ரெண்டாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கிட்டு பெங்களூருக்கு ஓடிட்டேன் - விஜயகாந்த்

இளமை நினைவுகள் - விஜயகாந்த்
ரெண்டாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கிட்டு பெங்களூருக்கு ஓடிட்டேன் - விஜயகாந்த்

ஸ்கூல்ல நான் ஒரு ஆவரேஜ் ஸ்டூடண்ட்தான். ஆவரேஜ்னு கூட சொல்ல முடியாது.அதுக்குக் கீழே. எட்டாவது வரைக்கும் ஒழுங்கா  படிச்சுக்கிட்டு இருந்த எனக்கு அதுக்கப்புறம் படிப்புல இண்டெர்ஸ்ட்  வரல. புத்தி சினிமா பக்கம் பறக்க ஆரம்பிச்சிடுச்சு. ஸ்கூல்ல அந்த வயசுல என்ன மாதிரி சினிமா பாத்தவங்க இருக்க முடியாது. சினிமான்னா அப்படி ஒரு வெறி. இப்ப ஏதோ சினிமா நடிகனாகிட்டேங்கிறதுக்காக அப்ப எனக்கு சினிமான்னா  உயிருன்னு பொய் சொல்லல. அதுவும் எம்,ஜி.ஆர் நடிச்ச படம்னா முதல்நாள் முதல் ஷோவில் என்னை பாக்க முடியும். மேல மாசி வீதியில எங்க வீட்டுல இருந்து நான் படிச்ச நாடார் ஹைஸ்கூலுக்கு தினமும் சைக்கிள்லதான் போவேன்.

என்ன மாதிரி இன்னும் சில பசங்க இருந்தாங்க. வீட்டுல காலைல சாப்பிட்டிட்டு சைக்கிள் எடுத்துக்கிட்டு கிளம்பினோமுன்னா ஒரு இடத்துல வழக்கமா சந்திப்போம்.  அங்கே இருந்து கிளம்பி ஊரை சுத்திட்டு மாட்னி ஷோ பாத்திட்டு, லேட்டா வந்ததுக்கு 'ஸ்பெஷல் க்ளாஸ்ன்னு' பொய் காரணம் சொல்லிட்டு சாப்பிட்டு படுத்தா அப்படி ஒரு தூக்கம் வரும். கனவுல கூட எம்.ஜி.ஆர் எதிரிகள அடிச்சு நொறுக்கறது சந்தோசமா  இருக்கும்.

எத்தனை நாளைக்கு வண்டி இப்படியே ஓடும்? தொடர்ந்து பல நாள் ஸ்கூலுக்கு போகாம இருந்ததுனால வீட்டுக்கு லெட்டர் வந்து ஏக ரகளையா போச்சு. என்னை ஸ்கூலுக்கு கொண்டு விட ஒருத்தர், திருப்பி கூட்டிகிட்டு வர ஒருத்தர்னு ஏற்பாடு பண்ணுனாங்க. நடுநடுவுல ஸ்கூலுக்கு வந்து என்னோட சைக்கிள் இருக்கான்னு  கண்காணிப்பு வேற. ஸ்கூல் வகுப்பை சிறைச்சாலை மாதிரி உணர ஆரம்பிச்சேன். இதுல இருந்து  தப்பிக்க ஒரு வழி கண்டு புடிச்சேன். என்னோட சைக்கிள இருக்குற இடத்துலயே வச்சிட்டு பிரண்டு ஒருத்தனோட சைக்கிள எடுத்துக்கிட்டு பழையபடி கிளம்பிடுவேன். 'டேய், நீ என்ன வேணா பண்ணும்,ஆனா படிக்கிற காலத்துல ஒழுங்கா படி' அப்டினு எங்கப்பா எனக்கு அட்வைஸ் பண்ணாத நாளே கிடையாது. ராத்திரி நேரம் சாப்பாடு போட்டுக்கிட்டே. 'அப்பா சொல்றபடி கேளுடா, ஒழுங்கா படி' ன்னு அம்மா சொல்லத் தவறுணதேயில்லை.

சினிமாங்கிற விஷயம் முழுசா மூளைய ஆக்கிரமிச்சிருக்கறப்ப வேற எதையும் மண்டையில ஏத்திக்கறதுக்கு இடமில்லை.அந்த வருஷம் படிப்பை முழுசா கோட்டை விட்டேன். பச்சையான சொல்லனும்னா பெயிலாயிட்டேன்.     

அடுத்த ஸ்டேஜ் வந்தது. உடம்புல முறுக்கேறி வாலிபம் வந்ததுக்குஅப்புறம் சினிமாவோட கூட பொண்ணுங்களை கலாட்டா பண்ற சுவராஸ்யமும் சேர்ந்து போச்சு. இப்ப நினைச்சா  கூட சிரிப்பு வர்ற இந்த விஷயத்துக்காக அப்ப அடிதடி கலாட்டா எல்லாம் நடக்குறது சகஜம்.

நடுவுல வீட்ல ரொம்ப திட்னாங்கன்னு ரெண்டாயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கிட்டு பெங்களூருக்கு என் பிரண்ட் வீட்டுக்கு ஓடிட்டேன். அப்புறம் ஒரு வழியா வீட்டுக்கு தகவல் தெரிஞ்சு வந்து சமாதானம் சொல்லி கூட்டிகிட்டு போனாங்க.

பேட்டி:உத்தமன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.01.1984 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com