வாக்கிய முறை, திருக்கணித முறை இவற்றில் ஜாதகம் கணிக்க மிகச் சரியான முறை எது? 

திருமணத்துக்கு முதலில் பார்ப்பது திருமணப் பொருத்தம்தான். பொருத்தம் இருந்தால்தான் திருமணமே நடைபெறுகிறது.
வாக்கிய முறை, திருக்கணித முறை இவற்றில் ஜாதகம் கணிக்க மிகச் சரியான முறை எது? 

திருமணத்துக்கு முதலில் பார்ப்பது திருமணப் பொருத்தம்தான். பொருத்தம் இருந்தால்தான் திருமணமே நடைபெறுகிறது. திருமணப் பொருத்தம் என்பது திருமணம் நடைபெற எடுக்கும் முயற்சியில் முதல்படியாகும். இதில் தவறு நடந்தால், வாழ்க்கையின் போக்கே மாறிவிடுகிறது.

ஜாதகக் கணிப்பில் இரண்டு முறைகள் இருக்கின்றன. ஒன்று வாக்கிய முறை; மற்றொன்று திருக்கணித முறை. இதில் எந்த முறையில் கணிப்பது? முதன் முதலில் வந்தது வாக்கிய முறை. அதற்குப்பின், வாக்கிய முறையில் உள்ள குறைகளைக் களைந்து வந்தது திருக்கணித முறை. திருக்கணித முறை தற்காலக் கணிதத்துடன் ஒத்துப்போகிறது. ஆகவே, திருக்கணித முறை மிகச் சரியான முறை என்பதில் சந்தேகம் இல்லை. வாக்கியத்தில் கணித்த ஜாதகத்தில் ஒருவரின் நட்சத்திரமே மாறிப்போகின்றது என்பதும் உண்மை.

சிலர் தங்களது ஜாதகத்தை வாக்கிய முறையிலும், திருக்கணித முறையிலும் கணித்து வைத்திருப்பார்கள். திருமணத்துக்கு வரும் ஜாதகம் திருக்கணிதமாக இருந்தால், தன் திருக்கணித ஜாதகத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். வாக்கிய ஜாதகமாக இருந்தால், தன் வாக்கிய ஜாதகத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். இதுவும் ஒரு தவறான அணுகுமுறை. ஜாதகங்களை திருக்கணித முறையிலேயே கணித்து வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் நம் ஜாதகம் சரியானதாக இருக்கும். பொருத்தம் பார்ப்பதும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

அடுத்ததாக, நமக்குப் பொருத்தம் பார்க்க வருகின்ற ஜாதகமும் திருக்கணிதத்தில் இருக்கிறதா எனப் பாருங்கள். இது கம்ப்யூட்டர் காலம். எந்த ஒரு ஜாதகத்தையும் ஒரு சில நிமிடங்களில் கணித்துவிடலாம். ஆகவே சரியான முறையில் ஜாதகத்தைக் கணித்து வைத்துக்கொள்ளுங்கள். அதற்குப் பிறகு பொருத்தத்தைப் பார்ப்போம்.

ஜாதகக் கணிதம் என்றவுடன், அயல்நாட்டில் பிறந்த குழந்தைகளின் ஞாபகம் வருகிறது. இப்போதெல்லாம், வெளிநாட்டில் குறிப்பாக அமெரிக்காவில் நமது குழந்தைகள் பிறக்கின்றன. அவர்களுக்கு ஜாதகம் எப்படிக் கணிப்பது? சிலர், அங்குப் பிறந்த குழந்தைகளின் ஜனன நேரத்தை இந்திய நேரமாக மாற்றி ஜாதகம் கணிப்பார்கள். இது ஒரு தவறான முறை. அங்குப் பிறந்த குழந்தைகளுக்கு அந்த இடத்தின் நேரத்தை வைத்துத்தான் கணிக்க வேண்டும். அமெரிக்காவில் நான்கு விதமான பொது நேரங்கள் உண்டு.

1. EASTERN STANDARD TIME

இது, கிரீன்விச் நேரத்தைவிட 5 மணி நேரம் குறைந்தது. இந்த நேரப் பகுதியில் வரும் ஊர்களெல்லாம் கிரீன்விச் நேரத்தைவிட 5 மணி நேரம் குறைவாக இருக்கும். கிரீன்விச்-க்கு மேற்கே 67.30 முதல் 82.30 வரை உள்ள தீர்க்கரேகையில் இருக்கும் ஊர்களெல்லாம் இந்தப் பொது நேரத்தின் கீழ் வரும்.

2. CENTRAL STANDARD TIME

இது, கிரீன்விச் நேரத்தைவிட 6 மணி நேரம் குறைவானது. 82.30 முதல் 97.30 முடிய உள்ள தீர்க்கரேகையில் வரும் ஊர்களெல்லாம் இந்த நேரப் பகுதிக்குள் வரும்.

