தாமிரவருணியில் மகாபுஷ்கர விழா தொடங்கியது: படித்துறைகளில் புனித நீராடி பக்தர்கள் மகிழ்ச்சி

தாமிரவருணியில் மகாபுஷ்கர விழா தொடங்கியது: படித்துறைகளில் புனித நீராடி பக்தர்கள் மகிழ்ச்சி

தாமிரவருணி மஹா புஷ்கர விழா இன்று காலை தொடங்கியது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மஹா புஷ்கரம்..

தாமிரவருணி மஹா புஷ்கர விழா இன்று காலை தொடங்கியது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மஹா புஷ்கரம் இன்று தொடங்கி இம்மாதம் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் படித்துறையில் புனித நீராடி மகிழ்ந்து வருகின்றனர். 

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கரம் நடைபெறும். மூன்றரைக் கோடி தீர்த்தத்திற்கு அதிபதியான பிரம்மாவின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கரமானவர் குரு பெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய நதிகளில் பன்னிரண்டு நாள்கள் பிரவேசம் செய்து வாசம் செய்வதாக நம்பிக்கை. அதன்படி குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்வதாலும், கிரகங்களின் அமைப்புப்படியும் 144 ஆண்டுகளுக்குப் பின்பு மஹா புஷ்கர விழாவாக தாமிரவருணியில் நிகழாண்டில் கொண்டாடப்படுகிறது.

பொதிகை மலை முதல் புன்னக்காயல் வரை 149 கி.மீ. பயணிக்கும் தாமிரவருணி நதியில் மொத்தம் 143 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. அவற்றில் 64 தீர்த்தக்கட்டங்கள் மட்டுமே பக்தர்கள் நீராடும் வகையில் உள்ளன. போக்குவரத்து வசதி, இயற்கையான சூழல் உள்ளிட்ட சில காரணங்களால் பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், கருப்பன்துறை, குறுக்குத்துறை, கைலாசபுரம் (தைப்பூச மண்டபம்), வண்ணார்பேட்டை, மணிமூர்த்தீஸ்வரம், அருகன்குளம் (ஜடாயு தீர்த்தம்), முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட 18 தீர்த்தக்கட்டங்களில் அதிக அளவிலான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். 

மகா புஷ்கர விழா இன்று காலை நெல்லை இருகன்குளம் ஜடாயு தீர்த்த படித்துறையில் தீர்த்தவாரியுடன் மகா புஷ்கர விழா தொடங்கியது. விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, தாமிரபரணி நதியை வணங்கி புனித நீராடி மகிழ்ந்து வருகின்றனர். தாமிரவருணியில் நடைபெறும் புஷ்கர விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகி பங்கேற்க உள்ளார். பின்பு அங்குள்ள படித்துறையில் புனித நீராடிவிட்டு பாபநாசம் சேனைத்தலைவர் சமுதாய கூடத்தில் நடக்கும் தாமிரவரணி புஷ்கர துறவிகள் மாநாட்டில் பங்கேற்கிறார். 

மாலை 5.15 மணிக்கு நெல்லை அருகன்குளம் ஜடாயு தீர்த்த பகுதியில் நடைபெறும் புஷ்கர விழாவில் தமிழக ஆளுநர் கலந்துகொண்டு ஆரத்தி பூஜையை தொடங்கி வைக்கிறார். இதற்காக தீர்த்தகட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மகா புஷ்கர விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் அடங்கிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் கமாண்டோ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மீட்புப் பணிக்காக படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com