சகல பாப விமோசனம் பெற்று சந்தோஷம் நிலைக்க தாமிரபரணி புஷ்கரத்தில் நீராடுங்க!

நீண்ட நாட்களாக குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் தற்போது...
சகல பாப விமோசனம் பெற்று சந்தோஷம் நிலைக்க தாமிரபரணி புஷ்கரத்தில் நீராடுங்க!

நீண்ட நாட்களாக குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் தற்போது துலா ராசியில் இருக்கும் குரு பகவான் விருச்சிக ராசிக்கு வாக்கிய பஞ்சாங்கபடி கடந்த புரட்டாசி பதினெட்டாம் தேதியும் (4-10-2018) திருக்கணித பஞ்சாங்கபடி புரட்டாசி 25-ம் தேதியும் (11-10-2018) பெயர்ச்சியாவதை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் மஹா புஷ்கரம் கொண்டாடப்படுகிறது.  

தாமிரபரணி ஆறு

தாமிரபரணி தமிழகத்தில், அதாவது ஒரே மாநிலத்தில் 120 கிலோ மீட்டர் ஓடும் வற்றாத ஜீவ நதியாகும். முன்பு நெல்லை மாவட்டத்தில் மட்டுமே பாய்ந்த இந்நதி தற்சமயம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் என இரண்டாகப் பிரிந்து இரண்டு மாவட்டத்தில் ஓடுகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் பாளையங் கால்வாய் வழியாக வீணாகும் தண்ணீர் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மேலக்கால் வாயில் விழுகிறது.

தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் முதல் புன்னைக்காயல் முகத்துவாரம் வரை இந்நதிக்கரையில் மொத்தம் 143 படித்துறைகள் அமைந்துள்ளன. இப்புனித நதிக்கரையில் அமைந்துள்ள நெல்லை குறுக்குத்துறை படித்துறையில் 12-10-2018 அன்று மஹா புஷ்கரத்திருவிழா இந்து மடாதிபதிகளால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இந்தக் காலங்களில் குரு பகவான் தாமிரவருணி ஆற்றில் பயணிப்பதால் நதி பிரகாசமாக இருக்கும் என்றும், அந்த நேரம் நதியில் நீராடினால் நமது கவலைகள், பாவங்கள் தொலைந்துவிடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அகத்தியரும் தாமிரபரணியும்

சிவபெருமான் அகத்தியரை ‘‘தென் நாடு செல்க’’ எனக் கட்டளையிட்ட போது அகத்தியர், ‘‘அது தமிழ்நாடு. தமிழ் பாஷை தனக்குத் தெரியாது. ஆதலின், அதை தமக்கு உணர்த்துக’’ என சிவபெருமானிடம் கேட்டார். உடனே, தம் அருகே அவரை அமரவைத்து, தமிழைக் கற்றுக் கொடுத்தார் ஈசன். (தமிழ் மொழி அகத்தியர் காலத்துக்கு முன்னரே இருந்தது என்பது இதனால் தெள்ளத் தெளிவாய் தெரிய வருகிறது).

ஈசனிடம் தமிழைக் கற்றுக் கொண்டு பொதிகை மலையில் வந்து அமர்ந்தார் அகத்தியர். அவர் முன் சூரிய பகவான் தோன்றி, தமிழ் இலக்கணங்களை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். பின்னர், முதல் தமிழ்ச் சங்கத்தின் முதல்வராயிருந்து தமிழை வளர்த்தார் அகத்தியர். அகத்தியர் ஸ்நானம் செய்யும் பொருட்டு, சிவபெருமான் பொதிகை மலையில் ஒரு நதியை உருவாக்கி, அதை அவருக்கே தானமாகக் கொடுத்தார். தாம்பிர வர்ணத்தில் இருந்ததால் அந்நதிக்கு ‘‘தாம்பிர வர்ணி’’ என்று முதலில் பெயர் சூட்டப்பட்டது. காலப்போக்கில் அது தாமிரபரணி என்றாயிற்று. அகத்தியருக்காக ஈசனால் உருவாக்கப்பட்டு, வற்றாத ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருக்கும் இந்நதிக் கரையில் ஏராளமான திருக்கோவில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தாமிரபரணி மகாத்மியம்

