அவதாரம்! குறுந்தொடர் 5

மானுஜரோ, முதற்காரியமாக அருளாளனின் ஆறாவது கட்டளைப்படி பெரிய நம்பியை ஆசார்யனாக ஏற்று, பஞ்ச சம்ஸ்காரங்களை அவரிடம் பெற ஸ்ரீரங்கம்
அவதாரம்! குறுந்தொடர் 5


மானுஜரோ, முதற்காரியமாக அருளாளனின் ஆறாவது கட்டளைப்படி பெரிய நம்பியை ஆசார்யனாக ஏற்று, பஞ்ச சம்ஸ்காரங்களை அவரிடம் பெற ஸ்ரீரங்கம் நோக்கிப் புறப்பட்டார். பெரிய நம்பியோ ராமானுஜரைச் சந்திக்க காஞ்சி நோக்கி வந்து கொண்டிருந்தார். எதிரெதிரே புறப்பட்ட இருவரும், வழியில் மதுராந்தகத்தில் எதிர்கொண்டனர்.  தண்டனிட்டு வணங்கிய ராமானுஜரை வாரி அணைத்து எடுத்து வாழ்த்தினார் பெரிய நம்பி.  கருணாகரப் பெருமாள் (இப்போது ஏரிகாத்த ராமன் திருக்கோயில் எனப்படுகிறது என்பர்) சந்நிதியில் இருவரும் இளைப்பாறினர். "எண்ணிய பயன் எதிர்ப்பட்டது! எல்லாம் இறைவன் செயல்' என மகிழ்ந்தனர்.

"அடியேனுக்கு இப்போதே மந்திர உபதேசம் செய்தருள வேண்டும்' என்று வேண்டினார் ராமானுஜர். ராமானுஜரின் தணியாத ஆர்வம் கண்டு, அப்போதே பெருமாள் சந்நிதி பிரகாரத்தில் நம்மாழ்வாரின் அம்சமான மகிழ மரத்தடியில் பெரிய நம்பிகள், பஞ்ச சம்ஸ்காரத்தை ராமானுஜருக்குச் செய்துவித்தார்.  
"பஞ்ச சம்ஸ்காரம்' என்பது வைணவனைப் பக்குவப்படுத்தும் ஐந்து விதமான வைணவச் சடங்குகள் ஆகும். அவை, தாப, புண்ட்ர, நாம, மந்த்ர, யாக சமஸ்காரம் எனப்படும். 

பெருமாளின் சங்கு, சக்கரம் ஆகியவற்றை நிரந்தரமாக உடலில் முறையே வலது தோளில் சக்கரத்தையும், இடது தோளில் சங்கத்தையும் முத்திரையாக நெருப்பில் சுட வைத்துப் பொறித்துக் கொள்வது "தாப சமஸ்காரம்' ஆகும்.  

நெற்றியில் மட்டுமின்றி உடலில் பன்னிரு இடங்களில் திருமண் காப்புத் தரித்தல் ஆகும். இவற்றைத் தரிக்கும்பொழுது பன்னிரு இடங்களான நெற்றி, நாபி, மார்பு, கழுத்து, இருதோள்கள், பிடரி, பின் இடுப்பு ஆகிய உடலின் பாகங்களில் முறையே, கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திருவிக்கிரம, வாமன, ஸ்ரீதர, ஹிருஷிகேச, பத்மநாப, தாமோதர மூர்த்திகளைத் தியானித்து திருமண்காப்பு அணிவது "புண்டர சமஸ்காரம்' எனப்படும். 

"நாம சம்ஸ்காரம்' என்பது, பெற்றோர்கள் வைத்த பெயரைத் தவிர ஆச்சார்யன் (குரு) வைக்கும் நாமமாக ஒன்றை வைத்துக்கொள்ளுதல் ஆகும். இதற்கு, "தாஸ்ய நாமம்' என்று பெயர். கோத்திரம், சூத்திரம் முதலிய சரீர சம்பந்தமான சிறப்புகளை விடுத்து, ஓர்  ஆத்மாவுக்குரிய ஒருபடியான தாஸஸ்ய நாமாவை அடியேன் என்னும் பெயரை ஏற்றல். என்பதே நாம சமஸ்காரம் ஆகும்.

"மந்திர சம்ஸ்காரம்' என்பது, "ஓம் நமோ நாராயணாய!' என்ற எட்டெழுத்தான நாராயண மந்திரத்தையும் மறை பொருளோடு த்வயம், சரம ஸ்லோகம் (மோட்சத்துக்கான வழி) ஆகியவற்றை ஆச்சாரியன் மூலம், வலது செவியில் உபதேசமாகப் பெறுதல் ஆகும். "யாக சம்ஸ்காரம்', என்பது சரீரம், ஆத்மா இவைகளைப்பற்றி தொடர்ந்து வரும் கர்மம், ஞானம் இவற்றுக்குப் போக்கு வீடாக அமையும்படி, எம்பெருமானின் மூர்த்தியை, அமைத்துக் கொடுத்து, திருவாராதனம், திருவாராதனை, பூசை செய்யும் முறைமைகள் ஆகியவற்றை முறையாக ஆச்சாரியனிடம் கற்றுக்கொள்ளல், இவை அனைத்தும் ஒரு நன்னாளில், ஒரே வேளையில் நடத்தப்படும். 

