பாடலில் முக சேஷ்டைகளுக்கு இடம் இல்லை - எஸ்.ஜானகி

எஸ்.ஜானகி பேட்டி
பாடலில் முக சேஷ்டைகளுக்கு இடம் இல்லை - எஸ்.ஜானகி

நான் பேட்டிக்கு சென்ற பொழுது பழத்தட்டு புஷ்பமாலையுடன் 'தபோவனம்' ஸ்வாமி ஹரிதாஸ் அவர்களின் தரிசனம் முடித்து ஜானகியும், அவரது கணவரும் அப்பொழுதுதான் திரும்பி வந்திருந்தார்கள்.

தாங்கள் திரை உலகிற்கு எப்படி வந்தீர்கள்?

மோனோ ஆக்டிங்கில் புகழ் பெற்றிருந்த என் மாமனார் திரு.சந்திர சேகர ராவ் அவர்கள் மூலம், 1957-ல் ஏ.வி.எம் நிறுவனத்தின் பாடகர் பட்டியலில் சேர்க்கப்பட்டேன். 'விதியின் விளையாட்டு' என்ற பாடலை தி.சலபதிராவ் அவர்கள் இசையமைப்பில் முதன் முதலாக பாடினேன்.

தங்களுடைய  இன்றைய உயர் நிலைக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

உடனேயே ஜானகி கணவர் ராம்பிரசாத்  அவர்களை கனிவுடன் பார்த்து புன்னகைக்கிறார். அவர் நிமிர்ந்து உட்காருகிறார்.

என்னை பற்றிப் பிறர் அறியச் செய்து இத்தனை ஆண்டுகளாக ஊக்குவித்து வரும் என் கணவரை குறிப்பிட வேண்டும்.தொடர்ந்து வாய்ப்பளித்து வரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், உடன் பாடிய கலைஞர்கள், பத்திரிக்கையாளர்கள், ரசிகர்கள் யாவருடைய ஆதரவாலும்தான் நான் முன்னேற முடிந்தது.

இதுவரை எத்தனை பாடல்க ள் பாடியிருக்கிறீர்கள்?

14 மொழிகளில் சுமார் 6500 பாடல்கள் பாடி இருக்கிறேன்.

பாடுவதற்கு அதிக சிரமம் எடுத்துக் கொண்ட பாடல் எது?

சுலபம் என்று எதையும் நான் நினைப்பதில்லை. பாடுமுன் கடவுளை வேண்டிக் கொண்டு பாடுவேன்.குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், 'ஹேமாவதி' என்ற கன்னட படத்தில் எல்.வைத்தியநாதன் இசையமைப்பில் பாடிய 'சிவசிவ எந்தை நாலியே யாகே' என்ற பாடலைச் சொல்லலாம். தோடி, ஆபோகி ராகங்களில் ஸ்வரம் போட்டு பாடிய அந்த பாடலை மிகவும் சிரமப்பட்டு பாடினேன்.  

சிறுகுழந்தை முதல் வயோதிகர்கள் வரை யாருக்கும் பொருந்தும் வகையில் பாட தங்களால் எப்படி முடிகிறது?

'மாடுலேஷன்' என்பார்களே அப்படி அவரவருக்கு தக்கபடி குரலை ஏற்றி இறக்கி வளைத்து பாடவேண்டும். கொஞ்சம் ஒத்திகை  பார்த்துக் கொள்வேன். அவ்வளவுதான்.

தங்கள் பாடிய மிகவும் புகழ் பெற்ற பாடல்கள் எவை?

ஐயோ, அவ்வளவையும் சொல்ல வேண்டும். சிலவற்றைச் சொல்கிறேன். 'தூக்கம் உன் கண்களை, தேன் சிந்துதே வானம், காலையும் நீயே, சிங்கார வேலனே, மச்சானை பாத்தீங்களா, செந்தூர பூவே' ஆகியவை மிகப் பிரபலமானவை.

தாங்கள் மேல் ஸ்தாயியில் பாடும் பொழுது உணர்ச்சி பாவங்கள் உங்கள் முகத்தில் தெரிவதில்லையே ஏன்?

பாடலுக்கு குரல் மூலம் உணர்ச்சியூட்ட வேண்டும். அங்கே முக சேஷ்டைகளுக்கு இடம் இல்லை. சாதகம் செய்யும் முறைதான் இதற்கு காரணம் என்பது என் கருத்து.

தங்களது ஆசை, குறிக்கோள் என்ன?

இறுதி மூச்சு உள்ள வரை பாடிக்கொண்டே இருக்க வேண்டும்.

பேட்டி: பத்மநாபன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.12.82 இதழ் ) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com