பேருந்து நஷ்டத்தை ஈடுகட்ட மக்களுக்கு கஷ்டத்தை கொடுக்கலாமா?

நாட்டில் இன்று எத்தனையோ பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. அந்த பிரச்னைகளை எல்லாம் தீர்க்க வலியுறுத்தி மக்களின் போராட்டங்கள்,
பேருந்து நஷ்டத்தை ஈடுகட்ட மக்களுக்கு கஷ்டத்தை கொடுக்கலாமா?

நாட்டில் இன்று எத்தனையோ பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. அந்த பிரச்னைகளை எல்லாம் தீர்க்க வலியுறுத்தி மக்களின் போராட்டங்கள், அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் என எத்தனை, எத்தனையோ காட்சிகள் செய்தி ஊடகங்களில் அரங்கேறினாலும், மக்கள் பிரச்னைகள் பிரச்னைகளாகவே உள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.

அதிலும் குறிப்பாக மக்களுக்கு சேவையாற்றக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களால் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம். உதாரணமாக தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துத் துறை செயல்பாடுகளை குறிப்பிட்டுச் சொல்லலாம். 

இன்றைய சூழலில் லாபம் ஈட்டித் தராத பொதுத்துறை நிறுவனங்களை அரசு கண்டு கொள்ளவதில்லை. அதனாலேயே அந்நிறுவனங்கள் மேலும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் மிக நீண்ட காலமாகவே தமிழக அரசு போக்குவரத்துத் துறை நஷ்ட கணக்கையே காட்டி வருகிறது. இரண்டு மூன்று பேருந்துகளை வைத்துக் கொண்டு ஒரு சில வழித்தடங்களில் மட்டும் இயக்கும் தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறது. ஆனால் அரசு போக்குவரத்து எப்போதும் நஷ்டத்தில் இயங்குவதாகவே சொல்லப்படுவது ஏன் என்ற கேள்வி எல்லோருக்கும் சர்வசாதாரணமாகவே எழும். 

கடந்த, 1972- ம் ஆண்டு, தனியார் வசம் இருந்த பேருந்துகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டன.  தற்போது எட்டு கோட்டங்களாகவும், 22 மண்டலங்களாகவும், இயங்கி வரும் இந்த அரசு பேருந்துகளை நம்பித்தான் பெரும்பாலான கிராமப்புற மக்களும் நகர்புற நடுத்தர மக்களும் உள்ளனர். அப்படிப்பட்ட நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள, 22 மண்டலங்களில், 2,200 பேருந்துகளின் இயக்கத்தை, படிப்படியாக நிறுத்த, அரசு உத்தரவிட்டிருப்பது உண்மையில் அதிர்ச்சி அளிக்க கூடிய செய்தியாகவே உள்ளது.

பயணிகளுக்கு பாதிப்பின்றி, 1 கி.மீ.,க்கு, 18 ரூபாய்க்கு வசூல் குறைவாக உள்ள பேருந்துகளை நிறுத்த வேண்டும் என, அரசு சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் பேருந்து வசதி கிடைக்காத கிராமப்புறங்களை சுட்டிக்காட்ட வேண்டிய தருணத்தில் தீடீர் என இந்த அறிவிப்பு நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்லுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  

அது மட்டுமல்லாமல் தனியார் பேருந்து நிறுவனங்களின் லாபத்துக்கு துணை போகிற அறிவிப்பாகவும் இது அமைந்துவிடும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். ஆனால் இது குறித்து, தமிழ்நாடு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன பொதுச்செயலர் தரப்பில், ஒரே நேரத்தில், ஒரு ஊருக்கு, பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், அந்த வழித்தடங்களில் பேருந்துகளை குறைத்தால் நஷ்டம் குறையும் என்று தெரிவித்திருப்பது ஒருவகையில் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான் என்றாலும் அந்த பேருந்துகளை, கூட்டம் அதிகமாக உள்ள வழித்தடங்களுக்கு மாற்றினால் பள்ளிக் கல்லூரி நேரங்களில் படிக்கட்டில் தொங்கி செல்லும் நிலைமாறும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

அதேசமயத்தில் பல்வேறு அரசு பேருந்துகளின் பராமரிப்பும் கேள்வி குறியாகவே உள்ளது. இதனால் பேருந்துகள் விபத்தில் சிக்கும்போது, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பெருமளவு இழப்பீடு கொடுக்க வேண்டியுள்ளது. கடந்த 1972 ம் ஆண்டு போக்குவரத்துத் துறை உருவாக்கப்பட்ட போதே, சட்டப்பூர்வமாக காப்பீட்டில் இருந்து விலக்கு பெறப்பட்டுவிட்டது.