3. MOUNTAIN STANDARD TIME

இது, கிரீன்விச் நேரத்தைவிட 7 மணி நேரம் குறைவானது. 97.30 முதல் 112.30 முடிய தீர்க்கரேகையில் வரும் ஊர்களெல்லாம் இந்த நேரப் பகுதியில் வரும்.

4. PACIFIC STANDARD TIME

இது கிரீன்விச் நேரத்தைவிட 8 மணி நேரம் குறைவாக இருக்கும். 112.30 முதல் 127.30 முடிய உள்ள தீர்க்கரேகையிலுள்ள ஊர்களெல்லாம் இந்த நேரப் பகுதியில் வரும்.

இவை தவிர, அலாஸ்கா நேரப் பகுதி, ஹவாய் தீவுகளின் நேரப் பகுதி என்றெல்லாம் இருக்கின்றன. ஆக, ஜாதகம் கணிக்கும் முன் குழந்தை பிறந்த ஊர் எந்த நேரப் பகுதியில் வருகிறது எனக் கண்டறிந்து அதற்கேற்றாற்போல் ஜாதகம் கணிக்க வேண்டும். அடுத்தது, Day Light Savings எனப்படும் D.L.S.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் உள்ள காலத்தில் சூரிய உதயம் சீக்கிரமாகவே ஆகிவிடும். அதே நேரம், அஸ்தமனம் மெதுவாகவே இருக்கும். இதனால், பகல்பொழுதின் அளவு அதிகமாக இருக்கும். இந்த பகல் நேர சூரிய வெளிச்சத்தைப் பயன்படுத்திக்கொள்ள, அவர்கள் கடிகார நேரத்தை ஒரு மணி நேரம் முன்னதாக்கிக்கொள்வார்கள். அதாவது, காலை 7.00 மணியை 8.00 மணி என்று ஆக்கிவிடுவார்கள். அதாவது பொது நேரத்தை ஒரு மணி நேரம் முன்னதாக்கிக்கொள்வார்கள். இவ்வாறு, D.L.S. இருக்கும் காலங்களில் பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தைக் கணிக்கும்போது, செயற்கையாக அதிகரிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஜாதகம் கணிக்க வேண்டும். இல்லையென்றால், தவறுதலான ஜாதகத்தை நாம் கணித்தவராவோம்.

இங்கு நாம் என்ன செய்கின்றோம். ஏதோ ஜாதகம் கணிக்கும் கடைகளில் ஜாதகத்தைக் கணிக்கிறோம். அந்தக் கடைக்காரருக்கு நாம் மேலே சொன்ன எதுவும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தவரையில் ஜாதகத்தைக் கணித்துக் கொடுப்பார்கள். நமக்கும் அந்த ஜாதகம் சரிதானா எனத் தெரியாது. ஏதோ ஜாதகமென்று ஒன்றை வைத்துக்கொண்டு, அதை வைத்துப் பொருத்தங்கள் பார்ப்போம். ஆகவே, வெளிநாடுகளில் பிறந்தவர்களுக்கு ஜாதகம் கணிக்கும்போது, ஒரு நல்ல ஜோதிடராகத் தேடிப் பிடித்து கணியுங்கள். கடைகளில் கணிக்காதீர்கள்.

அடுத்ததாக, பொருத்தத்துக்கு வருவோம். முதலில் ஜாதகத்தைத் தனியாக ஆராய வேண்டும். ஆயுள், குழந்தை பாக்கியம், குணநலன்கள், தேக ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத்தில் வரும் தசா, புத்திகள் என தனித் தனியாக ஆராய வேண்டும். இதில் ஏதாவது ஒரு அம்சத்தில் குறை இருந்தாலும் ஜாதகத்தை நிராகரிப்பது நல்லது. ஒரு உதாரண ஜாதகத்தைப் பார்ப்போம். இது ஒரு ஆணின் ஜாதகம்.

இந்த ஜாதகத்தைப் பாருங்கள். இந்த ஜாதகம் பொருத்தம் பார்க்க வந்தபோதே நன்றாக ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும். இதைப் பொருத்திய ஜோதிடர் கூறியதாவது -

இவருக்கு செவ்வாய் லக்கினாதிபதியாகி சொந்த வீட்டிலேயே இருக்கிறார். அவர் இந்த ஜாதகருக்கு லக்கினாதிபதியாவதால் நன்மையே செய்வார். தவிரவும், களத்திரஸ்தானமாகிய 7-ம் வீட்டில் 9-ம் வீட்டின் அதிபதியாகிய சந்திரன் உச்சம் பெற்று இருக்கிறார். சுக்கிரன் 12-ம் வீட்டின் அதிபதி. அவர் 8-ம் வீட்டில் மறைவது யோகத்தைக் கொடுக்கிறார். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்’ என்ற வாக்குப்படி, சுக்கிரன் நன்மையே செய்வார். ஆகவே, இந்த ஜாதகத்தைச் சேர்க்கலாம் என்று சேர்த்துவிட்டார்.

