அதிமுகவின் அரசியல் நகர்வுகள்: திசை மாறுகிறதா ஓ. பன்னீர் செல்வத்தின் தர்மயுத்தம்

மனித வாழ்வின் உறவில் ஒரு பிளவு, ஒரு விரிசல் என்று வந்து விட்டால் மீண்டும் அது இணைவது என்பது அத்துணை எளிதானதாக இருக்காது,
அதிமுகவின் அரசியல் நகர்வுகள்: திசை மாறுகிறதா ஓ. பன்னீர் செல்வத்தின் தர்மயுத்தம்

மனித வாழ்வின் உறவில் ஒரு பிளவு, ஒரு விரிசல் என்று வந்து விட்டால் மீண்டும் அது இணைவது என்பது அத்துணை எளிதானதாக இருக்காது, ஏன் என்றால் எல்லா விரிசல்களுக்கும் பிரிவுகளுக்கும் மிக முக்கிய காரணமாக இருப்பது ஈகோ என்று சொல்லக் கூடிய தன்முனைப்புதான்.

இந்த தன்முனைப்பைத் தாண்டி யாராவது ஒருவர் பகையை மறந்து விட்டுக் கொடுத்தால்தான் உறவின் விரிசல் மாறும். அல்லது ஒரு பிறப்பு ஒரு இறப்பு, திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் ஏதாவது ஒன்று கூட அந்த விரிசலை மாற்றிவிடும். ஆனால் அரசியலில் இதுவெல்லாம் கணக்கு இல்லை. பணமும் பதவியும் தான் முக்கியம் என்று சொல்லும் அளவுக்கு உறவும் பிரிவும் இருக்கும் என்பதை காலம் நமக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் காட்டிக் கொடுத்திருக்கிறது. 

இன்றைய சூழலில் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருப்பது அதிமுகவில் ஏற்பட்டுள்ள விரிசலும் ஆட்சியின் நிலையற்ற தன்மையும் தான்.   சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அதிமுகவை தோற்றுவித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மறைந்த போது இதேப் போன்ற ஒரு விரிசலை அக்கட்சி சந்தித்தது. அதன் பின்னர் இப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அன்றைய கதை வேறு என்றாலும் கூட சில கூட்டல் கழித்தல்கள் ஒன்றாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஜெயலலிதா மறைவுக்குப் பின் இரண்டாகப் பிரிந்த அதிமுக மீண்டும் இணைவதற்கான முயற்சிகள் இப்போது நடந்து வருகின்றன. இதற்காக அ.தி.மு.க. அம்மா அணியில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அணிகள் ஒன்றாக செயல்பட வேண்டும் என்று ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வமும் கருத்து தெரிவித்திருந்தார். அவர் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் செய்தி வெளியானதால், விரைவில் இரு அணிகளும் ஒன்றாக இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு நான் தயாராக இருப்பதாக வெளியான தகவல் தவறானது. 

இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாக சமரசம் செய்வதற்கு குழு வந்தால் வரவேற்பேன் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார். அப்படியானால் நீங்கள் தர்மயுத்தம் தொடங்கியுள்ளாதாக முன்னர் கூறியது இப்போது ஆட்டம் கண்டுள்ளதா.? இரு துருவமாக ஆன அதிமுகவை இணைக்கும் முயற்சியில் நடுநாயகமாக இருப்பது யார்..? அவர்களுக்கு இதில் கிடைக்கும் ஆதாயம் என்ன போன்ற கேள்விகள் இயல்பாகவே எழுகிறது.

ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் போல் இந்த விசயத்தில் ஆரம்பத்தில் இருந்தே பெரிய அண்ணாவாக இருந்து செயல்படுவது தில்லி மேலிடம்தான் என்றும் மிஸ்டர் விசுவாசம் இப்போது தன் முழுவிசுவாசத்தையும் தில்லி மேலிடத்துக்கு காட்டிவருவதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் ஓ.பி.எஸ் தலைமையில் கட்சியும் ஆட்சியும் அமைய வேண்டும் என்று தில்லி மேலிடத்தார் விரும்புவதாகவும் அதற்கான நகர்வுகளை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

