கல்லறைப் பூவின் கண்ணீர்த் துளி: பொன்.இராம்

கழிவுநீரின் உபயத்தால்
 மொட்டாகி நாங்கள்
 கூட்டாக மலர்ந்தோம்!

 நன்னீரில் மலரவில்லை
 என நாங்கள் வருந்தவில்லை!
 இறைவனுக்காகவோ
 நாட்டின் நல்லவன் கழுத்திலோ
 ஆரமாகத் தொங்கவில்லையே
 என நாங்கள் வருந்தவில்லை!

 எடுத்து வர வாகன வசதிகூட
 இந்த மக்களின் பணப் பையில்
 இல்லை என்று தானே வருந்தினோம்!

 பஞ்சத்தால் வாடி இறந்த
 சாதி பார்க்காத
 இக்கல்லறைத் தோட்டத்தில்
 பஞ்சத்தால் சொட்டு நீருக்காக
 இறந்த சின்னஞ்சிறு சிறுமிக்காக
 நான் விடும் கண்ணீர்த்துளி
 இவள் வாயில் விழுந்தாலாவது
 கல்லறை மூடி திறந்து
தேவனவன் உயிர்ப்பித்துத் தருவானோ!

வான மகள் வாரிதியாய்
அமிர்தவர்ஷிணியாய் அளவுடனே
கொட்ட மாட்டாளோ!
மழை மகளே இறங்கி
நீயும் வருவாயோ!

இலஞ்சப் பாம்புகள் நிறைந்த
சமுதாயம் இக்கல்லறையில்
இடம் தேடி ஓடி வர
கண்ணீர்ப்பூவாய் இருந்த நானும்
மகிழ்ச்சிப்பூவாய் கொட்டி மகிழ
யார் வருவார் சட்டம் போட?         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com