ஆனால், ஜாதகரின் திருமண வாழ்க்கை எப்படி இருந்தது? எப்பொழுதும் மனைவியுடன் சண்டை. வாய்ச்சண்டை மட்டும் அல்ல, கையாலும்தான். கடும் வார்த்தைகளால் மனைவியைப் பேசுவார். குடும்பத்தில் அமைதி என்பதே கிடையாது. இப்போது விவாகரத்துவரை நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறார். இத்தகைய நிலைக்குக் காரணமென்ன?

இவரது ஜாதகத்தில், செவ்வாய் ஒன்றாம் வீட்டுக்கும் 6-ம் வீட்டுக்கும் அதிபதி. முதல் வீடு என்பது குடும்பஸ்தானமான 2-ம் வீட்டுக்கு 12-ம் வீடு; 6-ம் வீடு என்பது களத்திரஸ்தானமான 7-ம் வீட்டுக்குப் பன்னிரண்டாம் வீடு. ஆக, குடும்ப வாழ்க்கைக்கு செவ்வாய் எதிரானவர் எனப் புலனாகிறதல்லவா. இவர் 7-ம் வீடான களத்திரஸ்தானத்தைப் பார்க்கிறார். செவ்வாய் ஒரு முரட்டுக் கிரகமல்லவா? ஆக, திருமண வாழ்க்கையும் அடிதடி நிறைந்ததாகவே அமைந்துவிட்டது.

அடுத்தது, களத்திரகாரகனாகிய சுக்கிரனுக்கு குருவின் 90 பாகைப் பார்வையான SQUARE என்னும் பார்வை. இது ஒரு கெடுதலைக் கொடுக்கும் பார்வையில்லையா? இந்தப் பார்வையின் பலன் என்ன? பணத்தை வீண் விரயம் செய்பவர். ஆடை, ஆபரணங்களுக்காகவும் தன் தேவைக்கு மேல் செலவு செய்பவர். திருமண பந்தத்தால் தொல்லை. வியாபாரத்தில் பங்குதாரர்களாலும் தொல்லை. திருமண பந்தத்தில் விவாகரத்து ஆகும் நிலை ஆகிய பலன்கள் இந்தப் பார்வைக்குச் சொல்லப்படுகின்றன.

இவ்வளவு வேண்டாத பலன்கள் இந்த ஜாதகத்தில் இருக்கும்போது, இந்த ஜாதகத்தைப் பொருத்தம் பார்க்காமலே நிராகரிப்பதுதானே முறை. அவ்வாறு செய்யவில்லை. இப்போது இவர்கள் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது.

இன்னும் ஒரு ஜாதகத்தைப் பார்ப்போம். இது ஒரு பெண்ணின் ஜாதகம்.

இந்த ஜாதகம் பொருத்தத்துக்கு வந்தபோது ஜோதிடர் கூறியதாவது -

இது ரிஷப லக்கின ஜாதகம். இந்த லக்கினத்துக்கு சனி யோககாரகன். ஆக, அவர் பார்வையால் 7-ம் இடம் கெட்டுவிடாது. நன்மைதான் பெறும். அதேபோல், செவ்வாயும் தன் சொந்த வீடான 7-ம் இடத்தைத்தான் பார்க்கிறார். ஆக, அவர் பார்வை நன்மையைத்தான் செய்யும். சுக்கிரன் லக்கினாதிபதி. அவர் லக்கினத்திலேயே இருப்பது நல்லதுதான். ஆகவே, இந்த ஜாதகத்தைச் சேர்க்கலாம் என்று கூறிச் சேர்த்தார்கள். ஆனால் முடிவு?

இந்தப் பெண் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தது மூன்றே மாதங்கள்தான். அவருடன் இந்தப் பெண் சண்டை போட்டுவிட்டு தன் பிறந்த வீடு சென்றுவிட்டாள். அத்துடன் இல்லை. கணவரின் குடும்பத்தில் உள்ள எல்லோரிடமும் சண்டை போட்டு, தன் சாமான்களையெல்லாம் எடுத்துக்கொண்டு பிறந்த வீட்டுக்கே சென்றுவிட்டாள். இவ்வாறு திருமணம் முறிவதற்குக் காரணம் என்ன?