இதானல் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டியது போக்குவரத்துத் துறையின் பொறுப்பாகிவிடது. அவ்வாறு இழப்பீடு வழங்காத அரசு பேருந்துகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்படுகிறது. அவ்வாறு ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகள் நீண்ட இழுபறிக்கு பிறகு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டப் பின்  விடுவிக்கப்படுகிறது.

இது போன்ற ஜப்தி நடவடிக்கைகளை முற்றிலும் தவிர்க்க, மத்திய ரயில்வே துறை ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணச்சீட்டு எடுக்கும் போது பயணிகளிடம் வசூல் செய்யும் 92 காசுகள் பிரீமியம் மூலம் ரூ.10 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படுவது போல் போக்குவரத்து துறையும் நெடுந்தூரம் இயக்கப்படும் பேருந்துகளுக்கு மட்டுமாவது  பொதுக் காப்பீட்டு துறையுடன் இணைந்து பயணிகள் பாதுகாப்பு திட்டம் ஒன்றை அமல்படுத்த வேண்டும். 

இது ஒருபக்கம் இருக்க பைப்பாஸ் ரைடர், எஸ்.எப்.எஸ் என்ற பெயர்களில் இயக்கப்படும் பேருந்துகளால் பல்வேறு சிற்றூர்களில் பேருந்து வசதி அரிதாகிவிட்டதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. மேலும் 2,200 பேருந்துகளின் இயக்கத்தை படிப்படியாக நிறுத்துவதாக அரசு அறிவித்துள்ள அறிவிப்பின் மூலம் அந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என்ன பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து கோடைவிடுமுறை காலங்களில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டாலும், தற்போது அறிவித்துள்ளபடி புறநகர் பேருந்து இயக்க குறைப்பினால் குக்கிராமங்களின் பேருந்து சேவை முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவே பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

நிதி நெருக்கடி, போக்குவரத்து கழகத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே இருப்பதாக சொல்லப்படுகிறது.  கட்டண உயர்வு, ஓரளவு நிதிநெருக்கடியை தவிர்த்தாலும், டீசல் மற்றும் உதிரிப்பாகங்கள் விலையேற்றம் காரணமாக பராமரிப்பு சிக்கலாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கெல்லாம் காரணம் போக்குவரத்து துறை மக்கள் சேவைக்கான துறை என்பதை மறந்து அதை லாபம் ஈட்டும் துறையாக்க முனைவதுதான். இலவச திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியில் பாதியை போக்குவரத்து துறை போன்ற மக்கள் சேவையில் பிராதனமாக உள்ள துறைளுக்கு ஒதுக்கி முதல்தரமான துரித சேவையை வழங்க அரசு முற்பட வேண்டும்.

போக்குவரத்துக் கழகத்தின் நஷ்டத்திற்கான காரணத்தை கண்டுபிடித்து மண்டலங்கள் இடையே, ஒருங்கிணைந்த அட்டவணையை ஏற்படுத்தி கூடுதல் பேருந்து தேவைப்படும் வழித்தடங்களை கண்டு அப்பகுதியில் இயக்கினால் பயணிகளுக்கும் போக்குவரத்துக் கழகத்துக்கும் நன்மை பயக்கும் என்பதில் ஐயம் இல்லை.  அதை விடுத்து நஷ்ட கணக்கை காட்டி துறையின் சேவைகளை முடக்குவது, மக்கள் மீது கட்டண உயர்வுகளை திணிப்பது போன்ற நடவடிக்கை அரசின் செயல்பாட்டில் அதிருப்தியை தரும் என்பதே உண்மை. 
                                                                        - திருமலை சோமு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com