வட இந்தியாவில் உள்ள கங்கை, யமுனை, சரையூ போன்ற நதிகளுக்கு ஈடாக தென்னிந்தியாவில் தாமிரபரணி மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் பெருமையை உணர்ந்த வேத வியாசர் தனது மகனாகிய சுக பிரம்ம ரிஷிக்கு தாமிரபரணியின் பெருமையை உபதேசம் செய்தார். அந்த உபதேச நூல்தான் ஸ்ரீதாமிரபரணி மகாத்மியம். தாமிரபரணி மேன்மையை ஆதிசேஷன், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு கூறினாலும் முடிவு பெறாது. அத்தகைய பெருமை உடையது என்று வியந்து போற்றுகிறார்.

மகாபாரதமும் ஆருண்ய பருவத்தில் 190-வது அத்தியாயத்தில் 95-வது ஸ்லோகத்தில் தாமிரபரணியின் பெருமையைக் கூறுகிறது. தாமிரபரணி பொதிகை மலையில் உற்பத்தி ஆகிறது. அது எந்த இடத்தில் உற்பத்தி ஆகிறது என்பதை இதுவரை யாரும் அறியவில்லை. யாரும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் மரம், செடி, கொடி வண்டுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த தாமிரபரணியில் உள்ள தீர்த்தக்கட்டம் பற்பல உள்ளது. அதில் காசியில் குளித்த புண்ணியம் கிட்டும் இடம் முறப்பநாடு ஆகும்.

இந்தியாவில் இரண்டு நதிதான் வடக்கிலிருந்து தெற்காக ஓடுகிறது. ஒன்று காசியில் உள்ள கங்கை நதி மற்றொன்று தாமிரபரணி. முறப்பநாட்டில் தாமிரபரணியில் குளிப்பது. காசியில் குளிப்பதற்கு நிகரானது என்று மகாத்மியம் கூறுகிறது. மேலும் கங்கையின் பாவத்தினை தாமிரபரணி போக்குவதால் மார்கழி மாதம் தாமிரபரணியில் எந்தப் பகுதியில் குளித்தாலும் கங்கையில் குளித்த புண்ணியம் கிட்டும்.

தாமிரபரணி  நதி ஒரு புண்ணிய நதியாகும். இதில் ஸ்நானம் (நீராடினால்) செய்தால் பாவங்கள் நீங்கும். இதை மக்கள் உணர்வதற்குப் புராணத்தில் ஒரு சம்பவம் இருக்கிறது. மக்கள் தங்களுடைய பாவங்களைப் போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாகச் சேர்ந்து தோஷம் ஏற்பட்டது. தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை. அதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு, “நீ தாமிரபரணி நதியில் நீராடு. உன் பாவம் நீங்கும்” என்றார். 

அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்யக்ஷேத்ரே விநச்யதி |

புண்ய க்ஷேத்ரே கிருதம் பாபம் வாரனாச்யாம்  விநச்யதி |

வாரனாச்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே  விநச்யதி |

கும்பகோணே க்ருதம் பாபம் தாமிரபரணி ஸ்நானே விநச்யதி |

ஒருமுறை, பிரம்மனின் புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரஸ மகரிஷிக்குப் பிறந்தவரான குரு பகவான், பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்தார். அவரின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினார். குரு பகவானை நோக்கி “உனக்கு என்ன வேண்டும” என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த குருபகவான்,” எனக்கு தங்களுடைய புஷ்கரம் தான் வேண்டும்” என்று கேட்டார். குரு பகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு அளிக்க ஒப்புக் கொண்டார் பிரம்மன். ஆனால் புஷ்கரம் பிரம்மனை விட்டுப் பிரிந்து குருவிடம் செல்ல மறுத்தது. இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரத்திற்கும் குரு பகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரம் இருக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி புஷ்கரம் மேஷ ராசியில் (கங்கை நதியிலும்), ரிஷப ராசியில் (நர்மதை நதியிலும்), மிதுன ராசியில் (சரஸ்வதி நதியிலும்), கடக ராசியில் (யமுனை நதியிலும்), சிம்ம ராசியில் (கோதாவரி நதியிலும்) கன்னி ராசியின் போது (கிருஷ்ணா நதியிலும்), துலா ராசியில் (காவேரி நதியிலும்) விருச்சிக ராசியில் (தாமிரபரணி ஆற்றிலும்), தனுசு ராசியின் போது (சிந்து நதியிலும்), மகர ராசியில் (துங்கபத்திரா ஆற்றிலும்), கும்ப ராசியில் (பிரம்ம நதியிலும்), மீன ராசியில் (பிரணீதா ஆற்றிலும்) என குருபகவான் எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில் புஷ்கரம் அங்குத் தங்கி இருக்கும். அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் முதலான முப்பது முக்கோடி தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது. மேற்படி 12 நதிகளில் குரு பகவான் பிரவேசிக்கும் நேரத்தில் 12 நாட்கள் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்துப் புனித நதிகளிலும் நீராடுவதற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

