்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் போதிய கவனம் செலுத்தவும். மனதை ஒருமுகப்படுத்தும் கலையை கற்றுக் கொள்வீர்கள்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 26,27. 

சந்திராஷ்டமம்: 31.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

முன்னேற்றகரமான வாரம். மனதில் இருந்த அச்சங்கள் மறையும். உழைப்பு உயர்ந்த நிலையை தேடித்தரும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு உதவிகள் 
செய்வீர்கள். குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் பலப்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.  

உத்தியோகஸ்தர்கள் உழைப்பிற்கேற்ற  ஊதியம் கிடைக்கும். வேலைகளை திருப்திகரமாக முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் லாபகரமாகவே முடியும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கால்நடைகளால் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். 

அரசியல்வாதிகள் முயற்சிக்கேற்ற பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வருவாய் சிறப்பாக இருக்கும். கலைத்துறையினர் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பெண்மணிகள் கணவரின் மனமறிந்து நடந்து கொள்வீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். மாணவமணிகள் கடினமாக உழைப்பீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு உந்து சக்தியாக அமையும்.

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 25,27. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

உங்கள் மதிப்பு மரியாதை உயரும். செய்தொழிலில் புதிய அங்கீகாரம் கிடைக்கும். அபரிமிதமான லாபத்தைக் காண்பீர்கள். இனம் புரியாத பயத்திலிருந்து விடுபடுவீர்கள்.  குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்புகள் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாக முடியும். புதிய பொருள்களை வாங்கி விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் சலிப்பில்லாமல் உழைத்தால் பலன்களை அள்ளலாம். புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். 

அரசியல்வாதிகள் தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பழைய புகழும் கௌரவமும் திரும்பக் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள்  கை நழுவிப்போகும். சக கலைஞர்களையும் தயாரிப்பாளர்களையும் அனுசரித்து நடந்துகொண்டு பிரச்னைகளைத் தவிர்க்கவும். 

பெண்மணிகளுக்கு சோதனைகள் குறையும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவரின் ஆதரவு கிடைக்கும். மாணவமணிகளுக்கு சக மாணவர்களின் ஆதரவு அதிகரிக்கும். உங்கள் வருங்கால கனவுகள் பலிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். 

பரிகாரம்:  சனிபகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 26,28. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். ஆச்சரியமான செய்திகளைக் கேட்பீர்கள். உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். வெளியில் கொடுத்திருந்த கடன் திரும்பவும் கைவந்து சேரும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர். 

உத்தியோகஸ்தர்களுக்கு சிரமங்கள் குறையும். மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளில் பங்கு கொள்வார்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளித்து தங்களின்  பொருள்களை சந்தையில் விற்பனை செய்வீர்கள். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். மாற்றுப்பயிர்களைப் பயிரிட்டுப் பலன் பெறலாம்.

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். உங்களின் பணியாற்றும் திறனைக் கட்சி மேலிடம் பாராட்டும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். 

பெண்மணிகள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள்.  உறவினர்களுக்கு உதவுவீர்கள். மாணவமணிகள் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். ஆசிரியர்
களின் நன்மதிப்பைப்  பெறுவீர்கள்.

பரிகாரம்:  சூரியபகவானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 27,29.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய) 

கடினமாக உழைத்து எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். நண்பர்களைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் அனைத்து விஷயங்களிலும் முன்னிலைப் படுத்தப்படுவீர்கள். மன உளைச்சல்களிலிருந்து விடுபடுவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை உதாசீனப்படுத்தாமல் சரியாகச் செய்து முடிக்கவும். பணி நீக்கத்தில் இருந்தவர்கள் மறுபடியும் பணியில் சேர்வார்கள். வியாபாரிகளுக்கு செய்தொழிலில் புதிய சூழ்நிலை உருவாகும். பணவரவு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு அமோகமான விளைச்சல் கிடைக்கும். நல்ல முறையில் விற்பனை செய்து லாபத்தை அள்ளுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியிலும் வெளியிலும் மதிப்பு அதிகரிக்கும். கடினமான காரியங்களையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் மக்களைக் கவரும்படி செயல்படுவீர்கள். சக கலைஞர்களை சிறப்பாக வழிநடத்துவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தினரை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். உங்களின் சாதுர்யமான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். மாணவமணிகள் கடினமாகப் படித்து முதல் மதிப்பெண் பெறுவீர்கள்.

பரிகாரம்:  ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 25,28. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட செயல்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பொருளாதார வளம் பெருகும். உங்கள் மனதில் தைரியம் பிறக்கும். உங்களிடம் நெருங்கிப் பழக தயக்கம் காட்டிய உறவினர்கள் நெருங்கி வருவார்கள். குடும்பத்தில் உங்கள் கௌரவம் உயரும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும். சேமிப்பு உயரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். வர்த்தகர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். விவசாயிகளின் உடல்உழைப்புக்கு இருமடங்கு லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும். 

அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் கிடைக்கும். மேலிடத்தால் பாராட்டப் படுவீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் அரங்கேறும். சக கலைஞர்கள் நட்புடன் இருப்பார்கள். பெண்மணிகள் குடும்ப ஒற்றுமையை பேணிக் காப்பீர்கள். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவமணிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். கடினப் பயிற்சிகள் செய்து பெரிய சாதனைகளுக்கு அடித்தளம் போடுவீர்கள்.

