விடுதலை: பாவலர் கோ. மலர்வண்ணன்

கூண்டுக்குள் அடைபட்டுக் குமுறு கின்ற
    கொஞ்சுபுறா, கிளியதனைப் பார்த்திட் டாலே
வேண்டுகின்ற விடுதலையின் தேவை நன்கு
    விளங்கிவிடும்! யாவருமே விருப்பம் போல
யாண்டுமீண்டு மாண்டுமெனச் செல்வ தற்கும்
    யாருடைய இசைவுபெறத் தேவை யில்லை!
தூண்டுகின்ற ஆவலினால் எழுத, பேசத்
    தொல்லைதரு தடையெதுவும் இருப்ப தில்லை!

அடிமைகளாய் வாழ்வதினால் பயன்தான் உண்டோ?
    ஆள்கிறவர் விருப்பம்போல் ஆள வைத்துக்
கொடுமைகளைப் புரிந்தாலும் தாங்கிக் கொண்டும்
    கொலையதனைச் செய்தாலும் பொறுத்துக் கொண்டும்
உடைமைகளை, உரிமைகளைப் பறிகொ டுத்தும்
    உயர்வெதுவும் இல்லாமல் முடங்கிக் கொண்டும்
மிடிமையதன் உருவமென வாழ்வ தாலே
    மேதினியில் பிறந்ததனின் பயனென் கண்டோம்?

உண்ணுதற்கு நல்லுணவும், மகிழ்ச்சி யோடே
    உடுத்துதற்கு நல்லுடையும், இருக்க வீடும்,
எண்ணுகிற எண்ணத்தை எழுத்தால், பேச்சால்
    எளிதாக வெளியிடவும், உரிமை யெல்லாம்
நண்ணுதற்குத் தடையெதுவும் குறுக்கி டாத
    நலவாழ்வும், விரும்புகிற கல்வி கற்று
விண்ணுயரத் திகழ்வதற்கும் வாய்ப்பு நல்கும்
    விடுதலையே யாவர்க்கும் தேவை யாகும்!

எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்!
    எவ்விடத்தும் சமவுரிமை துலங்க வேண்டும்!
கல்லாமை இருளகலக் கல்வி வேண்டும்!
    கடமைசெய வேலைவாய்ப்பு நாட்டில் வேண்டும்!
இல்லாத வளங்களெலாம் பெறுதல் வேண்டும்!
    என்றென்றும் குடியாட்சி நிலவ வேண்டும்!
பொல்லாத தீமையெலாம் அகலு தற்கும்
    பொன்போலும் விடுதலையே வேண்டும்! வேண்டும்!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com