இம்முறை குரு பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் 11-10-2018 (வியாழன்) அன்று பிரவேசிப்பதால் தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. மேலும் இம்முறை கொண்டாடப்படும் தாமிரபரணி என்பது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் காவேரி மகா புஷ்கரம் ஆகும். அதனால் குரு பெயர்ச்சிக்குப் பிறகு வரும் அக்டோபர் 12 முதல் 12 நாட்கள் ஆதி புஷ்கரம் என்றும் அடுத்த குரு பெயர்ச்சிக்கு முன்புள்ள 12 நாட்கள் அந்திம புஷ்கரம் என்றும் கொண்டாடப்படுகிறது.

இந்த 12 நாட்களும் 12 ராசிகளைக் குறிப்பதாகும்.

12.10.2018 (வெள்ளி) - விருச்சிகம்

13.10.2018 (சனி) - தனுசு

14.10.2018 (ஞாயிறு) - மகரம்

15.10.2018 (திங்கள்) -  கும்பம்

16.10.2018 (செவ்வாய்) - மீனம்

17.10.2018 (புதன்) - மேஷம்

18.10.2018 (வியாழன்) - ரிஷபம்

19.10.2018 (வெள்ளி) - மிதுனம்

20.10.2018 (சனி) - கடகம்

21.10.2018 (ஞாயிறு) - சிம்மம்

22.10.2018 (திங்கள்) - கன்னி

23.10.2018 (செவ்வாய்) - துலாம்

ஜோதிடத்தில் தீர்த்த யாத்திரை செய்யும் அமைப்பு யாருக்கு?

ஜோதிடத்தில் ஒன்பதாம் வீட்டை தர்மஸ்தானம் எனச் சிறப்பாக கூறப்படுகிறது. எனவே தீர்த்த யாத்திரை போன்ற புண்ணிய காரியங்கள் செய்ய லக்கினமும் ஒன்பதாம் பாவமும் பலமான தொடர்பில் இருக்கவேண்டும். ஜாதகத்தில் பன்னிரண்டாம் பாவத்தை அயன சயன போக மோக்ஷ ஸ்தானம் எனப் போற்றப்படுகிறது. கால புருஷனுக்கு தனுர் ராசி ஒன்பதாம் பாவமும், மீனம் பன்னிரண்டாம் பாவமும் ஆகும். எனவே அதன் அதிபதியான குரு தர்ம காரியங்கள் மற்றும் தீர்த்த யாத்திரை போன்ற ஆன்மீக பயணங்களுக்கு செய்ய முக்கிய பங்கு வகிக்கிறார். ஜாதக ஒன்பதாம் அதிபதி அல்லது கால புருஷ ஒன்பதாம் அதிபதி ஜலராசியில் இருந்து சுபக்கிரகத்தின் பார்வை பெரும் போது அந்த ஜாதகன் புனித பயணங்களை மேற்கொள்வான். மேலும் புனித நதியில் நீராடும் பாக்கியம் பெறுவான்.

