பக்கவாத நோயினால் அவதிப்படுகிறீர்களா? கற்கடேஸ்வரரை வணங்குங்க!

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 29-ம் தேதி உலகப் பக்கவாத தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
பக்கவாத நோயினால் அவதிப்படுகிறீர்களா? கற்கடேஸ்வரரை வணங்குங்க!

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 29-ம் தேதி உலகப் பக்கவாத தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பக்கவாதத்தைத் தடுப்பதும் சிகிச்சை அளிப்பதும் குறித்த விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்துவதே இதன் நோக்கம். பக்கவாதம் ஓர் உலக சுகாதாரப் பிரச்னை. உலகெங்கும் இறப்புக்கும் ஊனத்திற்கும் இது ஒரு முக்கிய காரணம். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் பக்கவாதத்தால் 2 கோடி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் ஆண்டுக்கு 15 லட்சம் பேர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதாகப் புள்ளி விவரம் கூறுகிறது.

பக்கவாத நோய்

பக்கவாதம் மூளை தாக்கப்படுதல் எனவும் அழைக்கப்படுகிறது. மூளைக்கு இரத்தம் செல்வதில் உண்டாகும் இடையூற்றை இது குறிக்கிறது. பாதிக்கப்பட்ட மூளைப்பகுதிக்கு உயிர்வளியும் சத்துக்களும் கிடைக்காததால் செல்கள் மரணம் அடைகின்றன.

கழுத்தின் இரு பக்கங்கள் வழியாக தலைக்குச் செல்லும் கழுத்து தமனிகள், இதயத்தில் இருந்து, மூளைக்கு ரத்தத்தைக் கொண்டு செல்கின்றன. பெரிதாக உள்ள ரத்தக்குழாய்கள், பல கிளைகளாக பிரிந்து, நுண்ணிய ரத்தக் குழாய்களாக மாறி, மூளையின் எல்லாத் திசுக்களுக்கும் தேவையான பிராண வாயு, ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. மூளைக்குச் செல்லும் பெரு, சிறு ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்டம் குறைதல் மற்றும் தடைப்படும்போது, பிராண வாயு, ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது தடைப்பட்டு, மூளையின் சில பாகங்கள் செயல் இழந்து, உடலின் சில பாகங்களும் செயல் இழக்கின்றன. இதை, பக்கவாதம் (ஸ்ட்ரோக்) என்கிறோம். மாரடைப்பு போன்று, இதை, மூளை அடைப்பு எனலாம்.

ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாத நோயின் அறிகுறிகள்

கை, கால், முகத்தில் திடீர் பலவீனம் அல்லது உணர்ச்சியின்மை, பேசுவதில் சிரமம், பார்வையில் கோளாறு, நடப்பதில் சிரமம். தலைச்சுற்றல், சமநிலை இழப்பு, கடும் தலைவலி போன்ற அறிகுறிகள் காணப்படும். அறிகுறிகள் தெரிந்த மூன்று மணி நேரத்திற்குள், 'சிடி' ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ள மருத்துவமனைக்குப் பாதிக்கப்பட்டோரை அழைத்துச் செல்ல வேண்டும். மூளை அடைப்பை உறுதி செய்ய வேண்டும். மூன்று மணி நேரத்திற்குள், ரத்த அடைப்பு நீக்கும் மருந்து செலுத்தினால், முற்றிலும் குணப்படுத்த முடியும்.தாமதமாக வந்தால், மருந்து போட்டாலும் பயனில்லை. பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே தான், அந்த மூன்று மணி நேரத்தை, 'பொன்னான நேரம்' என்கிறோம்.

