கல்லறைப் பூவின் கண்ணீர்த் துளி: -ரெத்தின.ஆத்மநாதன்

கல்லறைப் பூ நான்!
தினந் தினம்
பிணம் பார்த்து...
உலகியல் இதுதான்
என்றே உணர்ந்தாலும்...
சில மரணங்களை
என்னாலுங் கூட 
ஜீரணிக்க முடிவதில்லை!

அன்றொரு நாள்...
அர்த்த ராத்திரியில்
அவசரமாகத் தோண்டினர்
ஆழமாய்க் குழியை!

அரைத் தூக்கத்தில் நான்
அவ்விடம் நோக்கினால்...
பக்கத்திலேயே பாடையில்
பருவ நாயகன் பிணம்!

குழியை வெட்டி...
கொஞ்ச நேரம் ஆனபின்னால்தானே
கூட்டமாய் அனைவரும்
கொண்டு வருவர் பிணத்தை!
வில்லங்கம் இருந்தால்தானே...
பிணத்தை வைத்துக் கொண்டே
குழியைத் தோண்டுவர்!

இரவெல்லாம் இழந்தேன் துயிலை!
விடிந்து போனதும்
விடையும் கிடைத்தது!
கலப்பு மணமாம்!
ஜாதி வேறாம்!

பெண்ணின் பெற்றோர்
பெண்ணைக் கொல்ல...
ஏவப்பட்ட ஆட்கள்
இவனைக் கொன்றனராம்!

கருணைக் கொலையை
காந்தியும் ஏற்றதாய்...
கொலையாளிகள்  இங்கு 
நியாயம் பேச...
பீறிட்ட கண்ணீரை
அடக்க முடியாமல்
அலறினேன் மனதுள்
அப்படியே மயங்கினேன்!

இறைவா எனக்கு
இரண்டு கைகளை
அடுத்த பிறவியிலாவது
அளித்திட  வேண்டும்!

கொலையாளி கழுத்தை
நெறித்திட அல்ல!
இருகரம் கூப்பி
அவர்களை வேண்ட!

-காதலையும் காதலரையும்
வாழவிடச் சொல்லி
வற்புறுத்திக் கேட்க!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com