கல்லறைப் பூவின் கண்ணீர்துளி: கோவை புதியவன்

நாற்றமெடுத்து வாழ்ந்தவனும்
நறுமண வாழ்வு தந்தவனும்
சமச்சீர் பாடமாகிறான்
சவமாய் வரும்போது

வாக்கு வங்கி சேர்த்தவனும்
வயிறு வங்கி காலியானவனும்
"இறைவனடி" என்ற பெயரில்
இங்கு மட்டுமே சங்கமம்

அரைசாண் வயிறுக்கு ஓடியவனும்
ஆடம்பரத்தில் திளைத்தவனும்
உடலாய் ஊர்வலம் போகையில்
உடன் செல்கிறோம் மணக்க மணக்க

இறைவன் பாதம் தொடும்போதும்
இறுதி யாத்திரையில் வீசும்போதும்
எங்கள் நறுமணத்தில்
என்றும் இருந்ததில்லை பேதம்

பனிக்குடத்தில் தொடங்கி
பானை உடைத்து முடியும்வரை
பிறந்த உலகில் ஆடிய ஆட்டம்
இறந்துபோகையில் ஆறடியில் அடக்கம்
மனிதா!

நாளை நாங்கள் வாடினாலும்
இன்று சொல்கிறோம் கண்ணீரோடு
கல்லறையில் எல்லோரும் சமம் என்பதை
கருவறையில் கால் பதிக்கும்போதே விதையாக்கு
தற்கொலையில்லா விவசாயிபோல்
தழைத்தோங்கும் மனிதம் என்றென்றும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com