குழந்தையின் குரல்: ​  ​கவிஞர் " இளவல் " ஹரிஹரன்

பிறந்தவுடன் குழந்தையழும் குரலைக் கேட்டால்
     பெருமானந் தக்கண்ணீர் வரும்தாய்க் குத் தான்
நிறைந்தசுமை யானபத்து மாதந் தன்னை
     நினைவுவைத்துச் சுகங்காண்பாள் சுமப்பாள் நெஞ்சில்
புறந்தந்த கருக்கடவுள்  குழந்தை யிங்கு
    பசிவந்தால் பால்கேட்க தாயைப் பார்த்து
குரல்கொடுத்த ழுதுகாட்டத் தாயு ணர்ந்து
    கொடுத்திடுவாள் பாலமுதம் குறைவே யின்றி.

கருவினிலே திருவுடைய சம்பந் தர்க்கு
     காத்திருந்த வேளையிலே பசியெ டுக்க
திருக்கோயில் கோபுரத்தில் அமர்ந்தி ருந்த
     சிவபார்வதியம்மையினைப் பார்த்து தன்னால்
பெருங்குரலில் பாலுக்கே அழுத வண்ணம்
      பிள்ளையவன் இருப்பதனைக் கண்டு நெஞ்சத்
தருள்கொண்டு உமையம்மை ஞானப் பாலை
     அமுதூட்டிச் சிவத்திற்கே தொண்டு செய்தாள்.

குழந்தையதன் குரலிங்குச சமிக்ஞை யாகும்
      கூப்பிடவும் சாப்பிடவும் அடம்பி டிக்கும்
அழகுகாட்டிப் பழிப்பதற்கும் பொம்மை கேட்டும்
     அழுவதாகப் பாவனைகள் செய்வதற்கும்
தொழுவதற்கும் விளையாட அழைப்பதற்கும்
      தொடர்ந்துவரும் குரலெல்லாம் ஒவ்வொன் றான
அழகான அடையாளம் ஆகு மன்றோ
       அற்புதங்கள் குழந்தைகுரல் காட்டு மன்றோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com