மலேசியாவில் ஒரு சபரிமலை! 

"கார்த்திகை மாதம் மாலையணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து பார்த்தசாரதியின் மைந்தனே உனை பார்க்க..
மலேசியாவில் ஒரு சபரிமலை! 

"கார்த்திகை மாதம் மாலையணிந்து நேர்த்தியாகவே விரதமிருந்து பார்த்தசாரதியின் மைந்தனே உனை பார்க்க வேண்டியே தவமிருந்து...'' என்றெல்லாம் பாட்டுப் பாடி ஆட்டம் போட்டுச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் அறிவார்கள் ஐயப்ப மகிமையை. அப்படி ஓர் ஆனந்த அனுபவத்தைச் சந்தித்தவர்தான் கிருஷ்ணன் நாயர். அந்த அனுபவம்தான் "தனிமலை ஐயப்பன்' என்ற தனி பெயரோடு புகழ் பெற்று விளங்கும் ஆலயம் அமைய அடித்தளமாக மாறியது. இந்த ஆலயம் இருப்பது மலேசியாவில். பத்துமலையில் இருந்து பத்து மைல் தொலைவில் உள்ளது.

கிருஷ்ணன் நாயர் தீவிரமான ஐயப்ப பக்தர். அவர் வசித்த பத்துமலை இந்தியன் செட்டில்மெண்ட் பகுதியில் அமைந்திருந்தது. நகருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தது அந்தப் பகுதி. அவர் வசித்த பகுதியில் புதிய குடியிருப்புகள் முளைத்தன. மக்கள் நடமாட்டம் அதிகரித்தது. பெண்கள் நடமாட்டமும் அதிகரிக்க ஐயப்பனை வைத்து வணங்க ஒரு பவித்ரமான சூழல் இல்லையே எனக் கவலையுற்றாராம். இந்த ஏக்கத்திற்கான பதில் தூக்கத்தில் கிடைத்தது கனவு வழியாக.

"நான் இவ்விடத்தில் இருக்க விரும்பவில்லை. பத்துமலைக்கு அருகில் உள்ள தனிமலையில் என்னை எழுப்பி வை'' என்பதுதான் கனவு வழி உத்தரவு. காலை புலர்ந்ததும் கனவில் வந்த இடம் நோக்கி விரைந்தார் கிருஷ்ணன் நாயர். அவ்விடம் பெரும் காடாகவும், இரண்டடி உயரத்திற்கு சகதியும் சேறும் நிறைந்தும், காட்டுப் பன்றி, விஷப்பாம்புகள் நடமாடும் இடமாகவும் இருந்தது.

இறைவனை அடைவதென்பது பக்தர்களுக்கு எளிதான காரியம் அல்ல! இந்த சோதனைகளை எதிர்கொள்வதில் உண்மையான பக்தர்கள் பின்வாங்குவதே இல்லை. தன் நண்பர் மேனனோடு, ஐயப்ப பக்தர்கள் சிலரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு அவ்விடத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தார் கிருஷ்ணன் நாயர். தனிமலையின் அடிவார குகைப் பகுதி ஓரளவுக்கு மக்கள் நடமாடக் கூடிய அளவிற்கு சுத்தமானது. இந்த அரியத் தொண்டிற்கு அவரோடு தோள் கொடுத்தவர்களில் ஆ சூன் என்ற சீனரும் முக்கியமானவர். சுத்தம் செய்யப்பட்ட இடத்திற்கு தன் இல்லத்தில் இருந்த ஐயப்பனை நாள், திதி,  நட்சத்திரம், யோகம், கரணம் எல்லாம் ஆராய்ந்து சுபவேளை கூடிய சுபநாளில் ஊர்வலமாக எடுத்துச் சென்றார். அதே நன்னாளில் ஆகம விதிகளின்படி, குருமார்கள் உதவியோடு தனிமலையில், ஐயப்பனை எழுந்தருளச் செய்தார்கள்.

இது நடந்தது 1975 இல். தனிமலையில் குடிகொண்ட ஐயப்பனுக்கு, தனியாளாக தங்கி நித்திய பூஜைகளை செய்து வந்தார் கிருஷ்ணன்நாயர். நாளடைவில் பக்தர்கள் வரவு கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்ததும், அவர்கள் தந்த நிதி உதவியோடு கோவில் விரிவடைந்தது. இக்கோவிலுக்கென்று இன்னும் சில சிறப்புகள் இருக்கின்றன. குகைக் கோயிலின் பக்க சுவர்களில் இயற்கையாக அமைந்த விநாயகர் உருவம், ஆதிசேஷனுடன் அரங்கநாதன் தோற்றம் மற்றும் அன்னை காளியம்மன் திருவுருதோற்றம், சிவலிங்க வடிவமும் பக்த அன்பர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

அதோடு, தனிமலை ஐயப்பனுக்கென்று தனி மகிமையே இருக்கிறது. தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைப்பான் ஐயப்பன் என்ற ஆழமான நம்பிக்கை இருக்கிறது. இக்கோயிலில் விநாயகருக்கென்று தனி ஆலயம், அன்னை தேவிக்காக சக்தி ஆலயம், தணிகைமலையில் குடி கொண்ட முருகன், இந்த தனிமலையிலும் தனி ஆலயத்தில் வீற்றிருக்க, மூலஸ்தானத்தில் பதினெட்டு படிகளுடன் நடு நாயகமாக ஐயப்பன் வீற்றிருக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும் ஆனந்த அனுபவம்.

- ஸ்ரீ கிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com