வீரமங்கை: பாவலர் கோ. மலர்வண்ணன்

ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் தாமும்
    அறிவினிலும் ஆற்றலிலும் உயர்ந்தி ருக்க
வேண்டுமென நினைப்பவர்கள், எந்த நாளும்
    வீரமங்கை யராய்த்திகழ்வார்; வரலாற் றேட்டில்,
தூண்டுகின்ற உணர்ச்சியதன் உருவ மாகத்
    துலங்கிநின்று சான்றெனவே வாழ்ந்தி ருப்பார்!
யாண்டுமிந்த அதிசயத்தைக் காண லாகும்;
    எவருமிதைப் புரிந்திடலாம்; தடுப்பார் இல்லை!

சங்ககால இலக்கியங்கள், வீர மங்கை
    செயலதனை நன்றெனவே விதந்து ரைக்கும்!
அங்கெதிர்த்த புலியதனை முறத்தைக் கொண்டே
    அவள்விரட்டித் துரத்தியதை அறிவார் எல்லாம்!
தங்களது நாடுகாக்கக் கணவ னோடு
    தமயனையும் போர்க்கனுப்பி, அடுத்த நாளில்
செங்குருதி சிந்துகின்ற போர்க்க ளத்தில்
    சிறுமகனை இழந்தவளைப் படித்தோம் அன்றோ?
   
தன்னுடைய நாடுகாக்கக் கையில் வாளைத்
    தாங்கியவள், தன்மகனைத் தோள்சு மக்கப்
பன்னரிய வீரமுடன் போர்பு ரிந்தாள்
    பாவையந்த ஜான்சிராணி, வீர மங்கை!
என்றென்றும் வீரத்தில் குறைந்தி டாமல்
    எளிதெனவே வெள்ளையரை எதிர்த்து நின்ற
இன்றமிழாள் வேலுநாச்சி வீர மங்கை!
    இவர்போலும் கணக்கற்றோர் வாழ்ந்தார் இங்கே!

வீரத்தின் விளைநிலமாம் தமிழ கத்தில்
    வீங்குபுகழ் பெற்றிருந்த மகளிர் இன்று
காரத்தை இழந்தனரே? கண்ணீர் சிந்தும்
    காரிகையாய் விட்டனரே? எந்த நாளும்
நேரத்தைத் தொலைக்காட்சி பார்ப்ப தற்கே
    நேர்ந்தவராய் மாறினரே? விளைநி லங்கள்
நீரற்றுக் காய்ந்ததுபோல் நிலையில் தாழ்ந்து
    நீள்புகழை இழந்தனரே! அந்தோ! அந்தோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com