பக்கவாத நோயிற்கான ஜோதிட காரணங்கள்

பக்கவாத நோயின் அறிகுறிகள் மற்றும் அதன் விளைவுகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இது ஒரு தனிப்பட்ட நோயல்ல என அறிய முடிகிறது. இந்நோய் மூளை, நரம்பு, இதய கோளாறுகளின் விளைவுகளோடு வாத நோயின் தன்மையையும் கொண்டதாக அமைந்திருக்கிறது. உயர் வாத பித்த தோஷத்தால் ஏற்படும் தலை மற்றும் மூளை சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சூரியனே காரகர் எனப் பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. சந்திரனும் புதனும் மன அழுத்தத்தினால் ஏற்படும் நோய்களின் காரகராவர். செவ்வாய் தலையில் ஏற்படும் காயம் மற்றும் திடீர் என ஏற்படும் விளைவுகளின் காரகர் ஆகும்.

கால புருஷ ராசியின் லக்னம் மற்றும் முதல் ராசியான மேஷம் மற்றும் ஒருவரது ஜென்ம லக்னமும் தலை மற்றும் மூளை நோய்களுக்கான பாவங்களாகும். ஆத்ம காரகனான சூரியனும் கால புருஷ லக்னாதிபதி மற்றும் ரத்தத்தின் காரகரான செவ்வாயும் அசுப தொடர்பு பெற்று லக்னம், காலபுருஷ ஆறாமதிபதியும், வாத கிரஹமும், மூளை மற்றும் நரம்பின் காரகரான புதன் ஆகியவற்றோடு தொடர்பு கொள்ளும்போது மூளை தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றோடு வாத கிரஹமான சனைச்சர பகவானின் அசுப தொடர்பு பக்கவாத நோயை ஏற்படுத்துகிறது.

பக்கவாத நோயை ஏற்படுத்தும் கிரஹ இணைவுகள்

1. ரத்தத்தின் காரகரான செவ்வாய் வாத கிரஹங்களான புதன் மற்றும் சனியோடு இணைந்து ராகுவை எந்த விதத்திலேனும் தொடர்பு கொள்வது.

2. லக்னத்தில் அசுப கிரஹங்கள் நின்று குரு மற்றும் சந்திரனின் இணைவைப் பெறுவது.

3. ராகு லக்னத்தில் நின்று மற்ற அசுப கிரஹங்களை தொடர்பு கொள்வது.

4. செவ்வாய் லக்னாதிபதியாகி புதன், சனி மற்றும் 6/8/12 மற்றும் பாதகாதிபதிகளின் தொடர்பு பெறுவது.

5. சனி லக்னாதிபதியாகி அசுப தொடர்புகளோடு லக்னத்தில் நிற்பது.

6. சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய நான்கு கிரஹங்களும் எந்த விதத்திலேனும் அசுப தொடர்புகளோடு நின்று சூரிய தசை சனி புத்தி, புதன் தசை செவ்வாய் புத்தி போன்ற தசா புத்திகள் நடைபெறுவது.

7. லக்னத்தில் சூரியன், புதன், செவ்வாய் ஆகிய கிரஹங்கள் நின்று கோசாரக சனி மற்றும் ராகு இவர்களைத் தொடர்பு கொள்வது.

8. குரு லக்னத்தில் நின்று சனி மூலை ராசியான மிதுனத்தில் அல்லது 7ம் வீட்டில் நிற்பது மற்றும் செவ்வாயின் பார்வை பெறுவது.

9. சந்திரன் லக்னாதிபதியாகி செவ்வாய், புதன் மற்றும் சனியின் தொடர்பைப் பெறுவது.
 

10. அசுப தன்மை பெற்ற புதன் நில ராசியில் நின்று செவ்வாய், சனி மற்றும் ராகுவின் தொடர்பை பெறுவது.

11. செவ்வாய், புதன், சனி மற்றும் ராகு எட்டாமிடத்தில் நிற்பது தீவிரமான பக்கவாத நோயை ஏற்படுத்துகிறது.

12. சூரியன் எட்டாமிடத்தில் நின்று அசுப தன்மை பெற்ற புதன், செவ்வாய், சனி ராகு ஆகிய கிரஹ சேர்க்கை பெறுவது முகத்தில் பக்கவாத நோயை ஏற்படுத்துகிறது.