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 26, 29. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

திறமைசாலிகளை நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். பணம் பற்றாக்குறை தீரும். அசையாச் சொத்துகள் விற்பனையால் பொருளாதாரம் உயரும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் தேடிவரும். குழந்தைகளை வெளியூருக்கு அனுப்பிப் படிக்க வைப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வீடு வாகனம் வாங்கக் கடன் கிடைக்கும். நிதி நெருக்கடிகள் தீர்ந்து  சகஜமான வருமானத்தைக் காண்பீர்கள். பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் ஒதுக்கி வைத்திருந்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கூட்டாளிகள் ஆதரவு அளிப்பார்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகைகள் கிடைக்கும். கால்நடைகளால் வருமானத்தைப் பெருக்குவீர்கள்.
 
அரசியல்வாதிகள் தாங்கள் ஒதுக்கி வைத்திருந்த விவகாரங்களில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். கலைத்துறையினருக்கு பணவரவு சிறப்பாக இல்லாவிட்டாலும் மனதிற்கு ஆறுதலான விஷயங்களைக் கேட்பீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். உடன் பிறந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மாணவமணிகளுக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.  

பரிகாரம்:  பெருமாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 28,29. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடிவரும். ஆன்மிக சிந்தனைகளால் உயர்வடைவீர்கள். செய்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.  எதிரிகளின் சதியை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். பொருளாதாரம் உயரத் தொடங்கும். முடிந்தஅளவு பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை சரியாகப் புரிந்து கொண்டு கச்சிதமாக முடித்து விடுவீர்கள். சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரிகள் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்வீர்கள். போட்டி பொறாமைகள் சற்று கூடுதலாகவே இருக்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். கையிருப்புப் பொருள்களைப் பத்திரப் படுத்தவும். 

அரசியல்வாதிகளுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். யாரிடமும் வீண் விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் பல தடைகளைத் தாண்டி புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். ரசிகர்களை அனுசரித்துச் செல்லவும்.  பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவ
மணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். 

பரிகாரம்: தினமும் 108 முறை "ஸ்ரீ ராமஜெயம்' எழுதி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 30, 31. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

வருமானம் நன்றாக இருக்கும். உதவிகள் கிடைக்கும். சுறுசுறுப்பாக உழைப்பீர்கள். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொண்டு கூட்டு முயற்சியால் முன்னேறுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கி நிம்மதியான சூழ்நிலை நிலவும். உடன்பிறந்தோர் ஆதரவு தருவார்கள். 

உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைப்பீர்கள். அதற்கேற்ற பலன்களையும் பெறுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற்று அலுவலகத்தில் முக்கிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் படிப்படியாக உயரும். புதிய யுக்திகளைப் புகுத்தி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் குறைந்தாலும் அதனால் எந்த பாதிப்பும் உண்டாகாது. சக விவசாயிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.

அரசியல்வாதிகள் ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள். சாதனைகள் செய்வதற்கான வாய்ப்புகள் தேடிவரும். கலைத்துறையினர் அவசரப் படாமல் ஆராய்ந்து புதிய வாய்ப்புகளைப் பெறவும்.  பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். புதிய இல்லங்களுக்கு மாறுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உடல் நலத்தை கவனிக்கவும்.

பரிகாரம்:  துர்க்கையை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 30.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

நடக்காது என்று நினைத்திருந்த காரியங்கள் நண்பர்களின் உதவியுடன் நடந்தேறும். பொறுமையுடன் இருக்க வேண்டிய காலமிது. கடுமையாக உழைப்பீர்கள். வருமானத்தில் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சிறப்பாக முடியும். எதிர்பார்த்தற்கும் அதிகமான வருமானம் கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளின் தொல்லை, கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கால் நடைகளால் நல்ல லாபமுண்டு. விவசாயப் பணிகளில் ஏற்படும் இடையூறுகள்  தானாகவே விலகிவிடும். 

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். சாதனைகள் செய்வதற்கு வாய்ப்பு உண்டாகும். கலைத்துறையினர் கடுமையாக உழைத்தால்தான் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். பணவரவு இருந்தாலும் மகிழ்ச்சி குறைவாகவே இருக்கும். 

பெண்மணிகள் கணவருடன் அன்பாகப் பழகி பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். மாணவமணிகள் கடுமையாக முயற்சி செய்து கல்வியில் முன்னேறுவீர்கள். 

பரிகாரம்:  குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 26, 31. சந்திராஷ்டமம்: 25.

{pagination-pagination}


மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள். விடாமுயற்சியோடு காரியங்களை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். நண்பர்களுக்கும் உங்களுக்குக்கீழ் பணியாற்றுபவர்களுக்கும் உதவிகள் செய்வீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக்ததில் சாதகமான நிலைமை தென்படும். எதிர்பார்த்திருந்த இடமாறுதல் தேடிவரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். புதிய முதலீடுகளைச் செய்து வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்தாலும் விற்பனையில் நல்ல லாபத்தைப் பெறமுடியாமல் போகும். சக விவசாயிகள் உதவியாக இருப்பார்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். கலைத்துறையினர் எதிர்பார்த்த புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். 

பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி நீடிக்கும். உங்கள் எண்ணங்கள் பூர்த்தியாகும். களவு போன பொருள்கள் திரும்பக் கிடைக்கும். மாணவமணிகள் படிப்பில் முழு கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம்:  விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 25, 31. 

சந்திராஷ்டமம்: 26,27,28.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com