ஆறோடும் நீரோடும்: கோ. மன்றவாணன்

ஒவ்வொரு நூற்றாண்டும்
ஒருசில ஆறுகளைக்
காவு வாங்கிக்
கடந்து போகின்றது

இதே நூற்றாண்டில் ஓடிய
எங்களூர் ஓடையைக்
காணவில்லை
அது
எம்எல்ஏ வீட்டுக் கருவூலத்தில்
பணக்கட்டுகளாக மாறிப் 
பதுங்கிக் கிடக்கிறதாம்.

அன்று
நாகரிகங்கள் வளர்ந்ததெல்லாம்
நதிக்கரையில்தான்

இன்று
நாகரிக வளர்ச்சியில்
நதிகள் கரைந்துபோய்விட்டன

நம் தாத்தா இறந்தபோது
நதிக்கரையில் காரியம் செய்தோம்
நாம் இறக்கும் முன்னமே
நதிக்கே காரியம் செய்கிறோம்

தீர்த்தவாரிக்குச்
சாமிகளை வரவழைத்துத்
திருப்பி அனுப்புகிறார்கள் ஏமாற்றி

நதிநடந்த பாதையைத் தேடி
நாளை அகழ்வாராய்ச்சி
நடத்திக்
கான்கிரீட் குப்பைகளை
அள்ளலாம்

ஆறோடுவதையும்
நீரோடுவதையும் 
காணக் கரிகாலன் காலத்தை 
உயிர்ப்பித்துக்கொடு சாமி..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com