பக்கவாத நோயிற்கான ஜோதிட பரிகாரங்கள்

1. மேற்கண்ட கிரஹ இணைவுகளை ஜாதகத்தில் கொண்டவர்கள் தொடர்ந்து சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய கிரஹங்கள் மற்றும் அவர்களின் அதிதேவதைகளை வணங்கி வர பக்கவாத நோயில் வருவதில் இருந்து விடுபட முடியும்.

2. சூரிய பரிகார ஸ்தலங்களான ஆடுதுறை, சூரியனார் கோயில், சென்னை வியாசர் பாடி ரவீஸ்வரர் கோயில், திருமயிலை விருபாக்ஷீஸ்வரர் போன்ற ஸ்தலங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் வணங்கி வருவது, உடற்பயிற்சியோடு கூடிய சூரிய நமஸ்காரம் செய்வது.

3. ரத்தத்தின் காரகனான அங்காரகனை வைத்தீஸ்வரன் கோயிலில் வணங்கி வைத்தியநாத ஸ்வாமியை வேண்டி திருச்சாந்துருண்டை சாப்பிட்டுவர நாட்பட்ட நோய்களும் குணமாகும்.

4. மூளை, நரம்புகளின் அதிபதியான புத பகவானை திருவெண்காடு ஸ்தலத்தில் புதன் கிழமைகளில் வணங்கி வருவது மற்றும் புரத சத்து நிறைந்த பாசி பயறு சுண்டல் செய்து நவகிரஹ புதனுக்கு நிவேதனம் செய்து மற்றவர்களுக்கு வினியோகம் செய்துவிட்டு சாப்பிட்டுவரப் பக்கவாத நோயின் தீவிரம் குறையும். 

5. புதன் கிரஹத்தின் அதிதேவதையான ஸ்ரீ மஹாவிஷ்ணுவை வணங்கி ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து வருவது மற்றும் செவ்வாய், புதன் ராகு இணைவு பெற்ற ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வருவது ஆகியவை பக்கவாத நோயிலிருந்து குணப்படுத்தும் பரிகாரங்களாகும்.

6. திருவிடைமருதூர் திருந்துதேவன்குடி அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் காவிரி நதியின் வடகரை தலங்களில் 42-வது தலம் ஆகும். இத்தலம் கடக ராசிக்காரர்களுக்கான பரிகாரத்தலம் ஆகும். ஒரு சமயம் இப்பகுதியை ஆண்டு வந்த சோழ மன்னன் ஒருவனுக்குப் பக்கவாத நோய் ஏற்பட்டது. வயதான மருத்துவ தம்பதியர் வந்து நோயை குணப்படுத்தினர். பரிசாக மன்னன் அவர்களுக்குப் பொன்னும், பொருளும் கொடுக்கும் பொழுது அதை ஏற்க மறுத்தனர். வியந்த மன்னன் அவர்களிடம், தாங்கள் விரும்புவது எதுவாக இருந்தாலும் நிறைவேற்றி வைக்கிறேன் என்றான். பின்னர் அவர்கள் இவ்விடத்திற்கு அழைத்து வந்து லிங்கம் இருந்த இடத்தில் கோயில் எழுப்பும்படி கூறி லிங்கத்தில் ஐக்கியமாயினர்.  

மருத்துவ தம்பதியர் உருவத்தில் வந்தது சிவன், பார்வதி என்பதை உணர்ந்த மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பினான். இவரிடம் வேண்டிக்கொள்ளப் பிணிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. சம்பந்தர் இவரை பிணி நீங்கும் சிவன் என்று பதிகம் பாடியுள்ளார். நீண்டகாலமாகப் பக்கவாத நோயினால் அவதிப்படுபவர்கள் அமாவாசை மற்றும் தேய்பிறை அஷ்டமி  நாட்களில் கற்கடேஸ்வரரையும், அருமருந்து நாயகியையும் வழிபட்டு, அபிஷேகம் செய்த நல்லெண்ணெய்யை உட்கொண்டால் சர்வ வியாதிகளுக்குமான ஒரு  நிவாரணி ஆகும். 

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com