சனி என்னதான் யோககாரகன் என்றாலும், அவர் குணம் எதையும் தாமதப்படுத்துவதுதான். ஆகவே, இந்தப் பெண்ணுக்கு அவர் 32-ம் வயதில்தான் திருமணம் நடைபெற்றது. அந்த அளவுக்குத் தாமதப்படுத்திவிட்டார். அடுத்தது, செவ்வாய் ஒரு முரட்டு சுபாவம் உள்ள கிரகம். அது லக்கினத்திலேயே இருந்ததுடன், லக்கினாதிபதியாகிய சுக்கிரனுடன் சேர்ந்தே இருக்கிறார். ஆகவே இந்தப் பெண் ஒரு முரட்டு சுபாவம் கொண்ட பெண்ணாக இருந்தார். யாருடனும் ஒத்துப்போகும் குணம் இல்லை.

அந்த செவ்வாய், திருமண பந்தத்தைக் குறிக்கும் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் திருமண வாழ்க்கை சண்டைச் சச்சரவாக இருந்தது. சுக்கிரன் 1-ம் வீட்டுக்கும் 6-ம் வீட்டுக்கும் அதிபதி. அவர் பார்வை நிச்சயமாக திருமண பந்தத்தைப் பாதிக்கும். திருமணத்துக்கு முன்பே இந்த ஜாதகத்தைச் சரியான முறையில் ஆராய்ந்திருந்தால், தேவையில்லாத அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை. தசப் பொருத்தங்களைப் பார்த்துவிட்டு, நல்ல பொருத்தம் இருக்கிறதென்று ஜாதகத்தைச் சேர்த்துவிட்டார்கள். முடிவு. விவாகரத்து. ஆக, பத்துப் பொருத்தங்களைப் பார்க்கும் முன், ஜாதகத்தை சரியான முறையில் ஆராய வேண்டும் என்பது அவசியமாகிறதல்லவா!

தசா சந்தி

ஆண், பெண் இருவர் ஜாதகங்களிலும் அடுத்தடுத்து வரப்போகும் தசைகளைப் பார்ப்பார்கள். இருவர் ஜாதகத்திலும், ஒரு வருட இடைவெளிக்குள் ஒரு தசை முடிந்து அடுத்த தசை தொடங்குமானால், இது தசா சந்தி எனப்படும். அதாவது, எந்தத் தசைக்கும் முதலில் வருவது அந்தத் தசையின் சுயபுத்தி. பொதுவாக, எந்தத் தசையாக இருந்தாலும், தன் சொந்தப் புத்தியில் நல்லது செய்யமாட்டார் என்ற கருத்து நிலவுகிறது. இது ஒரு தவறான கருத்து. இருப்பினும், இக்கருத்து எப்படியோ திருமணப் பொருத்தத்தில் புகுந்துவிட்டது. இந்தத் தசா சந்தியால் எவ்வளவோ நல்ல ஜாதகங்கள் பொருத்தம் இல்லாமல் போயிருக்கிறது. ஆகவே, இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்பது நமது அனுபவத்துடன் கூடிய கருத்து.

தோஷ சாம்யம்

இரு ஜாதகங்களிலும் தோஷம் சரியாக, சமமாக இருக்கிறதா எனப் பார்ப்பார்கள். இதுதான் தோஷ சாம்யம். உதாரணமாக, பெண் ஜாதகத்தில் 7-ல் ராகு இருந்தால், ஆண் ஜாதகத்திலும் 7-ல் ராகு இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பார்கள். இவ்வாறு இருந்தால், இரு ஜாதகத்திலும் தோஷம் சரியாக இருக்கிறதென்றும், அதனால் திருமண வாழ்வு சிறக்கும் எனவும் எண்ணிச் சேர்ப்பார்கள். ஆனால், 7-ல் ராகுவுக்கு சுபரின் பார்வை இருக்கிறதா? பார்வையால் ராகு நல்லவராக மாறி இருக்கின்றாரா என்பதைப் பார்ப்பதில்லை. தோஷத்துக்குத் தோஷம் என்ற விதத்தில் ஜாதகங்களைச் சேர்ப்பதுதான் பல திருமண தோல்விகளுக்குக் காரணம்.

செவ்வாய் தோஷம்

ஒரு ஜாதகத்தில், 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது தோஷமென்றும், அதேபோல் பொருத்தத்துக்கு வரும் ஜாதகங்களிலும் இருக்க வேண்டுமென்று சேர்ப்பார்கள். செவ்வாய் தோஷத்துக்கு 15 விதிவிலக்குகள் இருக்கின்றன. அவற்றை சரியாகக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இதனாலும் பல திருமணங்கள் தோல்வியில் முடிகின்றன.
ஆக, இந்தக் கட்டுரையின் நோக்கமே தசப் பொருத்தங்களைப் பார்க்கும் முன்னர், ஜாதகங்களைத் தனித் தனியாக ஆராய வேண்டும் என்பதுதான்.

- ஜோதிடர் எஸ். சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com