குரு பகவான் ஒன்பதாம் வீட்டைப் பார்த்தாலும் ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் சேர்ந்து தர்மகர்மாதிபதி யோகம் பெற்று இருந்தாலும் அந்த ஜாதகன் பல புனித பயணங்களை மேற்கொள்வான். ஒன்பதாம் வீட்டை குரு பகவான் பார்வை செய்தாலும் சந்திரனுக்கு ஒன்பதாம் வீட்டில் ஒரு சுப கிரகம் இருந்தாலும் அவன் பலமுறை புனித யாத்திரை செல்வான். ஒன்பதாம் அதிபதி லக்னத்தில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றால் அந்த ஜாதகன் புனித நீராடுவான். சுபக்கிரகத்தின் பார்வை பன்னிரண்டாம் வீட்டின் மீதும் பன்னிரண்டாம் அதிபதி மீதும் இருக்கும் போது மத ரீதியிலும் தர்ம காரியங்களுக்காகவும் ஆன்மீக பயணங்களுக்காகவும் தனது சொத்தை செலவிடுவார்.

பன்னிரண்டாம் அதிபதி சுபக்கிரகத்துடன் கூடி நின்றால் அந்த ஜாதகனை மரியாதைக்குரிய சுப செலவு செய்ய வைக்கும். ஜோதிடத்தில் மேஷம், சிம்மம் மற்றும் தனுசு தர்ம திரிகோணங்கள் எனப்படும்.  மேலும் கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய மூன்றும் மோக்ஷ திரிகோணங்கள் எனப்படும். தர்ம திரிகோண அதிபதிகளும் மோக்ஷ திரிகோண அதிபதிகளும் பரிவர்தனை பெற்று நின்றால் அடிக்கடி தீர்த்த யாத்திரை மற்றும் புனித யாத்திரை செய்யும் அமைப்பு ஏற்படும். மோக்ஷ திரிகோணங்களில் ஸர்ப கிரகங்கள் நின்றாலும் ஒன்பதாம் வீடு, ஒன்பதாம் வீட்டதிபதி ஸர்ப கிரங்களின் தொடர்பு பெற்றால் புனித யாத்திரை செய்யும் அமைப்பு ஏற்படும்.

குருபகவான் நீரினை குறிக்கும் சந்திரன் மற்றும் சுக்கிரனோடு தொடர்பு கொள்ளும்போது தீர்த்தயாத்திரை செய்யும் நிலை ஏற்படும். இந்தத் தாமிரபரணி புஷ்கரம் நடைபெறும் 12/10/2018 அன்று திருக்கணித பஞ்சாங்கபடி துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குச் செல்கிறார். மேலும் விருச்சிக ராசியில் இருந்து மீனம், ரிஷபம் மற்றும் கடகம் ராசிகளைப் பார்க்கிறார். இதில் மீன ராசியும் கடக ராசியும் நீர் ராசியாகி அமைந்து அதுவே குருவின் ஆட்சி மற்றும் உச்ச வீடாகவும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசி/லக்னம் ஒன்றுக்கொன்று திரிகோணமாகவும் அதுவே கால புருஷனுக்கு மோக்ஷ திரிகோணமாகவும் அமைந்திருப்பதால் இந்த மூன்று ராசி லக்னகாரர்களும் தாமிரபரணி புஷ்கர தீர்த்த யாத்திரையில் கலந்துகொள்வார்கள்.

1.  கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிகளை ராசியாகவோ லக்னமாகவோ  1-5-9 அதிபதிகளாகவோ கொண்டவர்கள்

2. எந்த லக்னமாக இருந்தாலும் கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிகளில் 1-5-9 அதிபதிகள் நிற்கப் பெற்றவர்கள்

3. எந்த ராசி/லக்னமாக இருந்தாலும் தர்மகர்மாதி யோகம் பெற்று கோச்சார குரு ஜாதக தர்மகர்மாதிபதிகளை பார்க்கப்பெற்றவர்கள்.

ஸ்நானம் என்னும் நீராடல் உடல் தூய்மைக்காக மட்டுமல்ல புறக்கண்களுக்குப் புரியப்படாத ஆன்ம தூய்மைக்காகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. புண்ணியத் தலங்களுக்குச் செல்லும்போது தவறாமல், அங்குள்ள புண்ணிய நதி, கிணறு, குளம் ஆகியவற்றில் ஸ்நானம் செய்வது அவசியம் என்கிறது சாஸ்திரம்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786; WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com