அதேசமயம் ஓ. பன்னீர் செல்வம், சசிகலா குடும்பம் கட்சியில் இருக்கக் கூடாது என்றும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக் கொண்டு வர வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த உறுதி மொழியை மட்டும் ஓ.பன்னீர் செல்வம் தளர்த்தி விட்டு அதிமுக சசிகலா அணியுடன் அவர் ஒன்றிணைந்தால் அவர் ஆட்சி அதிகாரம், கட்சி பொறுப்பு, இரட்டை இலை சின்னம், மத்திய அரசின் ஆதரவு என எல்லாவற்றையும் கூட பெற்றுவிடலாம். ஆனால் அதிமுகவின் உண்மை தொண்டர்களும் மக்களும் ஜெயலலிதாவின் சமாதியில் நீங்கள் செய்த சத்தியத்தையும் தியான மொழியையும் மறக்க மாட்டார்கள்.

காற்றில் பறக்கவிடும் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி போல் எந்நேரமும் எல்லாவற்றையும் மக்கள் மறந்து கொண்டே இருப்பார்கள் என்றுமட்டும் கனவு காண வேண்டாம். ஓ. பன்னீர் செல்வம் என்ற முன்னாள் முதல்வர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, ஜெயலலிதாவின் உண்மை தொண்டன், அவர் மறைவுக்குப் பின்னும் அவர் பெயரை காப்பார் என்பதுதான். அதை நிறைவேற்ற அவர் எந்த சூழலிலும் தவறாமல் இருக்க வேண்டும். அதற்கு அவர் செய்ய வேண்டியது தான்எடுத்த முடிவில் இருந்து எக்காலத்திலும் பின்வாங்காமல் இருந்து செயல்படுவதுதான். ஆட்சி அதிகாரத்திற்கும், கட்சிப் பதவிகளுக்கும் விலை போனால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும். 

அதிமுக ஒன்றுபட்ட கட்சியாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால்  அதற்கான அவசியமும் அவசரமும் இப்போது என்ன வந்தது. அன்று நீங்கள் தியானம் செய்து விட்ட நான் வெறும் 10 சதவீத உண்மைகளை மட்டும்தான் சொல்லி இருக்கிறேன். என்றீர்கள் உண்மையிலேயே எதிரியை வீழ்த்த வேண்டும் என்று சொன்னால், நீங்கள் மிஸ்டர் க்ளீன் என்று சொன்னால் மீதம் உள்ள 90 சதவீத உண்மைகளில் சிலவற்றை இதற்குள் எடுத்து சொல்லியிருக்கலாமே. 

அதுமட்டும் இன்றி நேர்மையாக நீங்கள் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறதே, நீங்கள் தொடங்கிய அம்மா இலவச கல்வி மையப் பணிகள், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிந்தததும் கொண்டாடப்போவதாக சொன்ன எம்.ஜி.ஆர் நூறாண்டு விழா, அரசு செய்ய தவறிக் கொண்டிருக்கும் பல்வேறு மக்கள் நலப்பணிகள் அதையெல்லாம் கையில் எடுத்து செய்து கொண்டிருந்தாலே நீங்கள் தான் உண்மையான அதிமுக என்றும் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்றும் மக்கள் தானாகவே ஏற்க தொடங்கி விடுவார்கள். ஆனால் அதைவிடுத்து இப்போது திடீர் என இடைத்தேர்தல் ரத்தான கையோடு கட்சி ஒன்றிணைக்கும் பணியில் இறங்குவதும், இரட்டை இலையை மீட்க நினைப்பதும் அதற்கான பேச்சுவார்த்தைக்கு செவி சாய்ப்பதும் உள்ளாட்சி தேர்தலுக்கான கணக்கா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதற்கிடையில் அதிமுக கட்சி ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கி கொண்டிருப்பதாக ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் எண்ணுவதாகவும், அதனால் இனி மேல் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் குடும்பத்தின் தலையீடு அதிமுக கட்சியில் இருக்கக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து அதிமுக கட்சி மற்றும் ஆட்சியை காப்பாற்ற வேண்டிய நிலை தற்போது உள்ளது எனவும், அதனால் அதிமுகவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இந்த போக்கு எடப்பாடி ஆட்சியை காப்பாற்றுமா என்ற பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. எது எப்படியோ சுதந்திரமாக செயல்படக்கூடிய ஒரு கட்சியும் நல்லாட்சி ஒன்றை மட்டுமே மக்கள் விரும்புகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com