இத்தகைய பஞ்ச சம்ஸ்காரத்தைத்தான் ஆச்சாரியனாக இருந்து பெரிய நம்பிகள், ஸ்ரீ ராமானுஜருக்கு 983 ஆண்டுகளுக்கு முன்னர் செய்து வைத்தார். இந்த ஐந்தும் பெற்றவரே ஸ்ரீ வைஷ்ணவ நெறியில் ஒழுகக்கூடிய தகுதி பெற்றவர் ஆவார். சீடர்கள் வேண்டியபடி, பெரியநம்பி தம் துணைவியுடன் காஞ்சிக்குச் சென்றார். அங்கு, ராமானுஜர் தமது இல்லத்தில் ஒரு பகுதியில் ஆசார்யன் பெரிய நம்பியைக் குடியமர்த்தினார். தமிழ் மறையாம் திருவாய்மொழி மூலபாடத்துக்கு விவரம் தம் குருவிடம் கற்று வந்தார். ஆசார்ய தொடர்பு பெற்று ஸ்ரீ வைணவ நூல்களைப் பயின்று பிரசாரப் பணிகளையும் தொடங்கியிருந்த ராமானுஜரின் தனி வாழ்வு மெல்ல மெல்ல ஸ்ரீ வைணவப் பொது வாழ்வாகப் பரிமளித்து வந்தது. அவரை நாடிப் பலர் கூடினர். அவரது புகழும் ஆத்ம குணச்சிறப்பும் மெல்ல மெல்ல உலகெங்கும் ஒளிரத்துவங்கியது.

மற்றொரு நாள், தஞ்சமாம்பாளும் ஆசார்யன் பெரிய நம்பியின் தேவி விஜயாம்பாளும் கிணற்றில் நீர் எடுக்கச் சென்றபோது, சிறு சச்சரவு ஏற்பட்டது. விஜயாம்பாள் குடத்திலிருந்து  தெளித்த நீர் தஞ்சமாம்பாள் குடநீரில் விழுந்துவிட்டது. ஆசார்யனின் மனைவி என்றும் கருதாமல் தஞ்சமாம்பாள் தரம் குறைந்த சொற்களால் பேசிவிட்டாள். அதைக் கணவர் பெரிய நம்பியிடம் தனிமையில் தெரிவித்தாள் விஜயாம்பாள்.

பெரிய நம்பியோ, ராமானுஜர் கேட்டால் விபரீதம் விளையும். அதற்கு முன் நாம் இவ்விடத்தை விட்டு திருவரங்கம் சென்றுவிட வேண்டும் என்று மனைவியுடன் புறப்பட்டுவிட்டார். வழக்கம்போல் ஆசார்ய அனுக்ரகம் பெற வந்த ராமானுஜருக்கு அவர் அங்கு இல்லாதது தெரிந்தது. "சொல்லாமல் சென்றுவிட்டாரே அபசாரப்பட்டு விட்டேனே'  என்று நெஞ்சம் பதறினார். தஞ்சமாம்பாளை அதட்டி நடந்ததைக் கேட்க, அவளும் உள்ளதைச் சொல்லி நின்றாள்.

"கொடிது கொடிது, ஆசார்ய அபசாரம் மிகக் கொடிது'' என்று அலறிக்கொண்டே இனி இவளுடன் இல்லறம் நல்லறமாகச் செல்லாது என்ற முடிவுக்கு வந்தார்.
ஸ்ரீவைஷ்ணவப் பணிக்கு இடையூறான இல்லறத்தைத் துறக்கத் துணிந்தார் ராமானுஜர்.  உடனிருந்த கந்தாடை ஆண்டான் (தாசரதி), கூரத்து ஆழ்வான் போன்ற துணைவர்களோடு திருக்கச்சி நம்பியிடம் சென்று தம் உள்ளக் கிடக்கையை வெளியிட்டார். முப்பதாம் வயதிலிருந்து நாற்பதற்குள் இல்லறத்தில் நிகழ்ந்தவை அவரை துறவு கொள்ளச் செய்தன.

ஸ்ரீ ராமானுஜர் ஆளவந்தாரை மனத்தில் இருத்தி, திருக்கச்சி நம்பியை முன்னிருத்தி, அருளாளனை நேரில் தண்டனிட்டு, தமக்குச் சந்நியாச வாழ்வை வழங்குமாறு வேண்டினார்.

காஞ்சிபுரத்தில் அனந்த புஷ்கரணியில் நீராடினார். காஷாயம் உடுத்தினார், முக்கோல் ஏந்தினார், நீரில் நின்றார். ""துறக்க வேண்டிய அனைத்தும் துறந்தேன், துறந்தேன்.. துறந்தேன்..!'' என மும்முறை கூறி, உறுதியேற்க வேண்டிய நேரம் வந்தது. அந்நேரத்தில் ராமானுஜர் முதலியாண்டானைத் (தாசரதியை) தவிர மற்ற யாவற்றையும் துறந்தேன் என்று கூறி துறவு பூண்டார். துறவுக்கோலம் பூண்ட ராமானுஜர் முன்னிலும் அதிகமாக பொலிவுடன் விளங்கினார்.

எல்லாவற்றையும் துறந்த அவருடைய வடிவைக் கண்டு "யதிராஜா!'' என்று அழைத்தார்  திருக்கச்சி நம்பி. ராமானுஜருக்கு அருளாளன் இட்ட தூய ஆசிரமப் பெயர் "யதிராஜன்' என்பதையே அனைவரும் போற்றி வழங்கத் துவங்கினர்.
- இரா.இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com