நிழல்  தேடி: பாவலர் கருமலைத்தமிழாழன்

நம்முடனே  இருக்கின்ற   நிழலைத்   தேடி
            நாமிங்கே   முட்டாளாய்   அலைதல்  போல
நம்முடனே   இருக்கின்ற   கைக  ளாலே
            நம்கண்ணீர்  துடைப்பதற்கு   முயன்றி  டாமல்
நம்முடைய  விழிநீரைத்   துடைப்ப  தற்கு
            நாம்அயலார்   கைகளினைத்   தேடு  கின்றோம்
நம்முள்ளே   இருக்கின்ற  வலிமை   தன்னை
            நாமுணர்ந்து   முயன்றாலே  துயரம்  மாயும் !

பிறர்கால்கள்   நம்முடலைத்   தாங்கி   டாது
            பிறருழைப்பு  நம்பசியைப்   போக்கி   டாது
திறமைகளோ   நமைத்தேடி  வந்தி   டாது
            திகழ்செல்வம்   தானாகக்   குவிந்தி  டாது
அறமல்லா   வழியெல்லாம்   இருளுக்   குள்ளே
            அகப்படுமா  எனநிழலைத்   தேடல்போன்றாம்
சிறப்பெல்லாம்   தளராமல்  உழைக்கும்   போதே
            சீராக   இக்குமுகம்   நமக்க   ளிக்கும் !

காடுகளை   மலைகளினைத்   தகர்த்து   விட்டும்
            கவின்தந்த   இயற்கையினை   அழித்து  விட்டும்
ஓடுகின்றோம்   கானலினை  நீராம்  என்றே
            ஒற்றிநாவின்   தாகத்தைத்   தீர்ப்ப   தற்கே
வீடுதனில்   சங்கத்து   இலக்கி  யங்கள்
            வீற்றிருக்க   அதனருமை   அறிந்தி   டாமல்
தேடுகின்றோம் நிழலைஉச்சி  வெயிலில்  மேலே
            தேவையின்று   நம்பிக்கை  நம்மின்  மீதே !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com